Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பேசும் தெய்வம் (16)

பேசும் தெய்வம் (16)

பேசும் தெய்வம் (16)

பேசும் தெய்வம் (16)

ADDED : மே 16, 2018 03:16 PM


Google News
Latest Tamil News
''காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்'' என்ற எண்ணம் கொண்டவர்கள் என்றும் உண்டு. அதே சமயம்,''கோடி பணம் கொடுத்தாலும் சரி! நல்வழியில் இருந்து விலக மாட்டேன்'' என்று வாழும் உத்தமர்களும் உண்டு. இந்த இரண்டும் மோதிய வரலாறு தான் இது.

மதுரையில் மாணிக்கவல்லி என்னும் பெண் இருந்தாள். ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறிப்பது அவள் தொழில். இருள் மயமான வாழ்வு கொண்ட அவளுக்கு, அருள் மயமான ஞானம், கோதை என்னும் இரண்டு மகள் இருந்தனர்.

அழகே உருவான அவர்கள், கல்வி, கலைகளில் கரை கண்டவர்களாக இருந்தனர். கறை கண்டரான சிவனிடம் எல்லையற்ற பக்தி கொண்டவராக விளங்கினர். மகள்களின் பக்தி கண்ட மாணிக்கவல்லிக்கு, மனம் கேட்கவில்லை.

''இவளுக மனச எப்படியாவது என் பக்கம் திருப்பணும்'' என்று எண்ணிய அவள், தன்னால் ஆனதை எல்லாம் முயற்சித்தும் பலனில்லை.

ஞானம், கோதையும் தினமும் சிவன் கோயிலுக்கு சென்றதோடு அவன் நாமத்தையே ஜபித்து வந்தனர். அடியார்களின் அருள் உபதேசங்களை தவறாமல் பின்பற்றினர். அழகு ராணிகளான அவர்களிடம் பக்தர் ஒருவர், '' நக்கீரர் பாடிய 'கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி' என்னும் இந்த பாடலை தினமும் படியுங்கள். காளத்தியப்பர் அருளால் எல்லாம் நலமாகும் '' என்றார். அன்று முதல் ஞானமும், கோதையும் பாராயணம் செய்தனர்.

விளைவு? மகள்களின் மனஉறுதி கண்ட தாயும் திருந்தினாள்.

ஒரு நாள்... தெருவில் காளத்திநாதரின் புகழ் பாடும் கீதம் கேட்டது. ஞானமும் கோதையும் வந்து பார்க்க, சாதுக்கள் இருவர் பாடக் கண்டனர். அவர்களுக்கு உணவு அளித்ததோடு, ''சிவனடியார்களாக காட்சியளிக்கும் தங்களின் ஊர் எது? எங்கு செல்கிறீர்கள்?'' எனக் கேட்டனர்.

'' யாத்திரை செல்லும் நாங்கள், காளத்திநாதரை தரிசிக்கச் செல்கிறோம்'' என்று பதிலளித்தனர்.

அதைக் கேட்ட பெண்கள், ''சிவனை தரிசிக்கச் செல்லும் நீங்களே புண்ணியசாலிகள். எங்களையும் அழைத்துச் சென்றால், உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்'' என்றனர்.

''பெண்களே... நாங்கள் செல்லும் வழியெல்லாம் கல்லும் முள்ளுமாக இருக்கும். இளம்பெண்களான நீங்கள் எங்களுடன் வந்தால், உலகம் பழிக்கும்'' என மறுத்தனர் சாதுக்கள்.

''சுவாமி! அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். வழிநடை துன்பம் எங்களைப் பாதிக்காது. ஊரார் பழியை பொருட்படுத்த வேண்டாம். அழைத்துச் செல்லுங்கள்'' என வேண்டினர்.

இருவரையும் சாதுர்யமாக சம்மதிக்க வைத்ததை எண்ணி மகிழ்ந்தபடியே சாதுக்கள், ''சரி! சரி! இன்று நள்ளிரவு ஊர் எல்லையிலுள்ள ஆலமரத்தடிக்கு வாருங்கள். வழிச்செலவுக்குப் பணமும் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றனர்.

அதன்படியே ஞானமும் கோதையும் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டனர். இரு பணிப்பெண்களை உடன் அழைத்துக் கொண்டு ஆலமரத்தடியை அடைந்தனர். விஷயம் ஏதும் அறியாத மாணிக்கவல்லி துாக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

மரத்தடியில் காத்திருந்த சாதுக்கள் பெண்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், உடன் வந்த பணிப்பெண்களைக் கண்டு அவர்களின் முகம் ஒரு மாதிரியாக ஆனது.

''இந்த பணிப்பெண்களை ஏன் கூட்டி வந்தீர்கள்?'' எனக் கேட்டனர்.

''பெண்களான எங்களுக்கு இவர்களின் உதவி தேவைப்படுகிறதே சுவாமி'' எனப் பதிலளித்தனர்.

''சரி....போகலாம் வாருங்கள்'' என்று சாதுக்கள் கிளம்ப, அன்று என்னவோ வழி நெடுக அடியார்கள் போய்க் கொண்டிருந்தனர்.

''என்ன இது? இந்த இரவிலும், ஏராளமான அடியார்கள் போகிறார்களே'' எனக் கேட்டனர் பெண்கள்.

''என்ன செய்ய? உலகம் ஒரு பைத்தியக் கூடாரம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பைத்தியம். இதுகளோ பக்திப்பைத்தியம்' என்றார் ஒரு சாது.

கும்பகோணம், சிதம்பரம்,காஞ்சிபுரம் எனப் பல தலங்களை தரிசித்தபடி அவர்கள் போக, வழியெங்கும் அடியார் கூட்டம் வந்து கொண்டேயிருந்தது.

காளத்திமலையை அடைந்ததும் அடியார் கூட்டம் காணாமல் போனது. இது தான் தருணம் என கருதிய சாது உரத்த குரலில்,''நில் அப்படியே'' என்று சொல்ல பெண்கள் நால்வரும் நடுங்கினர்.

சாதுக்களோ குரூர முகத்துடன், ஆடைக்குள் மறைத்திருந்த கத்தியை எடுத்து பயமுறுத்தினர்.

''சீக்கிரம்... ஆபரணங்களைக் கழற்றுங்கள்'' என்று கத்தினான் ஒருவன். அப்பெண்களைப்பற்றித் நன்கறிந்த அவர்கள், மதுரையில் இருந்தே திட்டம் தீட்டி வந்திருப்பதை அறிந்த ஞானமும் கோதையும் 'கலகல' என வாய்விட்டுச் சிரித்தனர்.

''இப்படி அடியவர் வடிவில் அநியாயம் செய்யத் துணிந்தீர்களே! கேட்டிருந்தால் என் வீட்டிலேயே, கொடுத்திருப்பேனே!'' என்று நகைகளைக் கழற்றியபடி அந்தாதி பாடலைப் பாடினர்.

அந்த நேரத்தில், ''யார்ரா அங்க?'' என்று கம்பீரமாக ஒலித்தது ஆண் குரல். அதைக் கேட்டதும் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

பெண்கள் அவருக்கு நன்றி கூறினர். ''ஐயா... நீங்கள் எந்த ஊர்?'' எனக் கேட்டனர்.

''காளத்தி மலையில் வாழ்பவன்'' என்ற அவர், கூடவே பாதுகாப்பாக உடன் வந்தார்.

சற்று துாரம் வந்ததும், ''அம்மா! அதோ தெரிகிறதே காளத்தி மலை'' என்று சொல்லி மறைந்தார்.

''ஆகா! சிவனே துணையாக வந்தும் உணராமல் போனோமே!'' என்ற ஞானமும் கோதையும் காளத்தியப்பரைத் தரிசித்து வழிபட்ட போது, காளத்திநாதருடன் இரண்டற கலந்தனர். பணிப்பெண்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

''ஞானம், கோதையின் பெயரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்''என அசரீரி ஒலித்தது.

கன்னிலிங்கம் என்னும் பெயரில் அவர்களை இன்றும் காளஹஸ்தியில் தரிசிக்கலாம்.

- தொடரும்

அலைபேசி: 97109 09069

பி.என். பரசுராமன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us