Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பேசும் தெய்வம்! (11)

பேசும் தெய்வம்! (11)

பேசும் தெய்வம்! (11)

பேசும் தெய்வம்! (11)

ADDED : ஏப் 13, 2018 11:29 AM


Google News
Latest Tamil News
வேதத்தில் கரை கண்ட பக்தர் ஒருவருக்கு கிருஷ்ணனே தலையசைத்து ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றால், கேட்கவா வேண்டும்.... அவர் தான் கேரளாவிலுள்ள 'திருநாவை' எனும் புண்ணிய தலத்தில் வாழ்ந்த வில்வமங்களசுவாமி, அதிகாலையில் எழுந்து அங்கு ஓடும் இளா நதியில் நீராடுவார். அதன் பின் அங்கு அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறும்.

ஆற்றங்கரையில் கிருஷ்ணர் சிலைக்கு அலங்காரம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்வார். அப்போது அவர் பாடும் பாடலுக்கு, சிலை வடிவிலுள்ள கிருஷ்ணர் தலையசைத்து ஒப்புதல் தெரிவிப்பார். தலையசைக்கா விட்டால், அந்த பாடலைகளை வில்வமங்கள சுவாமி கணக்கில் சேர்க்க மாட்டார்.

இப்படி கிருஷ்ணரிடம் ஒப்புதல் பெற்ற பாடல்களின் தொகுப்பே புகழ் மிக்க 'ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம்'.

குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட வில்வமங்களசுவாமி, பலமுறை கிருஷ்ணனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.

வில்வமங்களசுவாமி புகழ் ஊரெங்கும் பரவியது. குரூரம்மை என்னும் உத்தம பக்தையும் அவர் பற்றி கேள்விப்பட்டாள்.

குரூரம்மையின் வீட்டுக்கு பகவான் கிருஷ்ணனே குழந்தையாக வந்து, அவருடன் வாழ்ந்து வந்தான். ஒரு தாயாக குரூரம்மை, கிருஷ்ணனை மிரட்டுவது, அதட்டுவது, அவன் முகம் வாடினால் அழாதடா! அழாதடா!' என சமாதானம் செய்வது, என கிருஷ்ணலீலைகள் குரூரம்மையின் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

கிருஷ்ணரிடம் தன்னையே கரைத்துக் கொண்ட குரூரம்மை தினமும் அடியார்களுக்கு அன்னமிடும் தொண்டும் செய்தார். இந்நிலையில், வில்வமங்களசுவாமி பற்றிக் கேள்விப்பட்ட குரூரம்மை, வீட்டிற்கு அழைத்து பாதபூஜை செய்து பிட்சை இட விரும்பினார்.

நல்லெண்ணம் மனதில் தோன்றியதும், அதை செயல்படுத்துவது பெரியோர் இயல்பு. ஒரு ஆள் மூலம் மறுநாளே பிட்சைக்கு வரும்படி வில்வமங்களசுவாமிக்கு தகவல் தெரிவித்தார்.

வில்வமங்களசுவாமிக்கு இதில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் ஒரு வழியாக சம்மதிக்க, மகிழ்ச்சியில் குதித்தார் குரூரம்மை.

ஆனால்,கிருஷ்ணரைப் பற்றிய ஒருமுகச் சிந்தனையால் வாக்களித்ததை மறந்தார் வில்வ மங்களசுவாமி. மறுநாள் பொழுது புலர்ந்ததும், குரூரம்மையின் வீட்டிற்கு செல்லாமல் கால் போன போக்கில் நடந்தார்.

வழியில் ஒரு வீட்டில் பிட்சை ஏற்றார். ஆனால், குரூரம்மையின் வீட்டில், வில்வமங்களசுவாமியின் வருகைக்கான ஏற்பாடு நடந்தது. பூஜைக்கும், பிட்சைக்கும் வேண்டிய பொருட்களை கிருஷ்ணனே சேகரித்தான். வில்வமங்களசுவாமியை எதிர்பார்த்து குரூரம்மை வாசலில் காத்திருந்தார்.

ஊஹூம்..... இரவு தான் வந்ததே தவிர, வில்வமங்களசுவாமி வரவே இல்லை.

கண்ணன் அருகில் இருந்தும், குரூரம்மையின் மனம் வருந்தியது.

பக்தியை தவிர, வேறு சிந்தனை இல்லாத வில்வமங்களசுவாமி கிடைத்த பிட்சையை ஏற்றுக் கொண்டு, வீடு திரும்பினார்.

குரூரம்மைக்கு கொடுத்த வாக்கை முற்றிலும் அவர் மறந்திருந்தார்.

மறுநாள்...அதிகாலையில் வில்வமங்களசுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரிடமிருந்த கிருஷ்ணர் சிலை மாயமாகி இருந்தது. ''கிருஷ்ணா.. கிருஷ்ணா'' என்று கத்தியபடி நாலாபுறமும் ஓடினார்.

அப்போது அசரீரியாக,''ஹே!உத்தம பக்தனே! ஈடு இணையில்லாத பக்தன் நீ! அதில் சந்தேகமே இல்லை.ஆனால் உன்னை போன்ற பக்தையான குரூரம்மையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் என்னை துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாய். இதை பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை சமாதானப்படுத்தினால் மட்டுமே, மறுபடியும் என்னை தரிசிக்க முடியும். ஏழெட்டு பிறவிகளாக குரூரம்மை என் பக்தையாக விளங்குகிறார். நீயோ மூன்று பிறவிகளாக என்னை வழிபட்டு வருகிறாய். இப்போதே குரூரம்மையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடு!' என்றார் கிருஷ்ணர்.

விஷயம் அறிந்த வில்வமங்களசுவாமி குரூரம்மையின் வீட்டுக்கு ஓடினார். தவறை மன்னிக்கும்படி வேண்டினார். குரூரம்மையின் மனம் சமாதானம் அடைந்தபின், வீடு திரும்பினார்.

வில்வமங்களசுவாமியின் வருகையை எதிர்பார்த்து, கிருஷ்ணர் சிலை வடிவில் காத்திருந்தார். மீண்டும் பக்திப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார்.

என்ன தான் பக்தியில் கரை கண்டாலும், தெய்வத்துடன் பேசும் பாக்கியம் பெற்றாலும் தன்னைப் போன்ற அடியாரின் மனம் நோகச் செய்தால் தெய்வம் ஒருபோதும் பொறுப்பதில்லை.

தொடரும்

அலைபேசி: 97109 09069

- பி.என். பரசுராமன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us