Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தம்பிக்கு தங்கமனசு

தம்பிக்கு தங்கமனசு

தம்பிக்கு தங்கமனசு

தம்பிக்கு தங்கமனசு

ADDED : ஜூன் 08, 2018 04:02 PM


Google News
Latest Tamil News
அப்பாவி இளைஞனான நல்லதம்பி யார் எது சொன்னாலும் நம்பி விடுவான்.

ஒருநாள், குளக்கரையில் அவன் ஆடு மேய்த்த போது, பெரியவர் ஒருவர் வந்தார். குளத்தில் நீராடிய பின், வெளியே வந்து மூக்கை பிடித்துக் கொண்டு சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்து விட்டு புறப்பட்டார்.

இதைக் கவனித்த நல்லதம்பி ''ஐயா...'' என்று ஓடினான்.

''என்னப்பா...''

''இப்போது என்ன செய்தீர்கள்?”

''கடவுளை தரிசித்துக் கொண்டிருந்தேன்...”

''நிஜமாகவா?''

''ஆமாம் தம்பி'' என்று சொல்லி விட்டு நடந்தார்.

அவர் சென்றதும், தீவிரமாக யோசித்த நல்ல தம்பி, படபடவென குளத்தில் இறங்கி குளித்தான். பின், வெளியே வந்து மூக்கை பிடித்து கண் மூடி உட்கார்ந்தான். கடவுள் தெரியவில்லை.

கண்ணை சரியாக மூடவில்லையோ என்று அழுத்தி மூடினான். அப்போதும் தெரியவில்லை.

கடவுளை பார்க்கும் வரை மூச்சை விடக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தான். மூச்சு திணறியது.

''பக்தா...'' என்றொரு குரல் கேட்டது.

கண் திறந்த அவன், ''நீ...நீ... நீங்கள் தான் கடவுளா...”

''ஆம் பக்தா''

''அந்தப் பெரியவருக்கும் நீங்கள் தான் காட்சி கொடுத்தீரா?''

''இல்லை... அவர் பொய் சொன்னார்''

''சுவாமி விளையாடாதீர்கள். உங்களை பார்த்ததாக சொன்னாரே...?'' என்றபடியே, ஒரு கயிறை கையில் எடுத்தான்.

கடவுளை இழுத்து பிடித்து மரத்தில் கட்டினான்.

கடவுளும் சிரித்துக் கொண்டே, ''என்னப்பா செய்கிறாய்?''

''நான் போய் அந்த பெரியவரை அழைத்து வருகிறேன்... அதுவரை காத்திருங்கள்.'' என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தான்.

சென்று கொண்டிருந்த பெரியவரின் முன்னால் மூச்சிரைக்க நின்றான்.

''என்னப்பா... என்னாச்சு...?''

''ஐயா நீங்கள் உடனே என்னோடு வாருங்கள்''

''எதற்கப்பா...''

''நான் கடவுளை பார்த்து விட்டேன். ஆனால் அவர் உங்களுக்கு காட்சி தரவில்லை என்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது.''

பெரியவர் திருதிருவென விழித்தார். 'இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது' என நினைத்து வர மறுத்தார்.

அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தான்.

மரத்தைக் காட்டி,'இவர் தானே நீங்கள் பார்த்த கடவுள்...?'' என்றான்.

''என்னப்பா பிதற்றுகிறாய்... யாரும் தெரியவில்லையே?''

''அதெப்படி, உங்கள் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை'' என்றான்.

பையனுக்கு முற்றிவிட்டது என்று நினைத்த பெரியவர்,'' ஆமாம் தம்பி இவர் தான் நான் பார்த்த கடவுள்'' என்று வெறுமனே கை குவித்து வணங்கினார்.

''ஐயா... நீங்களே என் குருநாதர்''என்று சொல்லி காலில் விழுந்தான். அவரும் தலையசைத்து விட்டு நகர்ந்தார்.

இதையெல்லாம் பார்த்த கடவுள் சிரித்தார்.

'' ஏன் சிரிக்கிறீர்கள்...?''

''இப்போதும் அவர் என்னை பார்க்கவில்லை. உன்னிடம் பொய் சொல்லி விட்டு புறப்பட்டார்'' என்றார் கடவுள்.

ஆனால் அவன் அப்போதும், ''பரவாயில்லை சுவாமி. என்ன தான் பொய் சொன்னாலும். அவரால் தானே உங்களை பார்க்கும் வாய்ப்பு பெற்றேன்.''

அதை கேட்டு மகிழ்ந்த கடவுள், ''உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்...'' என்றார்

''என்னைப் போலவே, என் குருநாதருக்கும் நீங்கள் காட்சியளிக்க வேண்டும்''என்றான்.

''ஆகட்டும்! நல்லதம்பி என்னும் பெயருக்கு ஏற்ப தங்கமனம் கொண்ட நீ, இப்பிறவியில் செல்வந்தனாக வாழ்ந்து அழியாப் புகழ் பெறுவாய்'' என்று வரம் அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us