Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லடி அபிராமி (21) - கற்சிலையாய் ஆன மன்னன்

சொல்லடி அபிராமி (21) - கற்சிலையாய் ஆன மன்னன்

சொல்லடி அபிராமி (21) - கற்சிலையாய் ஆன மன்னன்

சொல்லடி அபிராமி (21) - கற்சிலையாய் ஆன மன்னன்

ADDED : செப் 30, 2016 12:13 PM


Google News
Latest Tamil News
அடுத்து 26வது பாடலான,

ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங் கடம்பு

சாத்தும் குழல் அணங்கே மணம்நாறும் நின்தாளிணைக்கு என்

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே!”

என்று பாடிய பட்டர், அதற்கு, “நறுமணம் கமழும் கடம்ப மலரை சூடும் கூந்தலை உடைய அம்பிகையே! உலகங்களைப் படைத்து, காத்து, அழிப்பவளே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் வழிபடுவது உனது நறுமணம் கமழும் திருவடிகளைத் தான். அப்பேர்ப்பட்ட பெருமை உடைய உனது பாதங்களில், எனது சற்றும் சுவையில்லாத இந்தச் சொற்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது நகைப்புக்குரியதல்லவா?” என்று விளக்கமளித்து விட்டு, ஓர் உண்மைச் சம்பவத்தை உரைத்தார்.

தமிழகத்தின் வடக்கே ஓர் புகழ்பெற்ற அம்மன் கோவில் இருந்தது. அதனை எடுப்பித்தவன் சசிவர்மன் என்ற மாமன்னன். பக்தியில் நாட்டம் இருந்தாலும், அகந்தையும் நிறையவே இருந்தது. போர்க்கலையில் வல்லவனாயிருந்த காரணத்தால் அவனுக்கு மண்ணாசையும் மேலோங்கி இருந்தது. எந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் புறப்பட்டாலும், அம்பிகை ஆலயத்திற்குச் சென்று வழிபட்ட பிறகே புறப்படுவான். காலப்போக்கில் போரில் அதிக ஆர்வம் கொண்டு, கோவிலுக்குப் போவதை விட்டு விட்டான்.

பல நாடுகள் அவன் வீரத்தின் முன் அடி பணிந்தன. இதனால் அகந்தையின் அளவு அதிகமானது. ஆனால் அது நீடிக்கவில்லை. உடனிருந்த சிலர் அவனுக்கே குழி பறித்ததால் அதுவரை வெற்றிகளை மட்டுமே கண்டிருந்த சசிவர்மனுக்கு தோல்விகள் ஏற்படத் தொடங்கின. நிலை குலைந்து வேதனையில் ஆழ்ந்த சசிவர்மனுக்கு திடீரென்று ஞானம் பிறந்தது. 'அகந்தையால் மதியிழந்து ஆலயம் சென்று அம்பிகையைத் தொழவும் மறந்தேனே! அதனால்தான் இச்சோதனையோ?' என்று சிந்தித்தவன், உடனே அமைச்சரை அழைத்து தரிசனத்துக்கு தான் செல்ல ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.

அமைச்சர் தயங்கினார். “மன்னா! தரிசனத்துக்கு நாளை செல்லலாமே” என்றார்.

மன்னன் கோபத்துடன், “நான் சொல்வதை உடனே செய்யும். அபசகுனமாக எதையும் கூறி என்னைத் தடுக்காதீர்,” என்று கர்ஜித்தான்.

அமைச்சர் பொறுமையுடன், “மன்னர் மன்னா! இப்போது அந்தி சாயும் வேளை. அர்த்தஜாம பூஜைகள் முடிவுற்று நடை சாத்தப்படும் நேரம். எனவேதான்...”

மன்னன் எதையும் ஏற்கும் நிலையில் இல்லை. மிகவிரைவில் தரிசனத்துக்கு புறப்பட்டுச் சென்றான். வழியில் கோவிலைப் பூட்டிவிட்டு அர்ச்சகர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மன்னரைக் கண்டதும் அச்சத்துடன் நமஸ்காரம் செய்து, மன்னர் வந்த காரணத்தைக் கேட்டார்.

“குருக்களே! நான் அம்பிகையை உடனே தரிசனம் காணவேண்டும். சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யும்” என்று சசிவர்மன் ஆணையிட, தலைமை குருக்கள், “மாமன்னா! அர்த்தஜாம பூஜைகள் சிறப்புற செய்வித்து ஆலயத்தின் நடைசாத்தி வந்து விட்டோம். இனி தரிசனம் காலையில்தான் செய்ய முடியும்” என்றார் உறுதியுடன்.

மன்னனுக்கு பெரும் கோபம் ஏற்பட்டது.

“என்ன? ஆலயம் கட்டியவன் நான். குட நன்னீராட்டுச் செய்தவன் நான். ஆறுகாலமும் அம்பிகைக்கு ஆராதனை செய்ய வழி வகுத்திருப்பவன் நான். நாட்டை ஆளும் அரசன். நானே நினைத்த நேரத்தில் அம்பிகையை தரிசிக்க முடியாதா? என்ன இது? என்னை அவமானம் செய்கிறீரா?” என்றான்.

குருக்கள் பணிவுடன், “நடை சாத்திய பிறகு திறக்கக்கூடாதே...அதனால் தான்...” என்று இழுக்கவும், மன்னன் சினங்கொண்டு, “அடேய் அற்பனே! என் படைமுன் அந்த நடை எம்மாத்திரம்? நீ வழிவிடவில்லையெனில் கதவை உடைத்து ஆலயம் புகுவேன்,” என்று ஆவேசப்படவே, குருக்கள் நடுங்கிப் போனார்.

குருக்களுடன் வந்த பஞ்சாங்கம் வாசிக்கும் ஜோதிடர் ஒருவர் சற்றுத் துணிவுடன், “மன்னா! நடை அடைத்திருக்கும் போது அம்பிகை முன் முப்பது முக்கோடி தேவர்களும் வந்து பூஜை செய்வார்கள். அப்போது மானுட பூஜை சாத்தியமில்லை” என்று விளக்கினார்.

“அடே பழைய பஞ்சாங்கமே! உன் உளறலுக்கு அளவில்லையா? தேவர்களாவது, பூஜை செய்வதாவது?” என்று ஏளனம் செய்த சசிவர்மன் தன் படைகளுடன் ஆலய வாசலை நெருங்கினான். கைகள் நடுங்க, உடல் பதற தலைமை குருக்கள் அந்த இரவுப் பொழுதில் ஆலயத்தின் கதவுகளைத் திறந்தார்.

மன்னன் இறுமாப்புடன் உள்ளே பிரவேசித்தான். கருவறை திறக்கப்பட்டது. அங்கே அவன் கண்ட காட்சி...

ஆம்! அதிசயமான காட்சி. அங்கே நான்முகனும், நாராயணனும், சிவனும் ஆகிய மூவரும் அன்னையின் திருவடிகளில் மலர்களால் அர்ச்சனை செய்து

கொண்டிருந்தார்கள். கருவறை முழுவதும் ஜோதிப் பிழம்பாய் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று தேவ வாத்தியங்கள் முழங்கின. நான்முகன்

ஆரத்தி செய்தார். எங்கும் பேரொளி பரவியது.

அடுத்தகணம் ஆலயத்துள் பிரவேசித்த சசிவர்மன் கல்லாய் சமைந்துபோனான். உடன்வந்த எல்லாரும் மயக்கமடைந்தனர். அரசனேயாயினும் ஆணவம் அழிவிற்கே வழிசெய்யும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. அது மட்டுமல்ல! அன்னையின் திருவடிகளை தேவர்களும், பிரம்மாதி மூர்த்திகளும் துதிக்கின்றனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது,” என்று பரவசத்துடன் முடித்தார் பட்டர்.

“உண்மை உண்மை!!என்று சரபோஜி மகாராஜா அபிராம பட்டரை வணங்கினார்.

அடுத்து 27 வது பாடலான,

“பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்

அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே” என்று பாடிய பட்டர் விளக்கத்தை தொடர்ந்தார்.

“தாமரை போன்ற திருமார்புடைய அம்பிகையே! நீயே பொருளாய் விரிந்து இருக்கிறாய். அப்பொருளை நுகர்வோருக்கு போகமாக விளங்குகிறாய். யோகத்தில்

ஆட்படுவோருக்கு மாயை எனும் அஞ்ஞானம் தந்து அல்லல்பட வைக்கின்றாய். அஞ்ஞானத்தை போக்கும் ஒளியாகவும் இருக்கிறாய். இவ்வாறு பற்பல வடிவம் தாங்கும் நீதான், என் மனதில் அறியாமையாகிய மாயையை நீக்கி பிரகாசமான அத்வைத ஞான ஒளியை ஏற்றியிருக்கிறாய். பேரொளியாய் விளங்கும் அபிராமி அம்பிகையே! உன் அருள்தான் ஏதென்று விளங்காமல் மயங்கி நிற்கின்றேன் தாயே!” என்று சொன்னதும், “இந்தப் பொருள் புரிந்து கொள்வதற்கு சிரமமாக உள்ளது. இதை எளிமையாகச் சொல்லுங்களேன்,” என்றார் சரபோஜி மன்னர்.

இதற்கு பட்டர், “தெய்வம் ஒன்று என்பதே உண்மை. அதை கற்றறிந்தோர், 'ஏகம் ஸத்! பஹுதா வதத்தி' என்று வடமொழியில் சொல்வர். அம்பிகையை லலிதா சஹஸ்ரநாமம் 'மஹாமாயாயை நம' என்று வணங்குகிறது. ஒன்றாய்த் திகழும் பரப்பிரம்மம், பலவாய்த் தோன்றுவது மாயை. எது உண்மையில்

இல்லையோ அதுவே மாயை. அந்த மாயையைத் தோற்றுவிக்கும் சக்தியாகத் திகழ்பவள் அன்னை ஆதிபராசக்தியே ஆவாள். அதனின்று நம்மை மீட்கும் அருள் ஞான சக்தியும் அவள்தான்!” என்று சொல்லவும், ஒரு இளம்பெண் எழுந்து, “உலகம் மாயை என்கிறீர்கள், அப்படி என்றால் நான், என் கணவர், தவழும் என் குழந்தை, பெற்றோர், உடன்பிறந்தோர் எல்லோரையும் விட்டுவிட வேண்டும் என்கிறீர்களா?” என்றாள்.

புன்னகைத்த பட்டர், “அது அவ்வாறு புரிந்துகொள்ளத்தக்கதன்று தாயே” என்று கூறி அருமையான விளக்கத்தைத் தொடர்ந்தார்.

- இன்னும் வருவாள்

முனைவர் ஜெகநாத சுவாமி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us