Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மோட்சம் கிடைப்பது உறுதி!

மோட்சம் கிடைப்பது உறுதி!

மோட்சம் கிடைப்பது உறுதி!

மோட்சம் கிடைப்பது உறுதி!

ADDED : மார் 09, 2023 11:33 AM


Google News
Latest Tamil News
மார்ச் 3, 2023 - குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்

மலை நாடு என்பது சேர நாடு. இந்நாட்டை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். இங்கு நீண்ட மலைகளும், காடுகளும் அழகாக காட்சி தரும். அருவிகளும், நீர் பாயும் வயல்களும் சூழ்ந்த 'வஞ்சிக்களம்' என்ற பகுதியை ஆட்சி செய்தவர்தான் திடவிரதன். இவர் செய்த தவத்தின் பயனாக மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் ஒரு குழந்தை பிறந்தது.

குலம் செழிக்க பிறந்த செம்மல் என்பதால் குழந்தைக்கு 'குலசேகரன்' என்று பெயர் சூட்டினர். பின்னாளில் இவரே குலசேகர ஆழ்வாராக மாறினார். இவர் பாடிய பாசுரங்கள் 'பெருமாள் திருமொழி' ஆகும். இதில் 'நவவித சம்பந்தம்' எனப்படும் பாசுரங்கள் உண்டு. இதில் ஒன்பது உவமைகளைக் கொண்டு கடவுளை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார் குலசேகராழ்வார்.

1. தாய் - சேய்: ஒரு தாய் தன் குழந்தையை வெறுத்து ஒதுக்கினாலும் அது தாயின் அன்பை தேடிச் செல்லும். அதுபோல் பெருமாளின் அன்பை தேடி நாமும் செல்ல வேண்டும்.

2. கணவன் - மனைவி கணவன் தன் மனைவியை பொது இடங்களில் அலட்சியமாக நடத்தினாலும், அதை எல்லாம் மறந்து கணவனின் அன்பை தேடிச் செல்வாள். அதுபோல் பெருமாள் உங்களது வேண்டுதலை நிறைவேற்றாவிட்டாலும், அதை மறந்து அவரது அடைக்கலத்தை நாட வேண்டும்.

3. அரசன் - குடிமகன்: அரசர், குடிமகனின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டாலும், அவர் மீது நம்பிக்கை கொண்டு காத்திருப்பான். அதுபோல் பெருமாள் உங்களின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்காமல் இருந்தாலும், அவருடைய அருளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும்.

4. மருத்துவர் - நோயாளி: நோய் தீர உடலில் கூர்மையான வாளால் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தாலும், அவர் மீது நம்பிக்கையோடு இருப்பான் நோயாளி. அதுபோல் எவ்வளவு துன்பம் வந்தாலும், பெருமாள் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

5. பாய்மரக்கப்பல் - பறவை: நடுக்கடலில் செல்லும் கப்பலில் உள்ள பறவை எங்கு தனியாக சென்று பறந்தாலும் கரை தெரியாது. கப்பலே கரைக்கு சென்றால்தான் உண்டு. அதுபோல் எங்கு சென்றாலும் பெருமாளின் பாதங்களில் சரண்புகுந்தால் மட்டுமே மோட்சம் கிடைக்கும்.

6. சூரியன் - தாமரை: தாமரை மலரானது சூரியனை பார்த்தால் மட்டுமே மலரும். அதற்கு அருகில் என்னதான் வெப்பத்தை தரும் பொருளை வைத்தாலும் மலராது. அதுபோல் பெருமாளின் உயர்ந்த குணங்களில் மட்டுமே நமது மனம் கரைய வேண்டும்.

7. மேகம் - பயிர்கள்: மழையே இல்லை. பயிர்கள் என்ன செய்யும்? மழையை எதிர்நோக்கி மேகத்தை பார்த்துக் கொண்டிருக்கும். அதுபோல் துன்பத்தில் இருந்தாலும், என்றாவது ஒருநாள் அதை தீர்ப்பார் என்ற நம்பிக்கையோடு பெருமாளை வணங்க வேண்டும்.

8. கடல் - நதிகள்: கரை புரண்டு ஓடுகின்ற நதியானது, பல இடங்களில் ஓடி,

கடைசியில் கடலில் சென்று சேரும். அதுபோல் நாமும் பெருமாளின் திவ்யகுண நலன்களில் மூழ்கி இருக்க வேண்டும். வேறு எதிலும் கவனத்தை திருப்பக்கூடாது.

9. பெருமாள் - ஆழ்வார் உலகத்தில் உள்ள செல்வங்களை விரும்பாமல் பெருமாளையே விரும்பினால், இதைவிட பெரிய செல்வம் கிடைக்கும். அதுதான் மோட்சம். இது கிடைத்துவிட்டால் வேறு ஒன்றுமே தேவைப்படாது அல்லவா!

இப்படி குலசேகர ஆழ்வார் கூறியதைப்போல் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால் மோட்சம் கிடைப்பது உறுதி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us