Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனக்குறை தீர்த்த மஹான்

மனக்குறை தீர்த்த மஹான்

மனக்குறை தீர்த்த மஹான்

மனக்குறை தீர்த்த மஹான்

ADDED : ஏப் 06, 2023 12:10 PM


Google News
Latest Tamil News
1966ல் காளஹஸ்தியில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். இன்ஜினியர் முத்துசாமி என்பவருக்கு மடத்தில் இருந்து அழைப்பு வர, அன்றிரவே காளஹஸ்தியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசித்தார். மறுநாள் காலையில் மஹாபெரியவரை தரிசித்து விட்டு அருகில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த பக்தர்கள் சிலர் தங்களின் கோரிக்கைகளை சொன்ன போது, 'என்ன சொல்கிறார்கள் இவர்கள்... நீயே கேட்டுச் சொல்'' என்றார். முத்துசாமியும் அரைகுறையாக தெலுங்கில் கேட்டார். மஹாபெரியவரோ, ''உனக்கு தெலுங்கு தெரியாது போலிருக்கே'' என விளையாட்டாக கேட்டு விட்டு விளக்கம் அளித்தார். தெனாலியைச் சேர்ந்த பெண் ஒருவர், தத்துவ விஷயங்களைத் தெலுங்கில் சொல்ல மஹாபெரியவர் ஆர்வமுடன் கேட்டார்.

அதன் பின்னர் மஹாபெரியவரிடம், ''சமஸ்கிருதம் எனக்குத் தெரியாது. உபநிடதம், பகவத்கீதை போன்றவற்றை இதுவரை படித்ததில்லை. வயதும் அதிகமாகிவிட்டது. ஆனால் நேரம் கிடைக்கும் போது 'தெய்வத்தின் குரல்' மட்டும் படிக்கிறேன்'' என்றார் முத்துசாமி.

''ஏன் வருத்தப்படறே! உபநிடதம், பகவத் கீதை சொல்லும் ஆன்மிக விஷயங்கள் எல்லாம் 'தெய்வத்தின் குரல்' மூலம் உனக்கு கிடைத்து விடும்'' என சுவாமிகள் விளக்கிய பின் முத்துசாமி நிம்மதியடைந்தார்.

அதன்பின், 'உன் உத்யோகம் எல்லாம் எப்படியிருக்கு' என மஹாபெரியவர் கேட்டார். ராணுவத்தில் விமான நிலைய கட்டுமானத்தில் இன்ஜியராக பணி செய்ததற்கான பணம் இன்னும் வரவில்லை என்றும், வருமான வரித்துறையினர் அவரது வங்கிக்கணக்கை முடக்கும்படி வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதனால் மனஉளைச்சல் அடைந்ததாகவும் தெரிவித்தார். நேர்மை தவறாத தன் மனக்குறையை சுவாமிகள் தான் போக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு புறப்பட்டார்.

ஊர் திரும்பிய முத்துசாமிக்கு அவரது ஆடிட்டர் மறுநாள் கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார். அதில் வங்கிக்கணக்கை முடக்கியது தவறு என்றும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்திருந்தனர். இதைக் கண்ட முத்துசாமி நெகிழ்ச்சி அடைந்தார். ஓரிரு நாட்களுக்குள் ராணுவத்தில் பொறியியல் துறையினர் அனுப்பிய கடிதத்தில் சன்மானத் தொகை விரைவில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்குள் பணம் கிடைக்கப் பெறவே மஹானின் அருளை எண்ணி அதிசயித்தார் முத்துசாமி.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us