Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கண் கொடுத்த கூரத்தாழ்வார்!

கண் கொடுத்த கூரத்தாழ்வார்!

கண் கொடுத்த கூரத்தாழ்வார்!

கண் கொடுத்த கூரத்தாழ்வார்!

ADDED : பிப் 20, 2023 11:06 AM


Google News
Latest Tamil News
பிப்.10 - திருநட்சத்திரம்

துன்பங்களில் இருந்து நம்மை விடுவிக்க பல மகான்கள் அவதரித்துள்ளனர். வைணவத்தில் இவர்களை ஆழ்வார்கள் என்பர். இதில் முக்கியமானவர் கூரத்தாழ்வார். இவர் காஞ்சிபுர மாவட்டம் கூரம் என்ற ஊரில் அவதரித்தவர். ஜீவகாருண்யம், குருபக்தி, வைராக்யம், ஞானம், பொறுமையின் இலக்கணமாகத் திகழ்ந்தவர். வேதம், இதிகாசம், ஆழ்வார்களின் பாசுரங்களை கற்றுத் தேர்ந்தவர். 'எம்பெருமானார்' என போற்றப்படும் ராமானுஜரின் சீடர். அவருக்காக உயிரையே தியாகம் செய்யத் துணிந்தவர்.

ஆம்! அன்றைய நாள் சோழ மன்னரின் ஆட்சியில் சைவ சமயம் தழைத்து ஓங்கியிருந்த காலம். சோழ மன்னன் சிவபக்தர். அது மட்டும் அல்ல. அவர் வைணவ சமயத்தை வெறுத்தார். இதனால் நாட்டில் இருந்த பண்டிதர்களிடம், 'சிவபெருமானுக்கு மேற்பட்ட தெய்வமில்லை' என எழுதி கையெழுத்திட வேண்டும் என மிரட்டினார். பலரும் பயந்து கையெழுத்திட்டனர். சிலர் ஊரை விட்டு சென்றனர். அப்போது கூரத்தாழ்வாரின் சிஷ்யரான நாலுாரான், ''மன்னா! இவர்களிடம் கையெழுத்து வாங்குவதால் ஒரு பயனும் இல்லை. இவர்களுக்கு தலைவராக விளங்கும் ராமானுஜரிடம் வாங்கினாலே போதும்'' என மன்னரை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரும் தன்னைப் பார்க்க வரும்படி செய்தி அனுப்பினார்.

ராமானுஜர் அரசவைக்கு சென்றால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணிய கூரத்தாழ்வார், அவருக்கு பதிலாக தாமே செல்லலாம் என்று முடிவு செய்தார். அச்சமயம் நீராடச் சென்றிருந்த ராமானுஜரிடம் சொல்லாமல், அவரது காவி உடைகளை கூரத்தாழ்வார் அணிந்து கொண்டார். பின் அங்கிருந்த சீடர்களிடம், “உடனே ராமானுஜரை அழைத்துக் கொண்டு வெளிதேசம் சென்று விடுங்கள்'' எனக் கூறி திரிதண்டத்தை எடுத்துக் கொண்டார். பின் தாமே ராமானுஜர் என்று மன்னரின் ஆட்களை நம்ப வைத்து அரசவைக்கு புறப்பட்டார். நீராடித் திரும்பிய ராமானுஜர் செய்தியறிந்து அனலில் இட்ட புழுவாய் துடித்தார். பின் கூரத்தாழ்வாரின் வெள்ளை ஆடையை உடுத்திக் கொண்டு நாட்டை விட்டு கிளம்பினார்.

கூரத்தாழ்வார் அரசவைக்கு சென்றதும், மன்னரின் கேள்விகளுக்கு விடையளித்தார். இறுதியில், 'ஸ்ரீமந் நாராயணரே பரம்பொருள்' என சொன்னார். கோபப்பட்ட மன்னர் இவரது கண்களை எடுக்க உத்தரவிட்டார். அதற்கு அவர், ''உங்களைப் போன்ற பகவத் துவேசியைக் கண்ட கண்கள் எனக்கு வேண்டாம்'' எனக்கூறி தானே கண்களை பிடுங்கி எறிந்தார். நாட்கள் சென்றன. மன்னரின் உடலில் கிருமிகள் ஆட்கொண்டதால் உயிர் பிரிந்தது. பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியதும் கூரத்தாழ்வாரின் வீட்டிற்கு சென்றார்.

''வைணவ சமயத்துக்குக் கண் போன்று விளங்கும் உமக்கு கண் இழப்பு ஏற்பட்டதே'' என வருந்தினார் ராமானுஜர். அதற்கு அவர், ''மன்னரோ, நாலுாரானோ இதற்கு காரணம் இல்லை. நான் செய்த வினைகள்தான் காரணம்'' என நொந்து கொண்டார்.

உடனே ராமானுஜர், ''காஞ்சிபுரம் சென்று வரதராஜப் பெருமாளிடம் கண்களை தரும்படி வேண்டலாம். வா!'' என அழைத்துச் சென்றார். பெருமாளிடம் 'அறியாமல் தவறு செய்த நாலுாரானுக்கு மோட்சம் தாருங்கள்' என வேண்டினார் கூரத்தாழ்வார். இதைக்கேட்டதும் ராமானுஜர் மனம் நொந்தார்.

இனி என்ன செய்வது என திகைத்து நின்றபோது பெருமாள், 'ராமானுஜா! என்னையும் உம்மையும் காணும்படி கண்களை தருகிறேன்' என்று வரம் தந்தார். அதன் மூலம் பெருமாளை சேவித்து, ராமானுஜரையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us