Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கிருஷ்ணஜாலம் - 2 (27)

கிருஷ்ணஜாலம் - 2 (27)

கிருஷ்ணஜாலம் - 2 (27)

கிருஷ்ணஜாலம் - 2 (27)

ADDED : ஏப் 18, 2018 11:54 AM


Google News
Latest Tamil News
பீஷ்மர் அம்புப்படுக்கையில் உத்தராயண புண்ணிய காலத்தை எதிர் நோக்கி கிடக்கும் நிலையில், 11ம் நாள் போர் தொடங்கியது.

கவுரவர் தரப்பில் துரோணர், பீஷ்மரின் இடத்தில் இருந்து போருக்கு தலைமை தாங்கினார். கர்ணனும் களம் காண புறப்பட்டு விட்டான்.

பாண்டவர்கள் தரப்பிலும் பெரும் உற்சாகம்! வெல்ல முடியாதவர் எனப்படும் பீஷ்மரையே வீழ்த்தியாகி விட்டது. இனி என்ன?

ஆனால் துரியோதனன் வேறுவிதமாக யோசிக்க தொடங்கி விட்டான். இனி இந்த விதிமுறைகளை பின்பற்றுவது, போர்க்கள தர்மங்களை உத்தேசித்து செயல்படுவது போன்ற விஷயங்களுக்கெல்லாம் பெரிதாக இடம் கொடுக்காமல் பாண்டவர்களில் மூத்தவனான தர்மனை போர்க்களத்தில் கொல்லாமல் அவனை கடத்தி விடுவது என்ற முடிவுக்கு வந்தான். இதற்கு மூலகாரணம் சகுனி!

தர்மனை ஒரு சிறுகீறல் கூட இல்லாமல் கடத்தி வர வேண்டியது துரோணரின் பொறுப்பு. துரோணரும், 'தர்மன் நல்லவன். அவனை கொல்லாமல் கடத்தச் சொல்கிறானே துரியோதனன்' என்று முதலில் மகிழ்ந்தாலும், கடத்தி வந்து சித்ரவதை செய்தால் என்ன செய்வது என்று எண்ணி 'எதற்கு இப்படி சொல்கிறாய்?' என்று கேட்டார்.

''தர்மனுடன் நான் மூன்றாம் முறையாக சூதாட விரும்புகிறேன். சகுனி மாமா உள்ளவரை, சூதாட்டத்தில் என்னை வெல்ல யாரால் முடியும்? ஆனால் இந்த யுத்தமோ என் பாட்டனான பீஷ்மரையே பலி வாங்கி விட்டது. நான் வெல்ல சூதாட்டம் மட்டுமே ஒரே வழி'' என்று கூறவும் துரோணருக்கே, துரியோதனன் மேல் கோபம் வராத குறை. இருப்பினும் அடக்கிக் கொண்டு 'அர்ஜூனன் களத்தில் உள்ள வரை தருமனை எவராலும் நெருங்க முடியாது என்பதை நினைவில் கொள்' என்றார்.

அடுத்து அர்ஜூனனை திசை திருப்ப என்ன வழி என்று தான் துரியோதனன் யோசித்தான். இந்த சமயத்தில் தான் திரிகர்த்தர்கள் அவனுக்கு கை கொடுக்க முன் வந்தனர். கூடவே நரகாசூரனின் புதல்வனான பகதத்தனும் முன் வந்தான்.

திரிகர்த்தர்கள் பாணங்களால் வானில் பந்தல் இடுவதில் வல்லவர்கள். சூரியனையே மறைத்து போர்க்களத்தை இருள் சூழச் செய்து அந்த இருளுக்குள் புகுந்து தந்திரமாக எதிரிகளை கொன்றுவிடக் கூடியவர்கள்.

பகதத்தனோ ' சுப்ரதீபம்' என்ற யானையை வரமாக பெற்றிருப்பவன். இந்த யானையை யாராலும் அடக்க முடியாது. இதன் சேனையும் மிக கொடியது.

துரியோதனனுக்கு திரிகர்த்தர்களும், பகதத்தனும் பெரிதும் நம்பிக்கை அளித்தனர். திரிகர்த்தர்களிடம் அர்ஜூனனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததோடு, ' தான் போர் புரியும் பக்கமே அர்ஜூனன் வந்து விடக் கூடாது' என்றும் கட்டளையிட்டான்.

இந்த செயல் தர்மனை உயிரோடு பிடிக்க உதவி செய்யும் என்று நம்பினான்.

திரிகர்த்தர்கள் அர்ஜூனனுக்கு செய்தி அனுப்பி அவனது ஆண்மையைச் சீண்டினர்.

''அர்ஜூனா! கவுரவர்களோடு அப்புறம் போரிடு. முதலில் எங்கள் பாணங்களுக்கு பதில் சொல்... நீ ஆண்மையுள்ளவன் என்றால் முதலில் எங்ளோடு தான் போரிட வேண்டும்'' என்றனர். அர்ஜூனன் கிருஷ்ணனை தான் பார்த்தான்.

கிருஷ்ணனுக்கு துரியோதனன் போட்ட திட்டம் தெரிய வந்து காரணம் விளங்கியது. அதே சமயம் திரிகர்த்தர்கள் கவுரவப் படைகளோடு சேர்ந்தால் உயிரிழப்பு மிக அதிகமாகும் என்பதும் தெரிந்தது. எனவே திரிகர்த்தர்களோடு போரிடத் தயாராகி ரதத்தை அவர்களை நோக்கி செலுத்தினான்.

துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சி!

போர்க்களத்தில் கிருஷ்ணனையும், அர்ஜூனனையும் தனியே பிரித்து திரிகர்த்தர்களை நோக்கி அனுப்பியாயிற்று. அடுத்து பகதத்தனை அழைத்து யானைப்படையை பாண்டவப் படையை நோக்கி ஏவினான்.

ஒருபுறம் துரோணர்! மறுபுறம் பகதத்தன்! பாண்டவர் படை உண்மையில் பாடாய் பட்டது என்று தான் சொல்ல வேண்டும். திரிகர்த்தர்களை அர்ஜூனன் எதிர்த்த அதே வேளையில் போர்க்களத்தின் மறுபக்கத்தில் பகதத்தனின் யானைப் படை யுத்தம்!

கிருஷ்ணனால் துரியோதனின் சூழ்ச்சியை யூகிக்க முடிந்தது. அது வரை சாரதியாக ரதத்தை செலுத்திய கிருஷ்ணன், அர்ஜூனனைப் பார்த்து ''அர்ஜூனா.... இவர்களை சாதாரண அஸ்திரங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே பிரம்மாஸ்திரத்தை விடு. திரிகர்த்தர்களை சர்வநாசம் செய்யும்படி அதனிடம் பிரார்த்தனை செய்து கொள்'' என்றான்.

கிருஷ்ணனின் இந்த செயல்பாட்டை துரியோதனன் துளியும் யூகித்திருக்க மாட்டான். அர்ஜூனனும் அவ்வாறே செய்ய பிரம்மாஸ்திரம் சகல திரிகர்த்த வீரர்களையும் சாய்த்து விழச் செய்தது.

அடுத்து அர்ஜூனனும், கிருஷ்ணனும் பகதத்தனை எதிர்த்து நின்றனர். பகதத்தன் இதை எதிர்பார்க்கவில்லை, அதே வேளை அவன் யானைப்படையால் பாண்டவப் படை நாசமாவதை அர்ஜூனனும் எதிர்பார்க்கவில்லை.

அர்ஜூனன் ஆவேசமாக பகதத்தனுக்கு குறி வைக்கவும், அதை கிருஷ்ணன், சுப்ரதீபம் என்கிற யானை மீது திரும்புமாறு செய்தான். அந்த அதிசய யானையும் அர்ஜூன பாணத்தால் வீழ்ந்தது. தன் பலத்தில் சரிபாதியை இழந்தது போல் உணர்ந்தான் பகதத்தன். தன்னிடமிருந்த நிகரில்லாத ஆயுதமான வைணவாஸ்திரத்தை எடுத்தான்.

அவன் அதை எடுப்பான் என கிருஷ்ணனும் எதிர்பார்த்தான். அர்ஜூனனை நோக்கி விரைந்து வந்தது. அதற்கு எதிராக அர்ஜூனன் நிகழ்த்திய அவ்வளவு எதிர்ப்புகளும் தோற்றுப் போனது. அவனை வீழ்த்தியே தீருவது என்று நெருங்கி வந்து கொண்டிருந்தது!

போர்க்களத்தில் ஒரு புறத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த துரியோதனனுக்கு, அர்ஜூனன் வாழ்வு முடியப் போவதாக தோன்றியது. அதே சமயம் எவரும் எதிர் பாராதபடி கிருஷ்ணன் அந்த அஸ்திரம் முன் எழுந்து நிற்க, அது கிருஷ்ணனை தாக்கி அப்படியே அழிந்து போனது.அந்த நிகழ்வை அர்ஜூனனால் துளியும் ஜீரணம் செய்ய முடியவில்லை. அந்த அஸ்திரமோ கிருஷ்ணன் மார்பில் பட்டதும் விஜய ரந்தம் எனும் வெற்றி மாலையாகவே மாறி கிருஷ்ணன் தோளை அலங்கரித்தது.

அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அர்ஜூனனிடம் கிருஷ்ணனும் ''அர்ஜூனா.... இப்போது பகதத்தன் பலவீனமாக உள்ளான். உடனே பாணம் போடு'' என்றான்.

அர்ஜூனனும் அப்படியே செய்ய பகதத்தன் துடிதுடித்து விழுந்தான்.

அர்ஜூனன் அதை பெரிதாக கருதாமல், ''கிருஷ்ணா... என்ன இது? எதற்காக பகதத்தன் அஸ்திரத்தை நீ தாங்கினாய்... போர்க்களத்தில் ஆயுதம் தொட மாட்டேன் என்று சத்யப்பிரதிக்ஞை செய்த நீ எப்படி இப்படி செய்தாய்?'' என்றும் கேட்டான்.

'' என்னைத் தவிர யாராலும் அதை தாங்க முடியாது அர்ஜூனா. சாரதியான எனக்கு உன்னை காப்பாற்றும் கடமையும் உண்டு என்பதை மறந்து விடாதே. தந்திரங்களை பதில் தந்திரங்களால் சந்திப்பதில் தவறேதும் இல்லை'' என்றான்.

அர்ஜூனனிடமோ சிலிர்ப்பு!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us