Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 6

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 6

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 6

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 6

ADDED : மார் 05, 2023 08:16 AM


Google News
Latest Tamil News
குபேரன்

திரவுபதிக்கு பிரியமான மலரை மடுவில் பறிக்க பீமன் முற்பட்ட போது மடுவுக்குள் இருந்த முதலை பீமனை விழுங்க வந்தது. அதைக் கண்டு அஞ்சாமல், அதை ஒரு பந்து போல வீசினான். பின் கரையேறி அதன் வாயைப் பற்றி கிழிக்கத் தொடங்கினான். சில நொடிகளிலேயே உயிரை விட்டது. தடையின்றி மலர்களைப் பறித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். ஆங்காங்கே அவனால் கொல்லப்பட்ட யட்ச வீரர்கள் கண்ணில் பட்டனர். அவர்களைக் காணவும் பீமனுக்கு வருத்தம் உண்டாயிற்று.

''இவர்களுக்கும் எனக்கும் என்ன பகை?'' இது என்ன விதி? ஏன் இப்படி நடந்தது?'' என தனக்குள் கேட்டபடியே நடந்தான்.

அப்போது எதிர்த்திசையில் தர்மனும் நகுல சகாதேவனும் வந்தனர். விண்ணிலும் முழக்கம் கேட்டது. புஷ்பக விமானத்தில் குபேரன் வந்து கொண்டிருக்க அவனையொட்டி யட்ச வீரர்கள், பறவைகளைப் போல பறந்து வந்தபடி இருந்தனர்.

அந்தக் காட்சியே காணக் கிடைக்காததாக விளங்கியது. குபேரனின் விமானம் அந்திச்சூரியன் கதிர்பட்டு பொன் போல ஜொலித்திட, குபேரனும் கிரீட குண்டலங்களுடன் ஜொலித்தான். பீமன் ஒரே சமயத்தில் ஒருபுறம் சகோதரர்களையும், மறுபுறத்தில் குபேரனையும் கண்ட நிலையில் ஸ்தம்பித்து நின்றிட அவர்களும் பீமனை நெருங்கியவர்களாய் நின்றனர்.

தர்மன் குபேரனைக் காணவும் ''யட்சகுல சக்ரவர்த்தியே... உம் தரிசனத்தால் உள்ளம் பூரித்தேன். நான் இந்த தரிசனத்தை சற்றும் எதிர்பார்த்திடவில்லை. வந்தனம்... திவ்ய வந்தனம்'' என நமஸ்கரிக்கவும் குபேரன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை.

''குந்தி புத்ரர்களே! உங்களை வரவேற்கிறேன். ஆனால் வரவேற்குமிடம் தான் யுத்த களமாகி விட்டது. ஒருபுறம் இது வினோதம் என்றாலும், இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்பது முன்பே தெரியும். ஆகையால் என் வீரர்களை இழந்து விட்ட நிலையிலும் வரவேற்பதில் மகிழ்கிறேன்.

நடக்க வேண்டிய ஒன்று நடந்து முடிந்துள்ளது. நடப்பதெல்லாமும் கூட நல்லதாகவே இருக்கும்'' என்ற குபேரன் கருத்து தர்மன் உள்ளிட்ட பாண்டவர்கள் நால்வரையும் ஆச்சரியப்படுத்தியது.

'' யட்சராஜனே! நீ கோபிப்பாய். சபிப்பாய். அதனால் எங்கள் வனவாச காலமே கூட பெரும் விநாச காலமாகி விடும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் உன் பேச்சு புதிராக உள்ளது. ஆயினும் பீமன் கோபத்தால் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தன்னை ஒருவர் எதிர்க்கும் போது எதிர்ப்பவர் யார்? எப்படிப்பட்டவர்? எதற்காக எதிர்க்கிறார்? என்றெல்லாம் பீமன் சிந்திப்பதேயில்லை. உடனேயே பலத்தை காட்டி விடுகிறான். அவன் பெற்றிருக்கும் வரசித்திகளை எதிர்ப்பவர்களும் உணராமல் மோதி விடுகின்றனர். அப்படித்தான் இன்றும் நடந்து விட்டது. இதற்காக வருந்துகிறேன்'' என்றான் தர்மன்.

''பெயருக்கேற்ப தர்ம சிந்தனையோடு பேசுகிறாய்! உன் பண்பை பாராட்டுகிறேன். நீ வருந்தவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்லை. எது நடக்க வேண்டுமோ அது நடந்து முடிந்துள்ளது. இதில் எனக்கு மகிழ்ச்சியே'' என்ற குபேரனை ஆச்சரியமுடன் பார்த்தான் தர்மன். பீமனுக்குள்ளும் ஆச்சரிய அலைகள்!

''வியப்பாக இருக்கிறதா?''

''ஆம். உனது படை நாசமாகியுள்ளது. இந்த பர்வதம், வனம் என சகலமும் நாசமாகியுள்ளது. இந்த நாசம் கோபத்தை அளிக்காமல் மகிழ்வைத் தருவது விசித்திரமாக உள்ளது''

''உண்மை தான். அப்படித் தோன்றுவதில் தவறுமில்லை. ஆனால் எனக்கு மட்டும் தானே இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெரியும்?''

''அந்த காரணத்தை நாங்கள் அறியலாமா?''

''நிச்சயம் அறிய வேண்டும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது தானே பிரபஞ்ச விதி''

''ஆம்... அதை நன்கறிவேன். அந்த காரணத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம்''

''சொல்கிறேன். இன்று அழிக்கப்பட்ட என் வீரர்கள், வன உயிர்களெல்லாம் இன்று பீமனால் கொல்லப்படும் விதியை உடையவர்கள் ஆவர். அதற்கு காரணம் நானும் என் தளபதி மணிமானும் தான்''

''எப்படி?''

''சொல்கிறேன். ஒரு சமயம் தேவதைகளுக்கான மந்திராலோசனைக் கூட்டம் குசஸ்தலை என்னும் ஆற்றில் கரையோரம் நடந்தது. அது பல பெருமைக்குரிய ஆறாகும். கைலாயத்து சிவனின் ஜடாமுடி கங்கையும், வைகுண்டத்து விஷ்ணுவின் பாற்கடல் துளிகளும் சத்யலோகத்து பிரம்மனின் கமண்டல ஜலமும் கலந்து உருவான புண்ணிய நதி அது!

இந்த நதி நோக்கி நானும் என் தளபதி மணிமானும் இந்த புஷ்பக விமானத்தில் தான் சென்றோம். வழியில் யமுனை நதிக்கரையில் அகத்திய மகரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்படி அமர்ந்திருக்கும் நிலையில் அவரது தலை மீது நாங்கள் கடப்பது, அவரை அலட்சியம் செய்வது போலாகும். ஆனால் விமானத்தை திசை மாற்றிப் பயணம் தொடர்ந்தேன். ஆனால் மணிமான் என் செயலின் நோக்கத்தை உணராமல் மேலிருந்த நிலையில் கீழ்நோக்கி எச்சிலை உமிழ்ந்தான். அது அகத்தியரின் முகத்தில் பட்டு அவரது தவம் கலைந்தது. அண்ணாந்து கோபமுடன் அவர் பார்க்கவுமே நான் விமானத்தை விட்டு கீழிறக்கி மன்னிப்பு கோரியதோடு காலில் விழுந்து வணங்கினேன். மணிமானோ அலட்சியமாக, ''பிரபோ... இந்திரனுக்கு இணையான தாங்கள் இந்த குள்ளமுனி காலில் விழுந்து மதிப்பைக் குறைத்துக் கொண்டீர்கள்' என்றான். அவனது அகந்தைப் பேச்சு அகத்தியரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அடுத்த நொடியே ''அகந்தை பிடித்தவனே! அதனாலேயே அழிவாய். அந்த அழிவும் ஒரு மானிடனால் நிகழும். நீ மட்டும் அழிந்தால் போதாது. ஒரு படையே உன்னோடு இருக்கும் தைரியமே உன்னை இங்கே பண்பாடின்றியும், ஒழுக்கக் கேடாகவும் நடக்கச் செய்தது. எனவே உனது படையும் அந்த மனிதனால் அழிக்கப்படும்'' எனச் சபித்தார். காலில் விழுந்து மன்னிப்பு கோரிய என்னை அவர் சபிக்கவில்லை. மாறாக, ''இப்படி ஒரு தளபதியா உனக்கு'' என ஏளனமாய்க் கேட்டார். ''மன்னிக்க வேண்டும். மணிமான் தங்கள் பெருமை அறியாது தவறிழைத்தான்'' என்றேன்.

''ஒரு தவசியை அவரின் தவத்தை கலைப்பதும், அப்படிக் கலைத்ததும் வருந்தாமல் இருப்பதும் அறியாமையாகாது. அது ஒரு அகந்தை! அது எனக்கு நிகழ்ந்தாலும் சரி, வேறு எவருக்கு நிகழ்ந்தாலும் சரி பெரும் பிழையே! பிழை புரிந்தால் தண்டனையே பரிகாரம்'' என அன்று அகத்தியர் கொடுத்த சாபமே இன்று பீமனால் மணிமான் அழிந்திடக் காரணம். சொல்லப்போனால் அவர் சாபம் கொடுக்கவுமே மணிமான் தன் வீரர்களுக்கு ஒரு உத்தரவே பிறப்பித்து விட்டான். எந்த மானிடனும் குபேர பட்டின எல்லைக்குள் காலெடுத்து வைத்து விட நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று... நானும் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். இறுதியில் அதனாலேயே இன்று அழிந்து போனான். இது ஒருவகை சாப விமோசனம்! அதனாலேயே நானும் மகிழ்ந்தேன். மணிமான் இனி உலகிற்கு பாடமாவான். ரிஷிகளின் பெருமையும் விளங்குமல்லவா?''

விளக்கம் கேட்டு காரணம் அறிந்த நிலையில் பாண்டவர் சமாதானம் ஆயினர்.

''குபேர பிரபு! உங்கள் தரிசனமும், விளக்கமும் எங்களை சாந்தப்படுத்தி விட்டது. எங்கள் வனவாசத்தில் இந்த நாளை நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் நோக்கம் கைலாய தரிசனம். வழியில் உங்கள் தரிசனம் இப்போதே நிகழ்ந்து விட்டது. இனி கைலாய தரிசனமே எங்கள் இலக்கு'' என்றான் தர்மன்.

''மகிழ்ச்சி... கைலாய தரிசனத்துக்கு நானே வழிகாட்டுவேன். நீங்கள் என் அரண்மனைக்கு வந்து அதிதிகளாய் தங்கி எனக்கும் ஆசி வழங்க வேண்டும்'' என்றான் குபேரன்.

''அவசியம் வருகிறோம். அதேவேளை எங்கள் பத்தினி திரவுபதி இப்போது ஆர்ஷ்டிேஷணரின் ஆசிரமத்தில் உள்ளார். எங்கள் சகோதரன் அர்ச்சுனனும் இப்போது எங்களோடு இல்லை. அவன் வந்து சேரவும் நாங்கள் ஐவரும் திரவுபதியுடன் உங்கள் அரண்மனைக்கு வந்து உங்களையும் மகிழ்விப்போம்'' என்றான் தர்மன்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us