Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 13

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 13

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 13

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 13

ADDED : ஏப் 09, 2023 01:17 PM


Google News
Latest Tamil News
அரிஷ்டநேமி, காலநேமி

கிருஷ்ணர் பாண்டவருக்கு ஆறுதலாக சொன்னதை மார்க்கண்டேயர் வழிமொழிந்து, ''பாண்டவர்களே! எங்கே இருக்கிறோம் என்பதை விட எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம். இது மனதின் வலிவையும், தெளிவையும் பொறுத்தது. இந்த வலிவும் தெளிவும் தான் மனிதனை ஞானியாக்கி, பின் அவனை பிரம்மத்தை உணரச் செய்து கடவுளோடு சேர்த்தும் விடும். வனவாசத்தால் ஏற்படும் அனுபவங்களும் உங்கள் மனதிற்கு வலிவையும் தெளிவையும் நிச்சயம் தரும். இது உங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

நீங்கள் ஆள வேண்டிய ஹஸ்தினா புரத்தை ஆண்டு கொண்டிருக்கும் துரியோதனனோ இல்லை அவன் சகாக்களோ ராஜபோகங்களில் இருப்பர். போகங்கள் எப்போதும் ஆபத்தானவை. விரைவில் திகட்டி விடுபவை. ஒரு கட்டத்தில் முதுமையின் பிடியில் வெறுமை மனதில் சூழும். அப்போது எந்த ராஜபோகமும் வெறுமைக்கு மருந்தாகாது. மனம் கிடந்து தவிக்கும். மறுமையை எண்ணிப் பார்த்து அச்சமடையும். அப்போது செய்த தவறுகள், பாவங்கள், துரோகங்கள் நினைவில் எழும்பி மனம் சலனப்படும். அந்த சலனமும் சஞ்சலமும் மிகக் கொடியது. அப்படிப்பட்ட சஞ்சலத்தோடு மரணம் சம்பவித்தால் மறுபிறப்பும் அதன் அடியை ஒற்றியே இருக்கும்.

ஒளிந்து வாழும் பாம்பும், எலியும் சப்த அதிர்வை வைத்தே தங்களை தற்காத்துக் கொள்ளும். அவை எப்போதும் பயத்துடன் ஒளிந்தே வாழ்பவை. அப்படி ஒரு பிறப்பாக பிறக்க நேரிடும்.

மனிதப் பிறப்பெடுப்பதே ஞானத்தால் பிரம்மத்தை அடையத்தான். சுகபோகங்களில் ஆழ்ந்து சஞ்சலம் அடைவதற்காக அல்ல. அந்த வகையில் துரியோதனாதியர்கள் சஞ்சலம் மிகுந்த வாழ்வையே வாழ்ந்தபடி உள்ளனர். ஆனால் நீங்களோ அதற்கு நேரெதிரான பொருள் பொதிந்த வாழ்வை வனத்தில் வாழ்ந்து வருகிறீர்கள்'' என மார்க்கண்டேயர் விரிவாக விளக்கவும் அதைக் கேட்டு பாண்டவர்களும் தெளிந்தனர்.

''மகரிஷி... இறவாப் பெருவாழ்வு வாழ்ந்து வருபவர் தாங்கள். ஒரு மனிதன் மிக அதிகபட்சம் ஐந்து தலைமுறை வாழ்வையே காண இயலும். அவனுக்கான ஆயுள் என்பது 120 வருடங்கள்!

நீங்களோ ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டு நுாற்றுக்கணக்கான மனித தலைமுறைகளை கண்டு அந்த தலைமுறைகளின் சரித்திரத்தை அறிந்தவர். அந்த வகையில் நீங்கள் ஒரு சரித்திரப் புத்தகம்! உங்கள் மூலமாக பாண்டவர்களுடன் நானும் கடந்த காலத்தில் வாழ்ந்த பல அரிய மனிதர்கள் பற்றியும், இந்த யுகங்கள் குறித்தும், மோட்ச கதியடைய ஒருவன் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அறிய விரும்புகிறேன். கூறுவீர்களா?'' கிருஷ்ணன் விண்ணப்பித்தான்.

''ஆம்... மகரிஷி. நாங்களும் கடந்த கால வரலாற்றை அறிய விரும்புகிறோம். தங்கள் சந்திப்பால் அவை தெரிய வருவதை பாக்கியமாக கருதுகிறோம். தாங்கள் கூறப் போவதை நானும், 'மார்க்கண்டேய சமாஸ்ய பர்வம்' என்னும் பெயரில் குறித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்றான் சகாதேவன்.

மகரிஷியும் கடந்த காலத்தில் தான் அறிய நேர்ந்ததை கூறத் தொடங்கினார்.

''இனிய பாண்டவாதிகளே! எல்லாம் தெரிந்தும் ஏதும் அறியாதவர் போல காத்திருக்கும் கிருஷ்ணா! அருமை திரவுபதி! நீங்கள் என் மூலம் முதலில் அறியப் போவது சப்தரிஷிகளில் ஒருவரான காஸ்யபரின் புத்திரரில் ஒருவரான 'அரிஷ்டநேமி' பற்றியே... அவர் ஒரு பிராமணர். புலன்களை அடக்கி தவம் செய்து தன் தந்தையின் வழியில் நடப்பவர். இவரது புதல்வன் 'காலநேமி' என்பவன். இவன் இயற்கைக்கு மாறாக செத்துப் பிழைத்தவன்'' என்று சொல்லி சகலரையும் பார்த்தார் மார்க்கண்டேயர்.

''மரணத்துக்கு இணையான கண்டத்திற்கு ஆட்பட்டு உயிர் பிழைத்த ஒருவனா'' என இடையிட்டான் நகுலன்.

''இல்லை. இறந்து சவமாக ஆகிவிட்டவன். ஆயினும் இவன் பிழைத்தெழுந்து வந்தான்'' மார்க்கண்டேய மகரிஷி அழுத்தமாய் கூறினார்.

''மகரிஷி... இது எப்படி சாத்தியம் - மாண்டவர் மீண்டதில்லை என்பது தானே இயற்கை?'' இப்படி கேட்டவன் பீமன்.

''ஆம்... இயற்கை இவன் வரையில் எப்படி வளைந்து கொடுத்தது என்பதை தான் காலநேமி மூலம் உணரப் போகிறீர்கள்''

''எப்படி'' சகாதேவன் படபடத்தான்.

''முதலில் இந்த காலநேமி எப்படி இறந்தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வனத்தில் தவத்தில் முழ்கியிருந்தான் காலநேமி என்பவன். அதாவது காஸ்யபருடைய பேரன்!

அந்த வேளையில் வேட்டையாட வந்திருந்தான் ஹேஹய தேசத்து இளவரசன் 'திவ்யபுருஷன்'. ஒரு மானைக் குறி வைத்து அவன் தொடுத்த அம்பானது, மான் விலகி விட அதைக் கடந்து சென்று தவத்தில் இருந்த காலநேமியின் மார்பைத் தைத்தது. அவனும் கதறி சுருண்டு விழ உயிர் பிரிந்தது.

சப்தம் கேட்டு ஓடி வந்த திவ்ய புருஷன் தவறை உணர்ந்தான். மானுக்கு பதிலாக மகான் உயிரை பலிவாங்கியதை அறிந்து கலங்கினான். அதே வேகத்தில் நாடு திரும்பிய இளவரசன் திவ்யபுருஷன் தன் தந்தையிடம் வனத்தில் நடந்ததைச் சொல்லி அழுதான். அரசனும் கலங்கிப் போனான். இது கொலை பாதகத்துக்கு இணையான செயல். அதிலும் பிராமண சந்நியாசியைக் கொன்ற செயல் என்பது பஞ்சமா பாதகங்களில் ஒன்று.

பசு, பத்தினி, பிராமணன், பெற்றோர், தவசி ஆகிய ஐவருக்கு இழைக்கப்படும் துரோகமும் துன்பமும் பரிகாரத்திற்கு அப்பாற்பட்டவை.

இதை ஹேஹய ராஜனுக்கு அவனது அவையில் இருந்த ராஜரிஷி எடுத்துரைத்து வனத்திற்கு சென்று கொல்லப்பட்ட காலநேமியின் உடலை மீட்டு முதலில் தகனக்கிரியை செய்வதோடு, காலநேமியின் தந்தையான அரிஷ்டநேமியின் காலில் விழுந்து மன்னிப்பு கோருவதும் தான் இப்போது நாம் செய்ய வேண்டிய செயலாகும் என்று அரசனையும் இளவரசன் திவ்யபுருஷனையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றார்.

வனத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே காலநேமியின் உடலைக் காணவில்லை. மிருகம் உண்டு விட்டதா என்கிற கேள்வி எழும்பிற்று. அப்படி நிகழ்ந்திருந்தால் அதை விட கொடியது வேறொன்றுமில்லை. எனவே அரசனும், இளவரசனும் தங்களுக்கு நேரிட்ட இக்கட்டை எண்ணி மனம் புழுங்கினர்.

ராஜகுருவோ அவர்களைத் தேற்றி, ''வாருங்கள். நாம் தந்தையான அரிஷ்டநேமியிடம் நடந்ததைச் சொல்லி அவர் காலில் விழுவோம். இதனால் நமக்கான தண்டனை குறையும்'' என அரிஷ்டநேமியின் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது காஸ்யப புத்திரரான அரிஷ்டநேமி எந்த சலனமும் இன்றி சிவலிங்கத்திற்கு பூஜை செய்தபடி இருந்தார்.

ஹேஹய ராஜனும், அவர் குமாரன் திவ்யபுருஷனும் வந்தது கண்டு வரவேற்றார்.

''அடடே... ஹேஹய தேச அரசனா! வருக... வருக... எங்கே இவ்வளவு துாரம்?'' என்று உற்சாகமாக பேசவும் செய்தார். உடன் வந்திருந்த ராஜகுரு அதற்கு பதிலளித்தார்.

''முனிபெருமானே! தங்கள் வரவேற்பு ஆச்சரியம் தருகிறது. நாங்கள் பாவிகள்! உண்மை தெரிந்தால் இப்படி வரவேற்பீர்களா? என்பது தெரியவில்லை'' என்றார்.

''அதைக் கூறுங்கள்'' என்றார் அரிஷ்டநேமி.

''முனிவரே! தங்கள் மகன்தானே காலநேமி''

''ஆம்''

''அவரைத் தன் வேட்டையின் போது தவறுதலாக கொன்று விட்டார் எங்கள் இளவரசர் திவ்யபுருஷர்''

''அப்படியா'' என சாதாரணமாக கேட்டார் அரிஷ்டநேமி.

''என்ன அப்படி கேட்கிறீர்கள்... அவர் உடல்கூட இப்போது அங்கு இல்லை. மிருகங்கள் தின்று விட்டதாக கருதுகிறோம்'' என்று பயந்த குரலில் கூறினார் ராஜகுரு. அப்போது அவர் குறிப்பிட்ட அந்த காலநேமியே அங்கே அவர்கள் எதிரில் வந்து நின்றார்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us