Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தலவிருட்சங்கள் - 2

தலவிருட்சங்கள் - 2

தலவிருட்சங்கள் - 2

தலவிருட்சங்கள் - 2

ADDED : மே 21, 2023 03:21 PM


Google News
Latest Tamil News
சென்னை மருந்தீஸ்வரர் கோயில் - வன்னி மரம்

சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் தலவிருட்சம் வன்னி மரம். விமானம், ஐந்து அடுக்கு கொண்ட ராஜகோபுரமும் இங்கு சிறப்பானவை. மருந்தீஸ்வரரான சிவபெருமானுக்கு இங்கு பொங்கல் நைவேத்யம் செய்யப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ம வினையால் பிரச்னைக்கு ஆளானவர்கள் இங்குள்ள வன்னி மரத்தை சுற்றி வந்து மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். அதில் பிரசாதமாக தரப்படும் விபூதியை பூசுகின்றனர். பக்தர்கள் பங்குனி பிரமோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமியன்று வன்னி மரத்தடியில் கூடுகின்றனர்.

இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் சிவபெருமானை வணங்கி தவம் இருந்தார். தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு உதவியாக இந்திரன் தன் பசுவான காமதேனுவை அனுப்பி வைத்தார். தினமும் சரியான நேரத்திற்கு வந்த காமதேனு ஒருநாள் வர தாமதமானது. கோபம் கொண்ட வசிஷ்ட முனிவர் காமதேனுவின் தெய்வீக சக்தியை நீக்கியதோடு பூலோகத்தில் இருக்கும்படி சபித்தார். தன் செயலுக்கு வருந்திய காமதேனு இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவபெருமானை வணங்கி தவமிருந்தது. பாலால் சிவனுக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்ததால் வெள்ளை நிறத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால் இவரை பால்வண்ணநாதர் என அழைக்கின்றனர். வால்மீகநாதர், வேதபுரிஸ்வரர், அமுதேஸ்வரர் என்றும் சுவாமியை அழைக்கின்றனர்.

காமதேனு பால்வண்ணநாதரை வழிபட்டுக் கொண்டிருந்த போது ஒருநாள் வான்மீகி முனிவர் இந்த தலத்திற்கு வந்தார். அவரது தோற்றத்தைக் கண்டு பயந்த காமதேனு தலை தெறிக்க ஓட, அங்கிருந்த சிவலிங்கத்தின் தலையில் காலை பதித்தது. அந்த தழும்பை சிவலிங்கத்தின் மீது இன்றும் காணலாம்.

இந்த தலத்தில் தரிசிக்க வந்த அகத்திய முனிவருக்காக நேரில் சிவபெருமான் காட்சியளித்தார். வான்மீகிக்கும், அகத்தியருக்கும் தனித்தனியே காட்சியளித்த இத்தலத்தில் வருவோர் அடையும் நன்மையை வார்த்தைகளில் அடக்க முடியாது.

இத்தலத்தில் ஏராளமான மூலிகைகள் நிறைந்திருந்ததால் 'மருந்தீஸ்வரர்' என சிவன் வணங்கப்படுகிறார். மற்ற தலங்களைக் காட்டிலும் இக்கோயிலின் வடமேற்கில் உள்ள வன்னி மரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

அகத்திய முனிவருக்கு அம்பிகையுடன் திருமணக் கோலத்திலும், வான்மீகி முனிவருக்கு முக்திப்பேறு தருவதற்காக லிங்க வடிவிலும் சுவாமி காட்சி அளித்தார். இந்த மரத்தை சுற்றி வந்தால் நோய் தீர்வதோடு முக்திப்பேறும் கிடைக்கும்.

புரசோபிஸ் சினேரியா என்னும் தாவரவியல் பெயர் கொண்ட வன்னி மரங்கள் பேபேசியே குடும்பத்தைச் சார்ந்தவை.

அகத்தியர் பாடிய பாடல்

வாதசந்தி தோடமறும் மாறாத் தழுலுளதென்

றோதுவரிவ் வன்னிக் குவமையுண்டோ -

பூதலத்தின்

கானார் விடமுங் கபமுஞ் சொறியும் போம்

தேனே! இதை யறிந்து செப்பு.

வன்னி மரம் விஷத்தை நீக்கும் தன்மை கொண்டது என்பதால் தான் ஆலகால விஷத்தை சாப்பிட்ட சிவபெருமான் கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறது. தலைசிறந்த மருத்துவராக சிவன் அருள்புரியும் வைத்தியநாதர், மருந்தீஸ்வரர் கோயில்களில் வன்னி மரமே தலவிருட்சம். வன்னி மரத்தின் காற்று பட்டாலே தோல் நோய்கள், ஒவ்வாமை, ஆஸ்துமா குணமாகும்.

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567

jeyavenkateshdrs@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us