Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 49

பச்சைப்புடவைக்காரி - 49

பச்சைப்புடவைக்காரி - 49

பச்சைப்புடவைக்காரி - 49

ADDED : ஏப் 09, 2023 01:29 PM


Google News
Latest Tamil News
நடிகையின் காதல்

கார்ப்பரேட் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சை பிரிவின் தலைவர் குமார் என்னை அழைத்த போது இரவு மணி 9.

“உடனே கெளம்பி வாங்க சாகற நிலையில இருக்கறவங்களுக்கு உதவி தேவைப்படுது”

கார் நிறுத்தும் இடத்தில் பெண் மருத்துவர் இருந்தாள். தோற்றத்தில் இருந்த கம்பீரம் அவளை அடையாளம் காட்டியது.

“உன் மனதை அன்பால் நிரப்பிக்கொண்டு சொல்ல வேண்டியதைச் சொல்லி விடு”

டாக்டர் குமார் விபரம் சொல்லி நோயாளியின் அறைக்குள் விட்டார்.

படுக்கையில் இருந்த ஐம்பது வயது பெண் அந்தக் காலத்தில் முன்னணி நடிகை. பேரழகி.

முடியெல்லாம் கொட்டி கண்கள் குழி விழுந்து பரிதாபமாக இருந்தாள்.

குமார் சொன்னது நினைவிற்கு வந்தது.

“ப்ரெஸ்ட் கேன்சர். ஆப்பரேஷன் பண்ணி மார்பகங்கள எடுத்துட்டோம். ஆனா நோய் மத்த உறுப்புகளுக்குப் பரவிருச்சி. வலி குறைய ஊசி போட்டிருக்கோம். நாளைக்குள்ள எல்லாம் முடிஞ்சிரும். கூட யாருமில்ல. ஏதோ சொல்லணும்னு தவிக்கறாங்க... அதான்...”

நடிகைகையைத் துாக்கிக் காட்டினாள். அங்கே பிரமாண்டமான பச்சைப்புடவைக்காரியின் படம் இருந்தது. இவள் நாத்திக வாதியாயிற்றே என வியந்தேன். திக்கித் திணறிப் பேசினாள்.

“எங்கப்பா மாரியம்மன் கோயில் பூசாரி. நான்தான் துப்புக் கெட்டுப் போய் சினிமாவுக்கு வந்து சீரழிஞ்சி போயிட்டேன். எனக்கும் ஒரு காதலன் கெடைச்சான். நடிகன்தான். நான் அவனக் காதலிச்ச மாதிரி யாரும் காதலிச்சிருக்க மாட்டாங்க. முதல் படம் சேர்ந்து நடிச்சவுடனேயே காதல் வந்திருச்சி. புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தோம். திடீர்னு ஒரு கவர்ச்சி நடிகையக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டான்.”

“பாவிப்பய.”

“அவனத் திட்டாதீங்க. என்ன செய்யறது? அவனுக்கு நான் திகட்டிப் போயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அவனுக்கு எந்தப் பொண்ணும் சீக்கிரமே திகட்டிருவான்னு. என்கூடவாவது ரெண்டு வருஷம் வாழ்ந்தான். அடுத்தவளோட ஆறே மாசம்தான். அப்புறம் இன்னொருத்தி. அப்புறம் ஒரு வெள்ளைக்காரி. இப்போ தெனம் ஒரு பொம்பளையோட இருக்கான்.”

“நீங்க இன்னொரு நல்லவரக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்திருக்கலாமே?”

“என்னால அவனத் தவிர வேற யாரையும் யோசிச்சிக்கூடப் பாக்க முடியல. அவனுக்காக கறி சாப்பிட்டேன். எங்கப்பாவுக்குச் சோறு போடற மகமாயியவே இல்லேன்னு சொன்னேன். அவளப் பத்தி அசிங்கம் அசிங்கமாப் பேசினேன். அதக் கேட்டு எங்கப்பா நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிட்டாரு. இப்போ சாகப் போறோம்னு தெரிஞ்சவுடன பச்சைப் புடவைக்காரி மேல பாசம் பொங்கிக்கிட்டு வருது. போனவாரம் ஒரு புரடியூசர் ஏதாவது வேணுாமான்னு கேட்டாரு. பெரிய பச்சைப்புடவைக்காரி படம் ஒண்ண என் கண்ல படறமாதிரி வைங்கன்னு சொன்னேன் வச்சிட்டாரு.

“இந்தப் படத்த வச்சதால நான் செஞ்ச பாவம் இல்லாமப் போயிறாது. நீ செஞ்ச பாவத்துக்கு நரகம்தான் போவேன்னு சொல்றாங்க. இப்போ நான் அனுபவிக்கற வலியையும் வேதனையையும் நரகத்தவிட மோசம்.”

“நீங்க செஞ்ச பாவத்தை கூற முடியுமா?”

“கடவுள இல்லன்னு நாத்திகம் பேசினது, கறி சாப்பிட்டது... நிறைய இருக்கு.”

“இருக்கறதுலயே பெரிய பாவம்?”

“பச்சைப்புடவைக்காரிய மறுத்ததுதான்”

“அதுதான் இல்லைங்கறேன்”

“என்ன உளறுறீங்க?”

“பச்சைப்புடவைக்காரி இந்த பிரபஞ்சத்தை படைச்ச தெய்வம். எங்கும் அவதான் இருக்கா. நம்ம வசதிக்காக பச்சைப்புடவைக்காரியா வணங்கறோம். நீங்க உங்கம்மா போட்டோவக் கிழிச்சிப் போட்டா உங்கம்மாவையே கிழிச்சிப் போட்டதா அர்த்தமா”

நடிகையின் முகத்தில் குழப்ப ரேகைகள்.

“பச்சைப்புடவைக்காரி அன்பே உருவான தெய்வம். அவளுக்கு நாம செய்யக்கூடிய உண்மை வழிபாடு அன்பு காட்டறதுதான். நம்ம அன்பு உண்மையா இருந்தால் போதும்.”

“அந்த மாதிரி நான் எதுவும் செய்யலையே”

“அந்த நடிகனக் காதலிச்சீங்களே.. பொறுக்கின்னு தெரிஞ்சும் கடைசி வரைக்கும் அவனுக்கு உண்மையா இருந்தீங்களே, உங்ககிட்ட இருந்ததெல்லாம் அந்தாளுகிட்டக் கொடுத்தீங்களே! அந்தாளு உங்கள ஏமாத்திட்டு ஓடிப்போய் 25 வருஷமாச்சு. இப்ப அவரத் திட்டினாக்கூட திட்டாதீங்கன்னு சொல்றீங்களே. அந்த உண்மையான அன்பில் பச்சைப்புடவைக்காரியே இருக்கா”

“என் காதல் ஜெயிக்கலையே”

“உங்க காதல் ஜெயிச்சிருச்சி. உங்க காதல்ல அந்த பச்சைப்புடவைக்காரியே உருகிப் போயிட்டா. அந்தாளுக்கு உங்க காதலோட அருமை தெரியாதது உங்க தப்பு இல்லையே!”

கண்ணீருடன் நடிகை என் கையை பற்றினாள். கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. பெண் மருத்துவர் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி நுழைந்தாள். நடிகையின் நெற்றியில் அன்புடன் கைவைத்தபடி, “எப்படி இருக்கீங்க, மாலினி? நர்ஸ் கொடுத்த மருந்த சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே”

“கசப்பு தாங்க முடியல டாக்டர். இதுவரைக்கும் நீங்க வந்ததில்லையே”

“வேலை இருக்கும் போது தான் நான் வருவேன். உன்னப் பாக்கணும்னு இன்னிக்குக் வரச் சொன்னாங்க வந்துட்டேன்.”

நடிகைக்கு கண்ணீர் பெருகியது.

“சரி, மருந்து சாப்பிடலாமா?”

“வேண்டாம் டாக்டர். சாகப் போறவளுக்கு எதுக்கு மருந்து? வாழ்வு தான் கசந்து போச்சு. சாவாவது கசப்பில்லாம இருக்கட்டும்”

“யார் எழுதிக் கொடுத்த வசனம்? நல்லா இருக்கு. இந்த மருந்து அடுத்த பிறவிக்கு”

“புரியலையே!”

“சாப்பிட்டாப் புரியும்.”

என்ன நடக்கிறது இங்கே? அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியா இப்படி பேசுவது? அடுத்து நடந்தது இன்னும் பெரிய அற்புதம்.

பச்சைப்புடவைக்காரி படுக்கையில் அமர்ந்தாள். நடிகையின் தலையைத் தன் மடியில் வைத்து வாயில் மருந்தை ஊற்றினாள்.

பச்சைப்புடவைக்காரியின் முகத்தையே வெறித்துப் பார்த்தாள் நடிகை.

“காலையில் கசந்த மருந்து இப்போ தித்திக்கிறதே?” நடிகை கேட்டாள்.

'இந்த மருத்துவச்சி ஆலகால விஷத்தைப் புகட்டினாலும் அது பால் பாயாசமாகத் தித்திக்கும்' என நினைத்துகொண்டேன்.

“அப்படியே துாங்கும்மா.”

அடுத்த சில நிமிடங்களில் நடிகை மீளாத்துயிலில் ஆழ்ந்தாள்.

பச்சைப்புடவைக்காரி நடிகையைக் கிடத்திவிட்டு எழுந்தாள். நான் அவள் காலில் விழுந்தேன்.

“தாயே! அந்த நடிகை உங்களை வணங்கியதில்லை. உங்கள் இருப்பு நிலையை மறுத்து உங்களைப் பழித்தவள். தப்பான ஆளை நேசித்து தன் மொத்த வாழ்வையும் தொலைத்தவள். அவள் இறக்கும் தருவாயில் நீங்களே மடியில் கிடத்தி மருந்து ஊட்டி.. இவையெல்லாம் என்ன கணக்கு, தாயே?”

“என் அன்பை எந்தக் கணக்கிலும் அடக்கமுடியாது. என்றாலும் காரணத்தை விளக்குகிறேன். நான் கடவுள். மனிதர்கள் கேட்டதைத் தரும் வல்லமை எனக்கு இருக்கிறது. நான் அன்பு வடிவானவள். குறையில்லாதவள். என்னை நேசிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால் குறையுள்ள ஒரு மனிதனை, அவன் தப்பான ஆள் எனத் தெரிந்திருந்தும், தன் வாழ்நாள் முழுவதும் உண்மையாக நேசித்தாளே அதை யாரால் செய்ய முடியும்? அவளது காதலின் துாய்மையில் பக்தியின் ஆழம் இருக்கிறது. அதனால்தான் நானே வந்தேன்”

மீண்டும் அவளை வணங்கினேன். நிமிர்ந்தபோது அவள் அங்கு இல்லை.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us