Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 42

பச்சைப்புடவைக்காரி - 42

பச்சைப்புடவைக்காரி - 42

பச்சைப்புடவைக்காரி - 42

ADDED : மார் 05, 2023 08:48 AM


Google News
Latest Tamil News
குறி சொல்பவளின் சதி

புயல் போல் ஒரு பெண் என் அறைக்குள் நுழைந்தாள் 32வயது. அழகாக இருந்தாள். கசங்கிய ஆடைகள், கலங்கிய கண்கள்.

“பச்சைப்புடவைக்காரி என்னை கைவிட்டுட்டாளே! ஒரு சூனியக்காரி என் புருஷனுக்குச் செய்வினை வச்சிட்டாய்யா. மனுஷன் படுத்த படுக்கையாக் கெடக்காரு”

தன்னுடைய சோகக் கதையை விவரித்தாள்.

அவள் வந்தனா. அவளது கணவன் ராஜு அரசாங்க வேலையில் இருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டான். யாரோ கையாடல் செய்ய, பழி ராஜுவின் மீது விழுந்தது. பணியிடைநீக்கம் செய்து பாதிச் சம்பளம்தான் கொடுத்தார்கள்.

ஈஸ்வரி என்னும் குறி சொல்லும் ஒருத்தி இருப்பதாக யாரோ வந்தனாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அவளிடம் கணவர் ஜாதகத்தை காட்டியிருக்கிறாள் வந்தனா.

“இது யோக ஜாதகமாச்சே! இந்த வேளையில கஷ்டம் வரக்கூடாதே! ஏதோ சாமிக்குத்தம் நடந்திருக்கு. வெள்ளிக்கிழமை புருஷனக் கூட்டிக்கிட்டு வாம்மா. பத்தாயிரம் ரூபாய் பணமும் எடுத்துக்கிட்டு வந்திரு. எல்லாம் சரியாயிரும். நான் இருக்கேன்ல?” என்று தைரியம் சொல்லியிருக்கிறாள் ஈஸ்வரி.

பத்தாயிரம் ரூபாயைப் புரட்டிக் கொண்டு கணவனை அழைத்துக்கொண்டு ஈஸ்வரியிடம் ஓடினாள் வந்தனா.

நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்த ஈஸ்வரி, ராஜுவைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டாள். ராஜுவும் அதிர்ந்து போயிருந்தான். அதன்பின் மேம்போக்காகப் பேசி அவர்களை அனுப்பி விட்டாள் ஈஸ்வரி.

வெளியே வந்ததும் ராஜு உண்மையைச் சொல்லிவிட்டான்.

“ஈஸ்வரி என்னோட காலேஜ்ல படிச்சா. நாங்க ரெண்டு பேரும் காதலிச்சோம். எங்க வீட்டுல சம்மதிக்கல. அவள அம்போன்னு விட்டுட்டு ஓடினது என் தப்புதான்.”

மறுநாள் மதியம் ஈஸ்வரியே வந்தனாவை அழைத்தாள்.

“ராஜு என் ஆளு. அவன எனக்கு விட்டுக்கொடுத்திரு. உனக்கு நெறையப் பணம் தரேன்.”

“என்ன உளறுறீங்க?” வீறிட்டாள் வந்தனா.

“இல்லேன்னா செய்வினை வச்சி உன் புருஷனப் படுத்தப் படுக்கையாக்குவேன். ஏற்கனவே ஆபீஸ்ல பிரச்னை. அதோட வியாதியும் சேந்திச்சின்னா உன் கதி அதோகதிதான். ஒரே வருஷத்துல நீ பிச்சை எடுக்கற நிலைக்கு வந்திருவ.”

வந்தனாவுக்குக் கோபம் வந்தது.

“நான் மதுரைக்காரி. எங்க பச்சைப்புடவைக்காரிய மீறி எதும் நடக்காதுடி. இனிமே இந்த மாதிரிப் பேசின போலீசுக்குப் போயிருவேன்”

ஈஸ்வரி கலகலவெனச் சிரித்தாள்.

“இன்னிக்கு திங்கக்கிழமை. புதன்கிழமை ராத்திரி பத்து மணிக்கு உன் புருஷன் நெஞ்சு வலியில துடிப்பான். அப்போதான் உனக்கு நான் யாருன்னு தெரியும்”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வந்தனா பூஜையறைக்கு ஓடினாள். பச்சைப்புடவைக்காரி முன் கதறினாள். மடியேந்தி மாங்கல்யப் பிச்சை கேட்டாள்.

புதன்கிழமை இரவு சரியாகப் பத்து மணிக்கு ராஜு நெஞ்சுவலியால் துடித்தான். பச்சைப்புடவைக்காரியின் குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள் வந்தனா. மெல்லிய மாரடைப்பு என இரண்டு நாள் வைத்திருந்து சிகிச்சை அளித்தனர். வந்தனாவின் கடன் சுமை இரண்டு லட்சம் கூடியது. என்றாலும் கணவன் நலம் பெற்று திரும்பினானே என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“நடந்தது வெறும் வெள்ளோட்டம்தான். அடுத்த வாரம் உன் புருஷன் படுத்த படுக்கை யாயிருவான்” இந்த முறை ஈஸ்வரி மிரட்டிய போது வந்தனா நடுங்கினாள்.

“உடம்பு எல்லாம் ஒரு ஊமை வலி” என்றபடி மறுவாரமே ராஜு படுத்து விட்டான்.

பல முறை மருத்துவ மனைக்குச் சென்று வந்தாகிவிட்டது. என்ன வியாதியென்றே கண்டுபிடிக்கமுடியவில்லை.

“பச்சைப்புடவைக்காரிக்கு பூஜை செய்யணும். அந்த சண்டாளி ஈஸ்வரி ரத்தம் கக்கிச் சாகணும்யா. எந்த மாதிரி பூஜை செய்யணும்னு...''

வந்தனாவின் வார்த்தைகள் அதிர வைத்தன. கண்ணீர் பெருகியது. பச்சைப்புடவைக்காரி படத்தை பார்த்தேன்.

வெளியே யாரோ கூட்டும் சத்தம் கேட்டது. வெளியே ஓடினேன். “விளக்கு வைக்கற நேரத்துலயா கூட்டுவாங்க” கத்தினேன்.

“என்ன செய்வது? குப்பை சேர்ந்து விட்டதே” - அந்த முகமும் குரலும் அவளை அடையாளம் காட்டிவிட்டன.

“வந்தனா பேசுவதைப் பேசட்டும். நான் அன்பே வடிவானவள் என்பதை மறக்காதே. மனதில் இருக்கும் அன்பு குறையாமல் பேசு. நல்லதே நடக்கும்”

பச்சைப்புடவைக்காரி மறைந்தாள்.

“அந்த குறி சொல்றவ அழியணும்யா. அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க”

மென்மையாக ஆனால் உறுதியாகச் சொன்னேன்.

“உங்களுக்கு அவ அழியறதுதான் முக்கியம்னா இப்பவே வழி சொல்றேன். ஆனா கடைசிவரைக்கும் உங்க புருஷன் படுக்கயிலதான் கெடப்பாரு. ஆபீஸ் பிரச்னையும் அப்படியேதான் இருக்கும். இல்ல, உங்க வாழ்க்கைதான் முக்கியம்னா அதுக்கும் வழி சொல்றேன். என்ன வேணும்?”

“நானும் என் புருஷனும் பிரச்னையில்லாம அமோகமா வாழணும்யா”

“அவ்வளவுதானே! ஈஸ்வரி மீது இருக்கற கோபத்த விட்டொழிங்க”

“அவ சண்டாளி. கைகாரி. சூனியக்காரி”

“உலகத்துல சண்டாளிகளும், சூனியக்காரிகளும் பலர் இருக்காங்க. அவங்க அழிக்கற வேலைய பச்சைப்புடவைக்காரி உங்களுக்குக் கொடுக்கல. உங்களை மட்டும் பாருங்க”

“நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க”

“ஈஸ்வரி ராஜுவ ஒரு காலத்துல உயிருக்கு உயிராக் காதலிச்சிருக்கா. ராஜு இல்லாத வாழ்க்கைய அவளால யோசிச்சிக்கூடப் பார்க்க முடியல. அதனாலதான் அவ கல்யாணம் செஞ்சிக்கல. பில்லி, சூனியம், ஏவல்னு அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கா. அவ மனசுல அன்பு வரணும்னு வேண்டிக்கங்க”

“அவ நல்லா வாழ்ந்தா எங்கள மொத்தமா அழிச்சிருவாளேய்யா”

“உங்க கர்மக்கணக்கையும் பச்சைப்புடவைக்காரியையும் மீறி யாராலயும் உங்களுக்குக் கெடுதல் செய்ய முடியாது. தன்னை மலைபோல நம்பிய ஈஸ்வரிய கைவிட்ட பாவம்தான் ராஜுவப் பாடாப் படுத்துது. ஈஸ்வரி நல்லா இருக்கணும்னு பச்சைப்புடவைக்காரிகிட்ட பிச்சை கேளுங்க. எல்லாருடைய கர்மக் கணக்கும் சரியாயிரும்.”

சில நிமிடம் என்னையே வெறித்துப் பார்த்து விட்டுக் கிளம்பினாள் வந்தனா.

அலுவலகத்தின் படிகளில் பச்சைப்புடவைக்காரி அமர்ந்திருந்தாள். “வந்தனாவின் கெட்டகாலம் முடியப் போகிறது. அங்கே நடப்பதைப் பார்”

ஈஸ்வரிக்காக நிஜமாகவே பிரார்த்தனை செய்தாள் வந்தனா. மாரியம்மன் கோயிலில் மண் சோறு உண்டாள். விரதமிருந்தாள். எல்லாப் பலனையும் ஈஸ்வரிக்கே அர்ப்பணித்தாள்.

இதற்கிடையில் ஈஸ்வரியின் வாழ்வில் சில குழப்பங்கள். அவள் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒருவனிடம்

கொடுத்து வைத்திருந்தாள்.

“நான் வீடு வாங்கப் போகிறேன். என் பணத்தைக் கொடு” என அவனிடம் கேட்டிருக்கிறாள் ஈஸ்வரி. அவனோ பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முடக்கியிருந்தான். ஈஸ்வரியின் கதையை முடித்துவிட்டால் அப்புறம் மொத்தப் பணமும் தனக்குத்தான் என கணக்குப் போட்டான். ஒருநாள்

இரவு ஆட்களை வைத்து ஈஸ்வரியைக் கொலை செய்தான்.

அதன்பின் ராஜு வேகமாக குணமாகி விட்டான். அவனது அலுவலக விசாரணையிலும் அவன்மீது குற்றமில்லை என்று முழுச் சம்பளத்தையும் கொடுத்து அது போக நஷ்ட ஈடாக நிறைய பணம் கொடுத்தனர். அவர்கள் வாங்கிய கடனையெல்லாம் கட்டி முடித்தனர். வந்தனா இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்.

“அன்பின் வழியில் சென்றதால் அவர்கள் வாழ்வு ஒளிர்ந்தது. உனக்கு என்ன வேண்டும்”

“ஈஸ்வரியின் ஆன்மா சாந்தியடையவேண்டும். அது தடையில்லாமல் தன் ஆன்மிகப்பயணத்தைத் தொடர வேண்டும். காதல் தோல்வியில் தன்னிலை மறந்து தவறு செய்த அந்த அறியாப் பெண்ணை எனக்காக மன்னித்துவிடுங்கள்.”

அன்பின் மிகுதியால் அன்னையின் முகம் அழகாக மலர்ந்தது.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us