Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மரணம் கூட அஞ்சட்டும்!

மரணம் கூட அஞ்சட்டும்!

மரணம் கூட அஞ்சட்டும்!

மரணம் கூட அஞ்சட்டும்!

ADDED : ஆக 25, 2016 12:41 PM


Google News
Latest Tamil News
தன் சின்ன மகனை அழைத்துக்கொண்டு தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன் வைத்தார்.

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு நீ தனியாக இந்தக் காட்டில் இருக்க வேண்டும். உன் கண்களையும் கட்டி விடுவேன். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; கண் கட்டை அவிழ்த்து விட்டு வீட்டிற்கு ஓடிவந்து விடவும் கூடாது” என்றார். சிறுவன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்கள் கட்டி விட்டு தந்தை புறப்பட்டு விட்டார். தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல குறைந்து மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த சிறுவனுக்கு, தூரத்தில் ஆந்தை, வனவிலங்குகள் கத்துவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. விலங்குகள் தாக்கிவிடுமோ என்ற பயத்தில் இதயத்துடிப்பு எகிறியது.

காற்றடித்ததால், மரங்கள் பேயாட்டம் ஆடின. திடீரென மழை வேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. 'அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்” என்று பலமுறை கத்திப் பார்த்தான். யாரும்

வரவில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்று அவனுக்குப் புரிந்து விட்டது.

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும் பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் தூக்கம் கண்ணை சுழற்ற கண்ணயர்ந்து விட்டான். காலையில் சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டை அவிழ்த்தான் கண்களைக் கசக்கிக்கொண்டு திறந்து பார்த்த போது, எதிரே தந்தை நின்றார்.

'அப்பா” என்று கூவி தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

“எப்போ வந்தீங்க?” என்று ஆவலாகக் கேட்டான்.

”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்” என்றார் தந்தை.

“இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?” என்று கேட்டான்.

'உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மவுனம் காத்தேன். ஏனெனில், அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது தானே, துணிச்சல் தானே வரும்,” என்றார். மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார்.

துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும் போது துவண்டு விடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மவுனம் காக்கிறார். மரணத்தைக் கண்டு கூட நாம் அஞ்சக்கூடாது என்பதற்காகத்தான், அதையும் கூட படைத்திருக்கிறார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us