Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வ தரிசனம் (3)

தெய்வ தரிசனம் (3)

தெய்வ தரிசனம் (3)

தெய்வ தரிசனம் (3)

ADDED : அக் 27, 2016 03:03 PM


Google News
Latest Tamil News
தீபாவளி என்றால் பட்டாசு, பட்சணங்கள், புத்தாடை இவை எல்லாம் எப்படி நினைவுக்கு வருகின்றனவோ, அதுபோல் கங்கையும் நினைவுக்கு வரும்.

தீபாவளி என்றாலே கங்கா ஸ்நானத்துக்குத்தான் நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் நாம் குளிக்கும் எந்த ஒரு நீரிலும் கங்கை குடி கொண்டுள்ளதாக ஐதீகம். அதனால் தான், குழாய்த் தண்ணீரில் குளித்திருக்கும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்த்ததும், 'கங்கா ஸ்நானம் ஆச்சா?' என்று பரஸ்பரம் விசாரிப்பு தொன்று தொட்டு வரும் வழக்கம்.

தீபாவளி தினத்தன்று அதிகாலை எல்லோரும் கங்கையில் குளித்த புண்ணியம் பெறுகிறார்கள். இதற்கே இப்படி என்றால், பொங்கிப் பாய்ந்து வரும் நிஜமான கங்கையில் காசி மாநகருக்கே சென்று கங்கா ஸ்நானம் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவர்.

இந்துக் கலாசாரத்தில் ஷேத்திரமும் தீர்த்தமும் முக்கியம். இவை இரண்டுமே காசியில் சிறப்பு. ஆன்மிக அன்பர்கள் எல்லோருக்கும் 'வாழ்க்கையில் ஒருமுறையேனும் காசிக்குப் போய் கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும்' என்கிற ஆசை இருக்கும்.

'கங்கை நீரில் மூழ்கி எழுந்தால் நம் கர்மவினைகள் அனைத்தும் விலகுகின்றன. பாவங்கள் அனைத்தும் அகலுகின்றன' என்கிற கருத்து பகவத் கீதை உட்பட அனைத்து நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

கங்கையைப் பற்றி மகாபாரதம் என்ன சொல்கிறது தெரியுமா? “கங்கையில் எவர் ஒருவர் நீராடினாலும் அவர் பிறந்த தினத்தில் இருந்து அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அகன்று விடும். அது மட்டுமல்ல... கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகவே அணுகாது.”

மற்ற நதிகளின் நீரை சேமித்து வைத்தால் அது கெட்டு விட வாய்ப்பு அதிகம். புழு, பூச்சிகள் உருவாகலாம். ஆனால், கங்கை நீரை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்தாலும் கெடாது. புழு, பூச்சி வராது. காசியின் சிறப்பே தீர்த்தம்தான். புனிதமான கங்கை நதியே இந்த ஷேத்திரத்தின் தீர்த்தம். இது இங்கே வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுகிறது. கங்கையின் தீர்த்தத்தைச் சில துளிகள் எடுத்துப் பருகியவருக்கு எமபயம் எந்தக் காலத்திலும் வராது. புனித நதிகளின் தாய் என்று வர்ணிக்கப்படும் நதி இது. இதன் பெயரை மனதால் நினைத்தாலும், வாயால் சொன்னாலும், கண்களால் பார்த்தாலும் நமது பாவங்கள் பறந்தோடி விடும்.

நதி தேவதைகள் அனைவருமே பெண் தெய்வங்களாகப் போற்றி வணங்கப்படுகிறார்கள். இமவானின் (இமயமலை அரசன்) புத்திரி தான் கங்கை. இவள் சர்வேஸ்வரனின் தேவி என்பதால் தலையில் பிறைச் சந்திரனை அணிந்து, நெற்றிக் கண்ணுடன் தரிசனம் தருகிறாள். இவளது நிறம் வெண்மை. வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்தாமரையின் மீது வீற்றிருக்கும் தேவியாக வணங்கப்படுகிறாள்.

இவளுக்கு நான்கு திருக்கரங்கள். முன்னிரு திருக்கரங்கள் அபயம் மற்றும் வரத முத்திரைகளாக அருள்பவை. பின்னே இருப்பவற்றில் வலது கரத்தில் தாமரையும் (கருநெய்தல் என்றும் சொல்வர்), இடது கரத்தில் பொற்குடமும் சுமந்து, தன் வாகனமான முதலையின் மீது அமர்ந்த கோலத்தில் திருக்காட்சி தருகிறாள். மேலுலகத்தில் வசித்து வந்த இவள், பகீரதனின் முயற்சியால் பூலோகத்துக்கு வந்தவள். மேலுலகத்தில் இவளது திருநாமம் மந்தாகினி. பூலோகத்தில் கங்கை. பாதாள லோகத்தில் போகவதி. இந்த உலகத்தில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்கள் தரும் பலனையும் இவள் ஒருத்தியே தந்து கொண்டிருக்கிறாள்.

உலகத்தின் மிகப்பெரிய நதிகளுள் கங்கையும் ஒன்று. நெடிதுயர்ந்த இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 22 ஆயிரம் அடி உயரத்தில், பனி சூழ்ந்த கோமுகி என்னும் இடத்தில் இருந்து கங்கை நதி உற்பத்தி ஆகிறது. இந்த இடத்தை 'கங்கோத்ரி' என்பர்.

கங்கை இங்கே உற்பத்தி ஆகிற இடம் சிறிய சுனையாகத் திகழ்ந்தாலும் உண்மையில் இதன் பிறப்பிடம் இன்னும் எவராலும் கண்டறியப்படவில்லை. இதன் வெளிமுகப்பை மட்டுமே பார்த்து தரிசிக்க முடியும். இது கர்வால் பிரதேசத்தில் ருத்ர ஹிமாலயம் என்னும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்கே கங்காதேவிக்கு ஒரு கோவிலும் இருக்கிறது.

கங்காதேவிக்கான முதல் கோவில் இது தான்!

இந்தக் கங்கை சீறிப் பாய்ந்தோடும் முதல் சமவெளிப் பிரதேசம் ஹரித்துவார்! அங்கிருந்து உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து அலகாபாத்தில் யமுனையோடு கலக்கிறது. இதன் பின், புனிதமான காசியம்பதியில் பயணமாகி, வங்காள தேசத்தில் புகுந்து, பல உப நதிகளாகப் பிரிகிறது. இறுதியில் நவகாளி என்ற இடத்தில் கடலோடு சங்கமமாகிறது.

கங்கை நதியின் நீளம் 2,491 கி.மீ., இதன் நீரால் பயன் பெறும் நிலத்தின் பரப்பளவு 4 லட்சத்து32 ஆயிரத்து 480 சதுர மைல் ஆகும்.

கங்கை நதியை ஒட்டி, ஏராளமான திருத்தலங்கள் பிற்காலத்தில் ஏற்பட்டாலும், அவற்றுள் மிகப் பிரதானமாகக் கருதப்படுவது கங்கோத்ரி, ஹரித்வார், அலகாபாத், காசி ஆகிய நான்கு இடங்கள் தான்.

பூலோகத்துக்கு கங்கா வந்தது வைகாசி மாதத்தின் வளர்பிறை தசமி ஆகும். இந்த தினத்தை 'கங்கா தசரா' என்று அழைப்பர். கங்கைக் கரையில் அமைந்திருக்கிற எல்லா இடங்களிலும் 'கங்கா அவதாரத் திருவிழா' வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஹரித்வார், காசி, அலகாபாத்தில் இது பத்து நாள் திருவிழாவாகத் திமிலோகப்படும்.

தினமும் மாலையில் கங்காதேவிக்கு நடக்கின்ற ஆரத்தியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தீப, தூபங்கள் காட்டி, கங்கையை அர்ச்சித்த பின், தண்ணீரில் தீபம் மிதக்க விட்டு வணங்குவார்கள் பக்தர்கள். கங்கையின் பெருமை பற்றி மகான்களும் ரிஷிகளும் பெருமளவு போற்றி இருக்கிறார்கள்.

வால்மீகி முனிவர், “ஏ கங்கா மாதாவே... பெரிய பதவியோ, போகமோ எனக்கு வேண்டாம். நீ தவழ்கின்ற கரையில் இருக்கின்ற ஏதேனும் ஒரு மரத்தில் கூடு கட்டி வாழுகின்ற பறவையாக நான் பிறந்தாலே போதும். அதற்கு பாக்கியம் இல்லை என்றால், உன் நீர்ப் பிரவாகத்தில் வாழும் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ ஜன்மம் எடுத்தாலே போதும்,” என்கிறார்.

மகாகவி காளிதாசர், “கங்கையில் நீராடியவர்களுக்கு ஆயுளும் ஆரோக்கியமும் பெருகும். எமனிடம் இருந்து ஒருவரை மீட்கின்ற சக்தி கங்காதேவியின் ஒரு துளி புனித நீருக்கு உண்டு,” என்கிறார்.

“எவருடைய இதயத்தில் கங்காதேவி மீது பக்தி இருக்கிறதோ, அவருக்கு முக்தி கிடைப்பது மிக எளிதாகும்” என்கிறார் ஆதிசங்கரர். கங்கையை அம்மனாக வழிபடும் வழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. 'கங்கையம்மன்' என்ற திருநாமத்தில் அருளும் தேவியர்கள் எல்லாம், கங்காதேவிதான். கங்காதேவியை புனிதமான இந்த வேளையில் வணங்கி, நம் பாவங்களைத் தொலைத்து, புண்ணியம் சேர்ப்போம்!

இன்னும் தரிசிப்போம்...

- பி. சுவாமிநாதன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us