Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்ரகுப்த விரதம்

சித்ரகுப்த விரதம்

சித்ரகுப்த விரதம்

சித்ரகுப்த விரதம்

ADDED : மே 02, 2023 03:10 PM


Google News
மே 5, 2023 - சித்ரா பவுர்ணமி

* நீங்கள் செய்த வினை அதே வடிவத்தில் உங்களிடம் திரும்ப வரும்

* பாவம் என்பது நீங்கள் செய்யும் தீமை. புண்ணியம் என்பது நீங்கள் செய்யும் நன்மை.

* ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது

இந்த வரிகள் உணர்த்துவது ஒன்றே. அதுதான் பாவ, புண்ணியம். நற்செயலை செய்தால் சரி. கெட்ட செயல்களை செய்தால் பாவம்தானே வரும். இதை போக்க ஒரு வழி உண்டு. அதுதான் சித்ரகுப்த விரதம்.

நீங்கள் செய்யும் பாவ, புண்ணியத்தை குறிப்பு எடுப்பவரே சித்ரகுப்தர். இவரை நினைத்து சித்ரா பவுர்ணமியன்று விரதம் இருப்பதே சித்ரகுப்த விரதமாகும். இவரது சிறப்பை குறிக்கும் புராணக்கதை ஒன்று உண்டு.

சிறுவன் ஒருவனுக்கு படிப்பு வராததால், வெட்டியாக ஊர் சுற்றி வந்தான். வளர வளர அவனுடன் கூடவே கோபமும், முரட்டுத்தனமும் சேர்ந்து வளர்ந்தன. ஒரு கட்டத்தில் தவறான பாதைக்கு செல்ல ஆரம்பித்தான். இதனால் வருந்திய அவனது தாய், என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தாள். ஒருநாள் அவனிடம், 'சித்ரகுப்தாய நமஹ' என்று தினமும் சொல் என அறிவுறுத்தினாள். என்னதான் முரடனாக இருந்தாலும் தாய் சொல்லை தட்டாமல், மந்திரத்தை கூறினான். இதனால் மகிழ்ச்சி அடைந்த சித்ரகுப்தர், அவனது ஏட்டைப் பார்த்தார். அதில், இளைஞன் ஏழு நாளில் மரணம் அடைவான் என்றும், தனது பெயரைக் கூறிய புண்ணியம் மட்டுமே இருந்தது. இவன் மீது இரக்கப்பட்டவர், கனவில் தோன்றி, ''குழந்தாய்! என் பெயரை உச்சரித்ததை தவிர நீ வேறு எந்த நல்ல செயலையும் செய்யவில்லை. மரணம் உன்னை நெருங்குகிறது. எனவே நான் சொல்வதைச் செய். உன் நிலத்தில் ஒரு குளத்தை வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால், உனக்கு மூன்றே முக்கால் நாழிகை வரை சொர்க்கம் கிடைக்கும். எமதர்மராஜர் 'முதலில் சொர்க்கத்துக்கு செல்கிறாயா? நரகத்துக்கு செல்கிறாயா?' எனக் கேட்டால், 'சொர்க்கத்திற்கு செல்கிறேன்' என சொல்லிவிடு'' என்று கூறி மறைந்தார்.

காலையில் கண் விழித்ததும் சித்ரகுப்தர் கூறியதை நம்புவதா, வேண்டாமா என்ற சிந்தனை இவன் மனதில் ஓடியது. இருந்தாலும் பயத்தில் குளத்தை வெட்ட ஆரம்பித்தான். ஓரிடத்தில் சிறிது ஊற்று சுரந்தது. அப்போது சித்ர குப்தர் மாடாக வந்து, கரையில் நின்று 'அம்மா' என்று குரல் கொடுத்தார். மாடுகள் பல ஓடி வந்தன. ஒரு மாடு தண்ணீர் குடித்தது. அதற்குள் இவனது உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. எமதுாதர்கள் இவனை எமதர்மராஜரிடம் அழைத்துச் சென்றனர். அவரோ இவனது பாவ, புண்ணியக் கணக்கைப் பற்றி சித்ரகுப்தரிடம் கேட்டார்.

அதற்கு அவர், ''இவன் இறப்பதற்கு முன் குளத்தை வெட்டியுள்ளான். அதில் ஒரு மாடு தண்ணீர் குடித்துள்ளது'' என்றார்.

பிறகு கனவில் சித்ரகுப்தர் சொல்லியபடியே எமதர்மராஜர் கேள்வி கேட்கவே, அதற்கு இளைஞன் சொர்க்கத்திற்கு சொல்கிறேன் என்றான். இதற்கு இடையே அந்தக் குளத்தில் தண்ணீர் ஊறவே, பல ஜீவராசிகள் தாகத்தை தணித்துக்கொண்டன. இதனால் இளைஞனின் புண்ணியக் கணக்கும் ஏறியது. சொர்க்கத்தில் நிரந்தரமாக இருக்க இடமும் கிடைத்தது.

பார்த்தீர்களா... சித்ரகுப்தரின் பெயரைச் சொன்னதற்கே சொர்க்கத்தில் இடம் கிடைத்துவிட்டது. அவரை நினைத்து விரதம் இருந்தால் பல நன்மை கிடைக்கும் அல்லவா. முக்கியமாக

'பாவம் செய்யமாட்டேன்' என்ற உறுதிமொழியை எடுங்கள்.

புண்ணியம் செய்யுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us