Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தாழ்மையுடன் இரு! நீ கேட்டதை அடைவாய்

தாழ்மையுடன் இரு! நீ கேட்டதை அடைவாய்

தாழ்மையுடன் இரு! நீ கேட்டதை அடைவாய்

தாழ்மையுடன் இரு! நீ கேட்டதை அடைவாய்

ADDED : நவ 18, 2016 12:15 PM


Google News
Latest Tamil News
1931ம் ஆண்டில் பால் பிரண்டன் என்ற ஆங்கில அறிஞர், நம் நாட்டு மகான்களைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக வந்தார். காஞ்சி மகாபெரியவர் அப்போது செங்கல்பட்டில் தங்கியிருந்தார். பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்ற அவர், பல ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு மனநிறைவு பெற்றார்.

அவர் தனது புத்தகத்தில், ''நான் கண்ட மகாபெரியவரின் உருவம் பெரும் தேஜஸ் (பிரகாசம்) கொண்டது. ஒருமுறை நான் சென்னையில் தங்கியிருந்த இடத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு வேளையில் விழிப்பு வந்தது. என் அறையில் ஒரே இருட்டு. என் உடல் விறைப்படைந்தது போல் இருப்பதை உணர்ந்தேன். உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. தலையணைக்கு கீழே வைத்திருந்த என் வாட்சை எடுத்துப் பார்த்தேன். 2:45 மணி. அப்போது எனது கால்மாட்டில் ஏதோ ஒரு ஒளி தெரிந்தது. அதைக் கூர்ந்து கவனித்தேன். அங்கே மகாசுவாமிகள் தெரிந்தார். அவரது உருவத்தைச் சுற்றிலும் ஒளி தெரிந்தது. உண்மையிலேயே அங்கே சுவாமி வந்திருக்கிறாரா...இதை சோதித்துப் பார்க்கும் எண்ணம் மனதில் ஏற்பட்டது. கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

அப்போதும் அதே உருவம் என் கண்ணில் பட்டது. கருணையையும், அருளையும் என் மீது பொழியவே அந்த உருவம் தென்பட்டதாகக் கருதினேன். பிறகு கண்களைத் திறந்தேன். என் முன் காவி உடை அணிந்து மகாசுவாமி தென்பட்டார். அவர் புன்னகை பூத்தபடியே, 'தாழ்மையுடன் இரு, நீ கேட்டதை எல்லாம் அடைவாய்' என்று சொன்னதைப் போல் என் காதுகள் உணர்ந்தன. பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது. அசாதாரணமான இந்த நிகழ்வால் என் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்டது.'' என்று எழுதியுள்ளார்.

பால் பிரண்டன் பெற்ற இந்த பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிட்டும். மகாசுவாமிகள் நம் முன்னும் இப்படி வந்து ஆசி சொல்வாரா! எப்படியிருப்பினும் அவர் சொன்னதைப் போல எவ்வளவு செல்வம், புகழ் வந்தாலும் பணிவுடன் இருப்போம். நினைத்ததை அடைவோம்.

நீலக்கல் முத்துசுவாமி சாஸ்திரி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us