Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 36

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 36

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 36

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 36

ADDED : மார் 14, 2023 01:16 PM


Google News
Latest Tamil News
வைகறைத் துயில் எழு

வெளிநாட்டுக் கம்பெனில பையன் வேலை பாக்குறான். ராத்திரி பூரா வேலை. அதனால் எழுந்திருக்க 10 மணியாகும். குழந்தைக்குக் காலேஜ்ல பிராஜெக்ட் ஒர்க் ஜாஸ்தி. அதனால காலைல எப்படி சீக்கிரம் எழுந்திருக்க முடியும். ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது எங்க துாங்குறாங்க... ராத்திரி முழிக்க வேண்டியது... காலைல லேட்டா எழுந்திருக்க வேண்டியது. இப்படி பலப்பல செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் அவ்வையின் வைகறைத் துயில் எழு என்னும் அமுத வாக்கைச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது அதிகாலையில் எழுவது சிறப்பானது.

அந்த காலத்தில் இரவு சீக்கிரம் படுத்து அதிகாலையில் விழிப்பது நம் நடைமுறையாக இருந்தது. இதனால் உடலும் ஆரோக்கியமாக இருந்தது. இத்தனை மருத்துவமனைகள் இல்லை. என்றைக்கு இரவு உறக்க நேரம் தள்ளிப் போடப்பட்டு, விடியலில் எழுவது தாமதமானதோ அன்றைக்கே உடல்நலக்கோளாறுகள் பெருகி விட்டன.

துாக்கம் என்பது மனிதனுக்கு வரம். முதியவர்கள் அல்லது நோயாளிகளைக் கேட்டால் துாக்கத்தின் அருமை தெரியும். சிலர் சொல்வார்களே ரொம்ப நாளைக்குப் பிறகு இப்பத்தான் நிம்மதியா துாங்கியிருக்கார் என்று. ஆனால் துாக்கத்தை அலட்சியப்படுத்தும் இளம்தலைமுறையிடம் 'வைகறையில் துயில் எழு' என பெற்றோர் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டும்.

துாங்குபவனைக் கும்பகர்ணனோடு ஒப்பிடுவார்கள். காரணம் அவன் துாங்கிக் கொண்டே இருப்பான். ராவணனின் சகோதரனான கும்பகர்ணன் தான் நீண்ட காலம் வாழ வரம் கேட்க விரும்பினான். கும்ப கர்ணனின் எண்ணத்தை அறிந்த தேவர்கள் கவலை கொண்டனர். வரத்தை வாயால் தானே கும்பகர்ணன் கேட்பார் என்பதால் சரஸ்வதி தேவியின் உதவியை நாடினர். அதற்கு அவள் சம்மதித்தாள். 'நித்யத்துவம்' அதாவது எப்போதும் அழியாமல் இருக்க வேண்டும் என்பது கும்பகர்ணன் கேட்க விரும்பிய வரம். ஆனால் தேவர்களின் பிரார்த்தனையால் அவன் நாக்கு தவறி, 'நித்ரத்துவம்' அதாவது எப்போதும் துாக்கம் வேண்டும் எனக் கேட்டான். படைப்புக் கடவுளான பிரம்மாவும் வரத்தை வழங்கினார். அதனால் எப்போதும் துாங்கிக் கொண்டே இருந்தான்.

பாவை நோன்பின் போது தோழியரை எழுப்பச் செல்லும் ஆண்டாள் ஒரு தோழியிடம், ''உனக்கு துாக்கத்தை சொத்தாக கும்பகர்ணன் உயில் எழுதி வைத்து விட்டானா... அவனே உன்னிடம் தோற்று விடுவான் போலிருக்கிறதே'' எனக் கேட்டதாக பாடல் உண்டு. ஆனால் தற்காலத்தில் என்ன ஆகியிருக்கிறது தெரியுமா... உடல்நலம் என்னும் பெரிய பொக்கிஷத்திற்கு அருமருந்தான துாக்கம் தொலைக்கப் பட்டிருக்கிறது.

அதுதான் பகலிலே நாங்கள் ஈடு செய்கிறோமே என்ற வாதம் ஏற்புடையதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம் இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் துாங்கும் போது தான் உடலில் ஹார்மோன்கள் சரியாக கரக்கும் என்கின்றனர். ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு நேரம் ஹார்மோன்கள் சுரக்கும். முக்கியமாக துாங்கும் போது சுரக்க வேண்டியவை விழித்திருந்தால் சுரப்பதில்லை. இதனால் குறைபாடு ஏற்பட்டு நோய்க்கான கதவுகளை நாமே திறந்து விட்டதாகி விடும்.

உடல்நலனுக்காக இரவு நேரத்தில் பொழுது போக்குகளைப் புறந்தள்ளி துாங்க முயல்வோம். அதிகாலையில் துாய்மையான காற்றை உள்வாங்கும் போது உடலில் மட்டுமின்றி மனதிலும் புத்துணர்ச்சி ஏற்படும். அதிகாலையில் சேவல் கூவுவது விடியலை வரவேற்கவே.

நுரையீரல், கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்ட ஓசோனை அதிகாலையில் அதிகம் பெறலாம். அந்தக் காலத்தில் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலமிட்டனர். அவர்கள் அறியாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அவர்கள் குழந்தைகளைப் பெறுவதில் பிரச்னைகளும் ஏற்பட்டதில்லை.

காலையில் எழுந்து நல்லதைச் சிந்தித்து அன்று செய்ய வேண்டியவைகளைப் பட்டியலிட வேண்டும். பின்னர் பெற்றோரை வணங்கி பணிகளைத் தொடங்க வேண்டும். 'காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு' என்கிறார் மகாகவி பாரதியார். 'அமுதக்காற்று வீசும் வேளை வைகறை' என்கிறார் வள்ளலார். அதிகாலையில் எழுந்தால் புத்தி, சிந்தனை தெளிவாக இருக்கும். உள்ளுறுப்புகள் துாய்மையாகும். வாதம், பித்தம், கபம் ஆகியவை உடலில் சமநிலையில் இருக்கும். இவை நமக்கு அன்றைய நாளின் பரிசாகும்.

இரவு தாமதமானாலும் பரவாயில்லை வேலையை முடித்து விட்டுக் காலையில் தாமதமாக எழலாம் என்பதை நம் முன்னோர்கள் ஏற்கவில்லை. பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பவர்களிடம் துாக்கத்தில் இருந்து விழிக்கும் நேரத்தைக் கேட்டால் அவர்களின் அவசரகதியின் உண்மை நிலை புரியும். கட்டுப்பாட்டுடன்

இயங்க விடாமல் பல்வேறு கருவிகள் நம்மை ஆக்ரமித்து விட்டதால் துாங்கும் நேரம் குறைந்தது. இதனால் உடல்,

மன அழுத்தம் அதிகமாகி விட்டன. அதிகாலையில் எழுவதை ஒரு இயக்கமாக மாற்றிட ஒவ்வொருவரும் உறுதியெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான, உற்சாகமான தலைமுறை உருவாகும். அதிகாலையில் எழுவோம்.

ஆனந்தமாக வாழ்வோம்.

முற்றும்

இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்

ilakkiamegamns@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us