Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 3

அசுர வதம் - 3

அசுர வதம் - 3

அசுர வதம் - 3

ADDED : அக் 27, 2023 11:11 AM


Google News
Latest Tamil News
விருத்திராசுரன் வதம்

தேவகுருவான பிரகஸ்பதி, ஒருநாள் இந்திர சபைக்குச் சென்றார். அங்கு தேவலோக மங்கையருடன் இந்திரன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். அதைக் காண சகிக்காமல் கண்களை மூடியபடி தேவகுரு வெளியேறினார். இதையறிந்த இந்திரன் பயந்து போய், படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டான்.

அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் பேரன் விஸ்வரூபனை (துவஷ்டா என்பவரின் மகன்) குருவாக நியமித்துக் கொள் என தெரிவித்தார் பிரம்மா. அசுரக் குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் குருவாக நியமிக்க இந்திரனுக்கு விருப்பமில்லை. ஆனாலும் பிரம்மாவின் ஆலோசனையை புறக்கணித்தால் அவரும் குறை சொல்ல நேரும் என்பதால் விஸ்வரூபனை குருவாக நியமித்தான்.

தேவகுரு பிரகஸ்பதியை அவமதித்த பாவம் தீர, புதிய குருவான விஸ்வரூபன் மூலம் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான். அதில் விஸ்வரூபன் மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்ததால் யாருக்கும் கேட்கவில்லை. இந்திரனுக்கு சந்தேகம் உண்டாகவே அவன் வாய் அசைப்பதை உற்றுக் கவனித்தான் இந்திரன். தேவர்களுக்கும் எதிராகவும், அசுரர்களுக்கு ஆதரவாகவும் மந்திரம் சொல்வது புரிந்தது. கையில் இருந்த ஆயுதத்தால் விஸ்வரூபனை வெட்டிக் கொன்றான்.

தேவ குருவை அவமதித்த பாவத்துடன் இப்போது பிரம்மஹத்தி தோஷமும் சேர்ந்தது. தேவலோக நன்மைக்காக தேவர்கள் ஒன்றுகூடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தியதன் பயனாக தோஷம் மறைந்தது.

விஸ்வரூபன் இறந்ததை அறிந்த அவனது தந்தை துவஷ்டா பழிவாங்கும் நோக்கில் வேள்வி ஒன்றைத் தொடங்கினார். அதில் கோர வடிவில் அசுரன் ஒருவன் தோன்றினான். அவனுக்கு விருத்திராசுரன் எனப் பெயரிட்டான்.

தன் மகனை அழித்த இந்திரனைக் கொல்லுமாறு துவஷ்டா ஆணையிட்டார். அசுரன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட இந்திரன் ஆயுதத்தை வீசினான். இரும்புத் தடியால் அதை தடுத்ததோடு அசுரனின் தாக்குதலில் இந்திரன் மயக்கம் அடைந்தான்.

ஆனால் இறந்து விட்டதாக கருதிய அசுரன் திரும்பிச் சென்றான்.

மயக்கம் தெளிந்த இந்திரன், தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் ஆபத்து நேரும் எனக் கருதி பிரம்மாவை அழைத்துக் கொண்டு பாற்கடலுக்கு சென்றான். ''இந்திரா... பாற்கடலைக் கடைந்த போது, ததீசி முனிவரிடம் கொடுத்த ஆயுதங்களை அவர் விழுங்கி விட்டார். அவை தற்போது அவரது முதுகுத் தண்டை சேர்ந்து விட்டன.

அவரிடம் சென்று முதுகுத்தண்டை தானமாக கேள். அதை ஆயுதமாக்கிப் போரிட்டால் விருத்திராசுரன் மடிவான் எனத் தெரிவித்தார் திருமால்.

ததீசி முனிவரிடம் முதுகுத்தண்டைத் தானமளிக்கும்படி இந்திரன் வேண்டினான். அவரும் தருவதாக வாக்களித்து

தியானத்தில் ஆழ்ந்தார். உடலை விட்டு உயிரைப் பிரித்தார். முதுகுத்தண்டை எடுத்துக் கொண்டு தேவலோக தச்சனான துவஷ்டிரியிடம் கொடுத்து ஆயுதம் ஒன்றை உருவாக்கினான். அதன் பெயர் வஜ்ராயுதம்.

தேவலோகப் படையுடன் வஜ்ராயுதம் ஏந்தியபடி இந்திரன் போருக்கு புறப்பட்டான். அசுரர்கள் பலரும் அழியவே அவர்களின் எண்ணிக்கை குறைந்தது. வஜ்ராயுதத்தின் ஆற்றல் கண்ட அசுரன் வியப்படைந்தான்.

தன்னை காப்பாற்றிக் கொள்ள எண்ணி கடலுக்குள் மறைந்தான்.

கடலுக்குள் அசுரனைக் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்த இந்திரன், நதிகளான காவிரி, தாமிரபரணியை கமண்டலத்துக்குள் அடக்கிய அகத்தியரின் உதவியை நாடினான். அவர் கடல் நீரைத் தன் உள்ளங்கையில் அள்ளிப் பருகினார்.

கடல் முழுவதும் வற்றி நிலப்பரப்பானது. தவத்தில் ஆழ்ந்திருந்தான் விருத்திராசுரன். அவனது தலையை இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் வெட்டி வீசினான்.

தவத்தில் இருந்தவனைக் கொன்றதால், இந்திரனுக்கு மீண்டும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அச்சமடைந்த இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நுால் இழையில் சென்று மறைந்தான். தேவகுருவை அவமதித்த குற்றத்திற்கான தண்டனையாக நினைத்து அங்கேயே பல்லாண்டு காலம் இருந்தான்.

திருமாலின் திருவடியில்...

முற்பிறப்பில் சித்ரகேது என்னும் பெயரில் பக்தனாக வாழ்ந்த இவன், பார்வதியின் சாபத்தால் அசுரனாக பிறக்க நேர்ந்தது. துவஷ்டா நடத்திய வேள்வியில் பிறந்த போது விருத்திராசுரன் என அழைக்கப்பட்டான். துவஷ்டாவின் கட்டளையால் இந்திரனுடன் போரிட்டான். தாக்குப்பிடிக்க முடியாத இந்திரன் போரில் இருந்து பின்வாங்கினான். வசிஷ்ட முனிவர் நம்பிக்கை இழந்த இந்திரனை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் இந்திரனின் உடலில் புகுந்த திருமால் பலம் அளித்தார். அளவுக்கு அதிகமான உஷ்ணத்தை உடம்பில் செலுத்தி அசுரனை பலவீனப்படுத்தினார் சிவபெருமான்.

அப்போது, '' இந்திரனே... பயம் வேண்டாம். பலம் பொருந்திய வஜ்ராயுதம் உன்னிடம் இருக்கிறது. நானும் உயிரை விடுத்து திருமாலின் பாதங்களை அடைய விரும்புகிறேன். திருமால் இருக்கும் இடத்தில் வெற்றித் திருமகள் குடியிருப்பாள். எனவே உனக்கே வெற்றி கிடைக்கும்” என்றான் விருத்திராசுரன்.

இந்திரன் பலத்துடன் வஜ்ராயுதத்தை வீசி எறிந்தான். அது அசுரனின் தலையைத் துண்டித்தது. அவனது உயிர் திருமாலின் திருவடியை அடைந்தது.

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம் என்பது கொலைப்பாவமாகும். இது அரக்கர், தேவர், மனிதர்களைக் கொல்லும் போது ஏற்படுகிறது. பிரம்மாவால் படைக்கப்பட்ட உயிர்கள் தங்களின் பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப மரணத்தை அடைகின்றன. இயற்கைக்கு மாறாக தனிப்பட்ட காரணத்திற்காக உயிர்களைக் கொல்லும் போது பிரம்மஹத்தி ஏற்படுகிறது. பரிகாரம் தேடாவிட்டால் இதன் தாக்கம் பல தலைமுறைக்கும் தொடரும்.



-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925





      Our Apps Available On




      Dinamalar

      Follow us