Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 17

பச்சைப்புடவைக்காரி - 17

பச்சைப்புடவைக்காரி - 17

பச்சைப்புடவைக்காரி - 17

ADDED : ஜூன் 07, 2024 10:57 AM


Google News
Latest Tamil News
நடிகையின் துயரம்

பெரிய இடத்தில் பிரச்னை என்று சொல்லி என்னை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வந்திருந்தார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அந்த 'பெரிய இடத்துக்காக' காத்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் என் முன்னே ஒரு பேரழகி தோன்றினாள். அவள் ஒரு முன்னணி நடிகை. அறிமுகம் முடிந்து நாங்கள் தனித்து விடப்பட்டவுடன் நடுங்கிய குரலில் நடிகை,“இப்போதான் சார் கோலிவுட்ல முதலிடத்தப் பிடிச்சிருக்கேன். அதிகபட்சம் என்னால இன்னும் அஞ்சு வருஷம்தான் நடிக்க முடியும். அதுக்குள்ள பணத்தை சேத்துக்கிட்டு ஒதுங்கலாம்னு திட்டம். எனக்கு ஒரு காதலன் இருக்கான். சீக்கிரம் கல்யாணம் பண்ண நெனச்சிருந்தேன். எல்லாமே பாழாயிடுச்சு சார்”

“ஏன்?”

“டீப் பேக் தொழில் நுட்பம் தெரியும்ல? அதுல என்ன மாதிரியே இருக்கற ஒரு பொண்ணு படத்துல என் முகத்த ஒட்ட வச்சி ஆபாசப் படம் எடுத்துட்டாங்க. என் காதலனே என்னை நம்பல. காதல் முறிஞ்சிருச்சி. புது சான்செல்லாம் போயிடும் போலிருக்கு”

“போலீஸ்ல புகார் கொடுத்து அந்த வலைதளத்தை முடக்கி…”

என்னை இடைமறித்தாள் நடிகை.

“அதெல்லாம் செஞ்சாச்சு சார். ஆனா எனக்கு பயமா இருக்கு. இதோட எல்லாம் முடிஞ்சிருமோன்னு தோணுது. காதல் போயிடுச்சி. பட சான்சும் போயிட்டா என் வாழ்வே முடிஞ்சிடும். தற்கொலை பண்ண வேண்டியதுதான். நான் கும்பிடற பச்சைப் புடவைக்காரி ஏன் கைவிட்டான்னு தெரியல”

மவுனம் நிலவியது.

“எனக்கும் தெரியலம்மா. நான் அவகிட்ட எதுவும் கேக்க முடியாது. அவளாச் சொன்னாத்தான் உண்டு”

“இப்படி பேசினா எப்படி சார்?”

“உங்களுக்காக பிரார்த்தனை பண்றேன்மா”

நடிகையின் அலைபேசி ஒலித்தது.

“ப்ரொட்யூசர் கூப்பிடறாரு. பேசிட்டு வர்றேன். உங்களுக்குக் காபி சொல்லிருக்கேன். யோசிச்சு சொல்லுங்க”

என் பதிலுக்கு காத்திராமல்

நடிகை வெளியேறினாள்.

பச்சைப்புடவைக்காரியை தியானித்தபடி அமர்ந்திருந்தேன்.

“காபி” குரல் கேட்டு திரும்பினேன். அந்த ஓட்டல் ஊழியைக்கு முப்பது வயதிருக்கும். பாந்தமாக இருந்தாள்.

“நன்றி” சொல்லி காபியை வாங்கினேன்.

“நடிகை புலம்புகிறாளோ?”

“தாயே நீங்களா?”

“நானேதான். எல்லாம் இவளாக வரவழைத்துக் கொண்டது. செய்ததெல்லாம் சும்மா விடுமா என்ன? இருந்தாலும் ஒரு வாய்ப்பு தர நினைக்கிறேன்”

“நான் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள்”

“உன் மனதில் நான் தோற்றுவிப்பதை சொல். குரலில் கண்டிப்பு இருக்கட்டும்”

பச்சைப்புடவைக்காரி மறைந்தாள். அவள் கொடுத்த காபியை பிரசாதமாக கருதி பருகினேன். நடிகை வந்தாள்.

“ப்ரொட்யூசரிடம் கெஞ்ச வேண்டி இருந்தது. எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்? பச்சைப்புடவைக்காரி மனசுல இரக்கம் இல்லையா?”

''பச்சைப்புடவைக்காரி மேல பழியைப் போட்டா என்ன அர்த்தம்?”

“என்ன சார் உளறுறீங்க?”

“நீங்க சொல்லாட்டா தெரியாதுன்னு நினைச்சீங்களா”

அதட்டினேன். நடுங்கினாள் நடிகை.

“மூணு வருஷத்துக்கு முன் ஒரு நடிகை இதே பிரச்னையில சிக்கினாளே... அப்போ அவ துடிச்சிப் போனா. அப்போ உங்களுக்கும் அவளுக்கும் போட்டி இருந்தது. அவள ஜெயிக்கணும்னு உங்க மனசுல வெறி இருந்துச்சி. அந்தச் சமயத்துல பத்திரிகையில உங்க பேட்டி எடுத்தாங்க. அந்த நடிகை நடிச்ச ஆபாச வீடியோ வைரலாகிக்கிட்டு இருக்கே, அது உண்மையில அவங்க நடிச்சதான்னு கேட்டாங்க.

அந்த நடிகை ஆபாசப் படத்துல நடிக்க மாட்டாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அப்போ அவ பேரு கெட்டா பட சான்ஸ எல்லாம் தட்டிப் பறிக்கலாம்னு திட்டம் போட்டீங்க. அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?

“யாரு கண்டா? எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கோ?” ன்னு பட்டும் படாமச் சொல்லிட்டீங்க. அந்த வார்த்தை அவங்க மார்க்கெட்டையே காலி பண்ணிருச்சு அதோட உடம்பும் சரியில்லாமப் போய் தவிச்சிக்கிட்டிருக்காங்க.

அந்தக் கர்மக் கணக்குதான் இப்போ வெளையாடுது”

“இப்போ என்னங்க பண்றது?”

“சொல்றது கஷ்டமா இருக்கும். ஆனா வேற வழி இல்ல.”

“ உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கேன்”

“உங்க வார்த்தையால ஒரு நடிகையோட மார்க்கெட்ட அழிச்சீங்களே அவங்கள நேர்ல பாத்து மன்னிப்பு கேளுங்க. கடன் தவணை கட்டாம அவங்க வீடும் ஏலத்துக்கு வரப் போகுது. அதக் கட்டுங்க.”

“அப்புறம்?”

“கவர்ச்சி காட்டி நடிக்காம உங்க நடிப்புத் திறமைக்கு வெளிச்சம் காட்டற படங்கள ஒத்துக்கங்க. நீங்க நல்லா நடிக்கறதப் பாக்கற மக்களுக்கு இந்த ஆபாசப் பட விவகாரம் சுத்தமா மறந்து போயிரும்.”

பிரமை பிடித்தவளாக அமர்ந்திருந்தாள்.

“இதுக்கு வேற வழி இல்லையா? லட்சக்கணக்கில பணம் செலவழிச்சி பரிகாரம் செய்யத் தயாரா இருக்கேன். அவளப் போய் நான் பாத்து... அவகிட்ட அவமானப்பட்டு...''

“இருட்டுல தொலைச்சதை வெளிச்சத்துல தேடினா கிடைக்குமா”

“என் காதலன் என்ன விட்டுப் போயிட்டானே”

“கெட்டதுலயும் நல்லது நடந்திருக்குன்னு நெனச்சிக்கங்க. இந்தப் போலியான படத்துக்கே சந்தேகப்படறவன் நாளைக்குத் தன் சந்தேகத்தால வாழ்வையே அழிச்சிருவான். உங்க மீது நிஜமா அன்பு காட்டற நல்ல காதலன் கிடைப்பான்”

எழுந்து நின்றேன். நடிகை என்னைப் பார்த்துக் கைகூப்பினாள். சைகையாலேயே விடைபெற்றேன்.

லிப்ட்டிற்குள் சென்றபோது ஓட்டல் ஊழியர் வடிவில் பச்சைப்புடவைக்காரி இருந்தாள். கால்களைத் தொட்டு வணங்கினேன்.

“நீ சொன்னபடி நடிகை செய்வாள். நல்லபடியாக வாழ்வாள். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமென சொல்.”

“என் மனதில் வஞ்சம், போட்டி, பொறாமை இருக்கிறது. அந்த நடிகைக்கு அமைந்த சூழல் போல் எனக்கும் இருந்தால் நானும் என்னுடன் போட்டி போடுபவர்களை நிர்மூலமாக்கியிருப்பேன். அப்படி ஒரு சூழல் வராததால்தான் இன்னும் நல்லவனாக இருக்கிறேன். ஒரு வரம் வேண்டும் தாயே!”

“என்ன?”

“ஒருவேளை விதிவசத்தால் அடுத்தவரைக் காயப்படுத்தி அழிக்கும் அளவிற்கு வல்லமை வந்தாலும் அப்படி எதுவும் நான் செய்துவிடாமல் இருக்கும் வரத்தைத் தரவேண்டும். அடுத்தவருக்காகக் காயப்படும் பெரிய உள்ளம் வேண்டும் தாயே! மனதில் தீமை என்ற எண்ணமே தோன்றாத அளவிற்குத் துாய்மை வேண்டும் தாயே”

பச்சைப்புடவைக்காரி பெரிதாகச் சிரித்தாள். லிப்ட் தரை தளத்தில் நின்றதும் அவள் மறைந்துவிட்டாள்.

கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி ஓட்டலை விட்டு வெளியேறினேன்.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us