Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 26

அசுர வதம் - 26

அசுர வதம் - 26

அசுர வதம் - 26

ADDED : மே 03, 2024 08:44 AM


Google News
Latest Tamil News
முயலகன் வதம்

தாருகா என்னும் வனத்தில் வாசனை மிக்க மலர்களும், சுவை மிக்க பழங்கள் நிறைந்திருந்தது. அங்கு முனிவர்கள் பலர் தங்களின் மனைவியருடன் குடில் அமைத்து வாழ்ந்தனர். அந்த வனத்தின் பெயரால் அவர்கள் 'தாருகா வனத்து முனிவர்கள்' எனப்பட்டனர்.

அவர்கள் நடத்தும் வேள்வியின் பயனாகவே உலகம் நன்றாக இருக்கிறது எனக் கருதினர். அதனால் தாங்களே உயர்ந்தவர்கள் எனக் கருதினர். இதனால் கடவுளை வழிபாடு செய்வதையே மறந்தனர். அந்த முனிவர்களின் மனைவியர்களுக்கும் தங்களை விடக் கற்பில் சிறந்தவர்கள் உலகில் இல்லை என்ற கர்வம் ஏற்பட்டது. அவர்களும் கடவுளை வழிபடும் எண்ணத்தைக் கைவிட்டனர்.

முனிவர்களுக்கும், அவர்களின் மனைவியருக்கும் ஏற்பட்ட ஆணவத்தை அழித்து நல்வழிப்படுத்த விரும்பினார் சிவன். திருவோடு ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு இனிமையாகப் பாடியபடி பிச்சைக்காரர் வடிவில் அவர்களிடம் வந்தார். அதைக் கேட்டு மயங்கிய பெண்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

பூவிலுள்ள தேனை நாடும் வண்டாக சுற்றினர். மீண்டும் பாடும்படி வேண்டினர். அவரும் பாடியபடி முனிவர்கள் தவம் புரியும் இடத்திற்கு பெண்களை அழைத்து வந்தார். தவச்சாலையில் திடீரென பாடும் சப்தம் கேட்கவே, முனிவர்களின் தவம் கலைந்தது. பிச்சைக்காரர் வடிவில் இருக்கும் சிவனின் பின்னால் தங்களின் மனைவியர் இருப்பதைக் கண்டு கோபம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவர், 'பெண்களின் மனதைக் கலைத்து, தன் வசப்படுத்திய இவனைச் சும்மா விடக் கூடாது' என்றார். அதைக் கண்டு கொள்ளாமல் பாடியபடியே சிவன் முன்னே சென்றார்.

முனிவர்கள் அனைவரும் அவரவர் மனைவியின் கையை இழுத்து தடுக்க முயன்றனர். ஆனால் கையை உதறிவிட்டு நடக்கத் தொடங்கினர். இதனால் முனிவர்களின் கோபம் இன்னும் அதிகரித்தது. அப்போது பிச்சைக்காரர் வடிவில் நின்ற சிவன் மறைந்தார். அதன் பின் முனிவர்களின் மனைவியர் சுயநினைவு பெற்றனர். தங்களின் கணவன்மார்கள் கோபத்துடன் இருப்பதைக் கண்டு பயத்துடன் தங்களின் குடிலுக்குத் திரும்பினர். இந்நிலையில் முனிவர்கள் தங்களுக்குள் ஆலோசித்தனர். பெண்களை எல்லாம் பாடி மயக்கிய பிச்சைக்காரனுக்கு பாடம் புகட்ட முடிவெடுத்தனர். அதற்காக வேள்வி நடத்த தயாராயினர்.

முனிவர்களின் அறியாமையைப் போக்க விரும்பினார் சிவன். அதற்காக திருமாலை வரவழைத்தார். மோகினி வடிவில் திருமாலும் தாருகா வனத்திற்கு புறப்பட்டார்.

அங்கு முனிவர்கள் வேள்வியில் ஈடுபட இருந்த வேளையில் மோகினியாக நுழைந்தார். அவரைக் கண்டு மயங்கிய முனிவர்கள் அவளைப் பின்தொடர்ந்தனர். அவர்களை முனிவர்களின் மனைவியரிடம் அழைத்துச் சென்றாள் மோகினி.

இதைக் கண்ட பெண்கள் தங்களின் கணவன்மார்கள் மயக்கத்துடன் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மோகினியின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சித்தும் பலனில்லை. ஆனால் சற்று நேரம் அங்கிருந்த மோகினி அங்கிருந்து மறைந்தாள்.

அதன்பின் சுயநினைவு பெற்ற முனிவர்கள், ''மோகினியை எப்படிப் பின் தொடர்ந்து வந்தோம்?' என யோசித்த போது பிச்சைக்காரனின் செயல்தான் என்பது புரிந்தது. அவனைக் கொல்ல வேண்டும் என முடிவு செய்து யாகத்தில் ஈடுபட்டனர். புலி ஒன்றை வரவழைத்து பிச்சைக்காரன் மீது ஏவினர்.

சிவன் அப்புலியைக் கொன்று, அதன் தோலை உரித்து இடுப்பில் அணிந்து கொண்டார். அதன்பின் யாகத்தில் இருந்து மான் ஒன்றை உருவாக்கி அனுப்பினர். அதை மழு என்னும் ஆயுதமாக மாற்றிக் கையில் வைத்துக் கொண்டார். இதன்பின் யாகத்தில் இருந்து பூதங்கள், பேய்களை உருவாக்கி அனுப்பினர். அவற்றின் தீய குணங்களை அகற்றி தன் படையில் சேர்த்துக் கொண்டார். அவரை அழிப்பதற்காக அபிச்சார மந்திரங்களை உச்சரித்தனர். அந்த மந்திரங்களை சிலம்புக்குள் அடைத்த சிவன் தன் காலில் அணிந்து கொண்டார்.

இறுதியாக வேள்வித்தீயில் இருந்து குள்ள அசுரன் ஒருவனை உருவாக்கி அனுப்பினர். அறியாமையின் வடிவமாக இருந்த அவன் 'முயலகன்' (அபஸ்மாரன்) எனப் பெயர் பெற்றான் நீலநிறம் கொண்ட அவன் நெருப்பு ஜூவாலைகளைப் பிச்சைக்காரர் வடிவில் நின்ற சிவன் மீது வீசினான். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனைக் கீழே தள்ளிய சிவன் தன் வலது காலால் அழுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் உயிர் விட்டான்.

அதன் பின் கடவுளை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் முனிவர்களை விட்டு விலகியது. பிச்சைக்காரர் வடிவில் நிற்பவர் சிவபெருமான் என்பதை உணர்ந்தனர். தங்களை மன்னிக்குமாறு வேண்டியதோடு சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்ட முனிவர்கள் தங்களின் மனைவியருடன் முக்தி பெற்றனர்.

-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925





      Our Apps Available On




      Dinamalar

      Follow us