ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 33
ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 33
ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 33
ADDED : ஏப் 26, 2024 03:02 PM

மண்டோதரி என்ற மாதரசி
அன்பு மகன் இந்திரஜித் கொல்லப்பட்டான் என்பதை தாயான மண்டோதரியால் ஏற்க முடியவில்லை. இவனுக்கு முன்பு மற்றொரு மகனான அக்ககுமாரன் அநியாயமாக தரையில் தேய்த்து அழிக்கப்பட்டான் என்ற துக்கம் ஆறுவதற்குள் இன்னும் ஒரு சோகம்.
ராவணனின் தளபதிகள் பலர் ராமரின் வானர படைகளால் வீழ்த்தப்பட்டனர். அதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இந்த இழப்புகளை எல்லாம் விஞ்சும் வகையில் சொந்த மகன்கள் இருவர் பலியானது ராவணனின் நெஞ்சில் உறைக்காதா? இந்த உயிர் இழப்புகளை விடவா, சீதை முக்கியமாகி விட்டாள்?
இந்திரஜித் உடலின் மீது விழுந்து அழுதாள் மண்டோதரி. அருகே நின்ற ராவணனையும் வெறுப்பு உமிழும் கண்களால் பார்த்தாள். அந்த இலங்கை வேந்தனும் கலங்கிப் போனான். ''உனக்கென சொந்தம் வேண்டாமா... சீதை மட்டும் போதுமா... அற்ப மானிடப் பெண், எளிதில் இணங்கி விடுவாள் என தப்புக் கணக்குப் போட்டு விட்டாயே, ராமனையும் எளிதாக அடிமைப்படுத்தி விடலாம் என ஊமைக் கனா கண்டாயே என் கண்ணாளா! அவனுடைய துாதன், உன் எண்ணப்படி அற்பக் குரங்கு, என்ன ஆட்டம் ஆடியது! உன் எதிரிலேயே வாலை ஆசனமாக்கி அமர்ந்ததே, அப்போதே ராமனின் பலத்தை நீ யூகிக்க வேண்டாமா? அடிவருடிகள் உசுப்பேற்றிவிட காம போதை தலைக்கேறி அழிவை நோக்கி பயணிக்கிறாயே...'' என பார்வையாலே சுட்டெரித்தாள்.
ராவணனால் மனைவியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையைத் திருப்பிக் கொண்டான். 'நம் பிள்ளைகளின் நிலை உனக்கும் வந்தால் தான் சீதை மீதிருக்கும் பித்து போகுமோ? அந்த நாளும் வந்திடுமோ பரமேஸ்வரா... கயிலைநாதா... அப்படி ஒரு துக்கம் என்னைத் தாக்க வேண்டாம். அதற்குள் இவரது மனதை மாற்றி விடு' என வேண்டினாள் மண்டோதரி.
தம்பியான விபீஷணனின் பிரிவில் இருந்தே அவன் நல்ல பாதைக்குத் திரும்பியிருக்க வேண்டும். இன்னொரு தம்பியான கும்பகர்ணனின் யோசனையைக் கேட்டிருக்க வேண்டும். போர்க்களம் சென்று மீளாத தளபதிகளின் இறப்பும் புத்தியில் உறைத்திருக்க வேண்டும். ஆனாலும் தன் எண்ணம் எப்படியும் ஈடேறும் என்ற ஆணவமே அழிவுக்கு வழிகாட்டியது.
மண்டோதரி சராசரி மனைவியாக இருந்தாள். கணவன் செய்தது குற்றம் என்றாலும் அவன் மனம் மாறுவான் என எதிர்பார்த்தாள். சீதை அவனை விரும்பவில்லை என்ற வகையில் ஆறுதல் கொண்டிருந்தாள். ராவணனுக்கு சலிப்பு ஏற்பட்டு விடாதா, தோல்விகளால் அவமானப்படும் அவன் சீதையை விட்டுவிட மாட்டானா என ஏங்கினாள். அதனால்தான் கணவனை தட்டிக் கேட்கவில்லை. அவனது ஆசைக்கு இணங்க ஆயிரம் பெண்கள் இருந்தாலும், மனைவி என்ற அந்தஸ்து தனக்கு மட்டுமே இருப்பதாலும், பேர் சொல்லும் பிள்ளையான இந்திரஜித்தை பெற்றதாலும், தனக்கே ராவணன் முக்கியத்துவம் அளிப்பதாக நம்பினாள்.
தன் பேச்சை ராவணன் கேட்க மாட்டான் என்றாலும் குற்றத்தை உணர்ந்து ராமனிடம் சீதையை ஒப்படைப்பான் என அவள் காத்திருக்கக் காரணம் ராவணனின் தம்பியான விபீஷணன். ஆரம்பத்தில் இருந்தே அண்ணனின் செயல்களை அவன் ஏற்கவில்லை. அதுவும் அநியாயத்தின் உச்சமாக சீதை கடத்தப்பட்டதை கண்டித்தான். அப்போதாவது சீதையை விடுவிப்பான் என எதிர்பார்த்திருந்த சமயத்தில், அண்ணனை விட்டு விலகி எதிரியான ராமனையே சரணடைந்தான் விபீஷணன். எப்படி ராவணனிடம் இருந்து நல்ல குணங்கள் விலகியதோ அதைப் போல நல்ல மனிதர்களும் விலகுவது அவளுக்கு கவலையளித்தது.
கும்பகர்ணனும் நியாயத்துக்குப் புறம்பாக ராவணன் நடக்கிறான் என சொன்ன போது, ''எனக்கே புத்தி சொல்கிறாயா?'' எனக் கேட்டான். இறுதியில் கும்பகர்ணனையும் போர்க்களத்தில் பறி கொடுத்தான். மண்டோதரிக்கு இப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஒருசமயம் காலகேயரும், தைத்யரும் ராவணனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டனர். அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இருந்தவன் வித்யுஜ்ஜிவ்ஹன். இவன் ராவணனின் தங்கையான சூர்ப்பனகையின் கணவன். தன் எதிரிகளுக்கு சாதகமாகவும், தனக்கு பாதகமாகவும் செயல்படுகிறான் என அறிந்து கோபம் கொண்டான் ராவணன். தங்கையின் கணவன் என்று கூட கருதாமல் வித்யுஜ்ஜிவ்ஹனைக் கொன்றான். கணவனை இழந்த சூர்ப்பனகை தன்னைக் கைம்பெண்ணாக்கிய அண்ணன் சந்தோஷமாக வாழக் கூடாது என முடிவெடுத்தாள். விஷமத்தனமாக சீதையின் அழகை விவரித்து அவனைக் காமுகனாக மாற்றினாள்.
இதில் ஒரே ஆறுதலான விஷயமாக சீதையின் மனதை மாற்றுவதற்காக, விபீஷணனின் மகளான திரிசடையை அசோகவனத்தில் காவல் காக்க நியமித்தது. ஆனால் தன் தந்தையைப் போலவே அவளும் நற்பண்பு கொண்டவள் என்பதால் மண்டோதரி நிம்மதி அடைந்தாள்.
ஆனால் ராவணன் மோகத்தில் இருந்து மீளவில்லை, அதோடு ராமனுடன் போர் புரிந்து யுத்த களத்தில் இருந்தும் மீளவில்லை. கணவன் இறந்து விட்டான் என அறிந்த மண்டோதரி கதறினாள். 'தவறை உணராமல் மரணத்தைத் தழுவினாயே' என்றாள்.
'உலகின் இயல்பை அப்படியே உணரும் தன்மை யாருக்கும் இல்லை. உலகத்தையே ஒடுங்கச் செய்யும் ராவணனே, நீயும் மேலுலகம் புகுந்தாயோ? மன்மதன் கரும்பு வில்லால் தொடுத்த மலர் அம்புகள் தானே உன் உடலை இதுநாள் வரை தொட்டன! இப்போதோ மானிடர் எய்த அம்பால் உயிர் பிரிந்தீரே' என புலம்பினாள்.
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார்
அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க
வேழ வில்லால்
நார நாள் மலர்க் கணையால் நாள் எல்லாம்
தோள் எல்லாம் நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனிதனார்
அழித்தனரே வரத்தினாலே.
-கம்பர்
கணவரின் சடலத்தின் மீது விழுந்தாள். மரணம் மட்டுமே கணவனைத் திருத்த வேண்டியிருந்த விதியை நொந்தபடி உயிர் நீத்தாள். (கற்பில் சிறந்த ஐவரை வணங்குவது வழக்கம். அவர்கள் சீதை, வாலியின் மனைவி தாரை, ராமரால் சாப விமோசனம் பெற்ற அகலிகை, பாண்டவரின் மனைவியான பாஞ்சாலி, ராவணனின் மனைவி மண்டோதரி)
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695