Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 22

அசுர வதம் - 22

அசுர வதம் - 22

அசுர வதம் - 22

ADDED : மார் 22, 2024 09:22 AM


Google News
Latest Tamil News
வல்லாள கண்டன் வதம்

வல்லாள கண்டன் என்னும் அசுரன் தவத்தில் ஈடுபட்டு சிவபெருமானை வேண்டினான். மனம் இரங்கிய சிவன், ''என்ன வரம் வேண்டும்?''எனக் கேட்டார். ''ஆயுதத்தால் மரணம் எனக்கு வரக் கூடாது. பூலோகத்தில் ஏழு பிறவிகள் எடுத்து முடித்த பெண்ணால் மட்டுமே மரணம் நேர வேண்டும். விரும்பிய நேரத்தில் விரும்பிய உருவத்தை நான் எடுக்க வேண்டும்'' எனக் கேட்க சிவனும் கொடுத்தார். அதன்பின் அசுரனான தன்னை எந்த பெண்ணும் கொல்ல முடியாது எனக் கர்வம் கொண்டான். தன்னை எதிர்த்தவர்களை கொல்லத் தொடங்கினான். பாதிக்கப்பட்டவர்கள் முறையிட, அசுரன் விரைவில் அழிவான் என சிவன் உறுதியளித்தார்.

வல்லாள கண்டனுக்கு நுாற்றியெட்டு மனைவி இருந்தும், குழந்தை இல்லை. அதனால் பார்க்கும் பெண்களை எல்லாம் மனைவியாக்க துடித்தான். அனைவரும் பார்வதி அம்மனிடம் காப்பாற்றும்படி வேண்டினர். அப்போது சிவன், 'மலைராஜனின் மகளான பார்வதியே.... நீ பூலோகத்தில் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன் என பிறவிகள் எடுத்து விட்டாய். அடுத்த பிறவி எடுக்கும் போது நான் சொல்லும் வடிவில் செல்வாயாக'' என்றார் சிவபெருமான்.

இந்நிலையில் தனக்கு ஐந்து தலைகள் இருப்பதால், தானும் சிவனுக்குச் சமம் என கர்வப்பட்ட பிரம்மா, அலட்சியத்துடன் செயல்பட்டார். இதனால் கோபம் கொண்டு பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எறிந்தார் சிவன். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனின் கைகளில் வந்து ஒட்டிக் கொண்டது. அதை அகற்ற எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாயின. அந்தத் தலையை கையிலேயே வைத்திருக்கும்படி பார்வதி சொல்ல, சிவனும் அப்படியே செய்தார். அதை அவள் மண்டையோடாக மாற்றினாள். தன் கணவரின் தலையை மண்டை ஓடாக மாற்றிய பார்வதி மீது சரஸ்வதிக்கு கோபம் வந்தது. பூமியில் அகோர வடிவில் பிறந்து அலைந்து திரியும்படி பார்வதிக்கு சாபம் கொடுத்தாள்.

சரஸ்வதியின் சாபத்தால் அகோர வடிவில் காளியாகப் பிறந்து பூமியில் சுற்றினாள் பார்வதி. அதே வேளையில் கையில் ஒட்டிய மண்டை ஓட்டுடன் சிவனும் சுற்றினார். சிவனுக்குக் கிடைத்த உணவை எல்லாம் மண்டையோடு சாப்பிட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டது. சிவன் பிச்சை எடுக்கத் தொடங்கினார். கொடூரமான காளி உருவத்துடன் வந்த பார்வதியும், பிச்சாடனர் உருவில் இருந்த சிவனும் ஓரிடத்தில் சந்தித்தனர். காளி வடிவில் இருந்த பார்வதியிடம் பிச்சை கேட்டார் சிவன். அவளும் கொடுத்தாள். பிரம்மாவின் மண்டையோடு, அந்த உணவை சாப்பிட்டது. அடுத்த முறை காளி உணவளித்த போது பாதி உணவை கீழே விழச் செய்தாள். உணவை சாப்பிட ஆசைப்பட்டது மண்டையோடு. இதனால் தரையில் விழுந்த உணவைச் சாப்பிட எண்ணி சிவனின் கையை விட்டு இறங்கியது.

அப்போது காளி பிரமாண்டமாக வடிவெடுத்து கீழே விழுந்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்த மண்டையோட்டின் மீது காலை வைத்து அழுத்தி பூமிக்குள் தள்ளினாள்.

இதன்பின் சிவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகியது. காளியும் இயல்பான நிலைக்கு மாறினாள். தன் கையில் ஒட்டிய மண்டையோடு நீங்கியதால் சிவன் நடனமாடினார்.

அதைப் பார்த்த காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி ஏற்பட்டது. அதில் காளி தோல்வியடைந்தாள். இதனால் தன்னையே எரித்துக் கொண்டாள். அவளின் அங்கம் (உடல்) முழுவதும் வெந்து சாம்பலானது. சிவன் அதற்கு உயிர் கொடுத்து 'அங்காளம்மன்' எனப் பெயரிட்டார்.

இதற்கிடையில் பெண்களிடம் மோகமுற்று அலைந்த வல்லாள கண்டன், புதிதாக தோன்றிய அங்காளம்மனைக் கண்டதும் ஆசைப்பட்டான். தன்னை சிவனாக மாற்றிக் கொண்டு அவள் முன் வந்தான். வந்திருப்பவன் அசுரன் வல்லாள கண்டன் என்பதை உணர்ந்த அங்காளம்மன் சங்கு, அம்பு, வாள், வில், திரிசூலத்தால் தாக்கினாள்.

அசுரனுக்குச் சிறிதும் காயம் ஏற்படவில்லை. அப்போதுதான் அங்காளம்மனுக்கு ஆயுதங்களால் அவனுக்கு அழிவு நேராது என வரம் பெற்ற விஷயம் நினைவுக்கு வந்தது. உடனே அவள் காலால் எட்டி உதைத்தாள். சிவன் உருவில் நின்ற அசுரன் கீழே சாய்ந்தான். காலால் அழுத்தி தன் கூரிய நகத்தால் அவனது மார்பை பிளந்தாள். உயிர் பிரியும் போது வணங்கிய அசுரன், ''உனக்கு என்ன வேண்டும்?'' எனக் கேட்டாள். ''உலகைக் காக்கும் அன்னையான தங்கள் மீது மோகம் கொண்ட எனக்கு தண்டனையாக, என் தோலை உரித்தெடுத்து பம்பையாக்கி பூஜைக்கு பயன்படுத்துங்கள்'' என்றான். அம்மனும் சம்மதித்தாள்.

அசுரனின் உடல் தோலைக் கொண்டு 'பம்பை' என்னும் இசைக்கருவியாக்கினாள். அதுவே அங்காளம்மன் வழிபாட்டில் பயன்படுகிறது.

--தொடரும்

மருத்துவச்சி அம்மன்

குழந்தைப் பேறு இல்லாத அசுரனான வல்லாள கண்டன் தவம் புரிந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த சிவன், ''என்ன வரம் வேண்டும்?''எனக் கேட்க, அவன், 'என் மனைவியைக் கேட்கலாம்' என்றான். அவளோ, ''தனக்குப் பிறக்க இருக்கும் குழந்தை பலமுள்ளவனாக இருக்க வேண்டும்''எனக் கேட்டாள். அதற்கு சிவனும் சம்மதித்தார். அந்தக் குழந்தையால் உலகிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மருத்துவச்சி வடிவில் வந்த அங்காளம்மன் கருவிலேயே தாயுடன் சேர்த்து குழந்தையை அழித்தாள். அதன் பின் அசுரனையும் அழித்தாள். அங்காளம்மன் வழிபாட்டில் இந்த வரலாறு பம்பையுடன் இசைப்பாடலாக பாடப்படுகிறது.

பம்பை வாத்தியம்

பம்பை என்பது தோலால் ஆன கருவி. தோல் இசைக் கருவிகளை 'அவனத்த வாத்தியம்' (Percussion Instrument) என்பர். 'அவனத்த' என்பதற்கு 'மூடிய' என்பது பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு புறத்திலும் முரட்டுத் தோல் மூடியிருக்கும். மரத்துக்குப் பதிலாக பித்தளையிலும் இதைச் செய்வதுண்டு.

தேனி மு.சுப்பிரமணி

99407 85925





      Our Apps Available On




      Dinamalar

      Follow us