Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அபிராமி நிகழ்த்திய அற்புதம்

அபிராமி நிகழ்த்திய அற்புதம்

அபிராமி நிகழ்த்திய அற்புதம்

அபிராமி நிகழ்த்திய அற்புதம்

ADDED : பிப் 09, 2024 11:33 AM


Google News
Latest Tamil News
சோழ நாட்டில் காவிரிக்கரையில் அமைந்த சிவத்தலம் திருக்கடையூர். இங்கு வாழ்ந்த சுப்பிரமணியம் (அபிராமி பட்டர்) என்பவர் சாக்த வழிபாட்டில் ஈடுபட்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசிக்கும் பேறு பெற்றவர் இவர். இவரது தெய்வீக அனுபவத்தை உணராதவர்கள் 'பித்தர்' என வசை பாடினர்.

இவரது காலத்தில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மகாராஜா ஆட்சி செய்தார். ஒருநாள் தை அமாவாசையன்று தரிசனத்திற்காக திருக்கடையூர் கோயிலுக்கு வந்தார் மன்னர். அப்போது அபிராமி பட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் தியானத்தில் இருப்பதைக் கண்டு, “இவர் யார்?” எனக் கேட்டார் மன்னர்.

அங்கிருந்தவர்கள் “இவர் ஒரு பித்தர்” என வீண்பழி சுமத்தினர். ஆனால் மன்னர் நம்பவில்லை. தரிசனம் முடித்து திரும்பும் போது,''பட்டரே! இன்று என்ன திதி?'' எனக் கேட்டார். பரவச நிலையில் இருந்த அபிராமி பட்டர், “இன்று பவுர்ணமி” என பதிலளித்தார்.

மன்னர் சென்ற பின்னர் தியானத்தை விட்டு எழுந்த பட்டர் நடந்ததை அறிந்து வருந்தினார். ஊர் பழிப்பதை நிரூபிப்பது போல தானும் தவறாக நடந்து கொண்டதை எண்ணி வருந்தினார். பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என அம்பிகையை வேண்டினார். அபிராமி சன்னதியின் முன் ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி நெருப்பு மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நுாறு கயிறுகளாலான உறியையும் கட்டி அமர்ந்து கொண்டார்.

அம்பிகையின் அருள் கிடைக்காவிட்டால் உயிர் துறப்பேன்'' என சபதமிட்டு அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். 79வது பாடலான

“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்

பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”

என பாடிய போது தன் 'தாடங்கம்' என்னும் காதணியை கழற்றி வானில் தவழச் செய்தாள் அபிராமி. அது வானில் பவுர்ணமி நிலவாக பிரகாசித்தது. அப்போது ''பட்டரே! நீர் வாய் தவறி சொன்னாலும் அதையே உண்மை என நிரூபித்து விட்டேன். பாடலைத் தொடர்ந்து பாடுக'' என அபிராமி ஆணையிட்டாள்.

இந்த நுாறு பாடல்கள் தொகுப்பு 'அபிராமி அந்தாதி' எனப் பெயர் பெற்றது. மகிழ்ச்சியடைந்த சரபோஜி மகாராஜா ஏராளமான பொன், பொருளை அபிராமி பட்டருக்கு மானியமாக வழங்கி கவுரவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us