Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 15

அசுர வதம் - 15

அசுர வதம் - 15

அசுர வதம் - 15

ADDED : பிப் 02, 2024 01:50 PM


Google News
Latest Tamil News
கூச்மாண்டன் வதம்

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து மரணமில்லா வாழ்வு தரும் அமிர்தம் வெளியானது. அமிர்தத்தை உண்பதில் தேவர்கள், அசுரர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. கடைசியில் அதுவே போராக மாறியது.

திருமால் அங்கே மோகினியாக எழுந்தருளி அமிர்த கலசத்தை கைப்பற்றினார். ''தேவர்கள், அசுரர்கள் என தனித்தனி வரிசையாக அமருங்கள்; நான் அமிர்தத்தை பகிர்ந்து அளிக்கிறேன்'' என்றார். ஆனால் அசுரர்களைப் புறக்கணித்து தேவர்களுக்கு மட்டும் கொடுத்தார்.

கோபம் கொண்ட அசுரர்களில் சிலர் பிரம்மா, திருமால், சிவனிடம் தவத்தின் மூலம் வரம் பெற்று தேவர்களுக்கு எதிராக செயல்பட்டனர். அதில் கூச்மாண்டன் என்பவன் முக்கியமானவன்.

மகாலட்சுமியின் வடிவில் உள்ள கூச்மாண்டா தேவியின் பக்தன் இவன்.

கூச்மாண்டம் என்றால் பூசணிக்கொடி. இக்கொடியைப் போல அவனுக்கு உடலெங்கும் முடிகள் இருந்ததால் இப்பெயர் வந்தது. திருமாலை வேண்டி அரிய வரங்கள் பெற்றான். அதன் பின் தேவர்களை சிறைபிடித்து துன்புறுத்தினான். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவன்பிடியில் சிக்கினர்.

தேவர்களுக்கு இடையூறு செய்தாலும் திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக அன்றாட வழிபாடு செய்தான். ஒருநாள் தேவலோகம் சென்ற அசுரன் தேவலோக மங்கையரை சிறையில் அடைத்தான். அதை தடுக்க முடியாமல் வருந்திய இந்திரன், படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் ஆலோசித்தான். ''திருமாலிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும்'' என்றார் பிரம்மா.

திருமாலை அணுகிய போது அவர், ''கூச்மாண்டனுக்கு எதிராக போரைத் தொடங்குங்கள். நானும் துணைநிற்கிறேன்” என்றார். இந்திரனும் போருக்குப் புறப்பட்டான். தேவலோகப் படையினர் வருவதை அறிந்த கூச்மாண்டன் ஆரவாரித்தான். போர்க்களத்தில் அசுரனைக் கண்ட தேவலோகப் படையினர் அஞ்சி பின்வாங்கினர்.

வெற்றிக்கு உதவும்படி திருமாலை வேண்டினான் இந்திரன். அங்கு தோன்றிய திருமால், தேவலோக படைக்குத் தாமே தலைமையேற்பதாக தெரிவித்தார். அதன்பின் அவர்கள் மகிழ்ச்சியுடன் போர்க்களத்தில் முன்னேறினர். அசுரர் அனைவரையும் அழித்தனர். கடைசியாக கூச்மாண்டன் மட்டும் தனித்து நின்றான்.

தனக்கு எதிராக திருமாலே போரிடுகிறாரே என கூச்மாண்டன் வருந்தினான். இருந்தாலும் அவன் சளைக்காமல் போரிட்டான். ஒரு கட்டத்தில் திருமால் எய்த அம்பு அசுரனின் மார்பைத் துளைத்தது. உயிருக்கு போராடினான். அப்போது செய்த கொடுஞ்செயல்கள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன. தவறை உணர்ந்து திருமாலைச் சரணடைந்து, “ பாவத்தில் இருந்து மீட்டு நற்கதி அருளுங்கள். அனைவரும் என்னை நினைவுகூரும் விதத்தில் ஏதாவது வரம் தாருங்கள்” என்றான்.

“மக்கள் கொண்டாடும் விதத்தில் நற்செயல் ஏதும் செய்யவில்லையே'' என்றார் திருமால்.

அதற்குக் கூச்மாண்டன், “நான் தேவர்களுக்கு துன்பம் இழைத்தது உண்மையே. ஆனால் பூலோக மக்களுக்கு தீங்கு செய்யவில்லை'' என்றான்.

“நன்மையே செய்யாத நிலையில், உன்னை நினைவில் வைக்க வேண்டும் என விரும்புகிறாயே... இது சரியா?” எனக் கேட்டார் திருமால்.

''நான் நேரடியாக நன்மை செய்யாவிட்டாலும், எனக்குப் பயந்தே அசுரர்கள் அனைவரும் மக்களுக்கு துன்பம் தராமல் ஒதுங்கியிருந்தனர். அப்படியிருக்க நான் நன்மையே செய்ததில்லை என எப்படிச் சொல்வீர்கள்?” என மறுத்தான்.

அதை ஏற்ற திருமாலும் அசுரனிடம், '' பூலோக மக்கள் வீட்டிலுள்ள திருஷ்டி தீர வாசலில் பூசணிக்காயைக் கட்டித் தொங்க விடும் போது அதில் உன் உருவத்தை வரைவர். தீயசக்திகளை தன்னுள் வாங்கிக் கொள்ளும் அக்காயினைத் தலையைச் சுற்றி விட்டு உடைப்பர்'' என்றார்.

இதைக் கேட்ட கூச்மாண்டன் மகிழ்ச்சியுடன் உயிர் விட்டான். அவனிடம் அடிமையாக கிடந்த ஆயிரம் தேவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். புதுமனை புகுதல், வியாபாரம் தொடங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது கூச்மாண்டன் நினைவாக பூசணிக்காயை வாசலில் கட்டுவது, உடைப்பது இன்றும் பின்பற்றப்படுகிறது.

கூச்மாண்டா தேவி

பிரளயம் ஏற்பட்டு உலகம் முழுவதும் அழிந்தது. அதைத் தொடர்ந்து எங்கும் இருள் சூழ்ந்தது. அதைக் கண்ட பராசக்தி புன்னகைக்க இருள் விலகி எங்கும் ஒளி நிறைந்தது. புன்னகையுடன் தோன்றிய அந்த தேவியே கூச்மாண்டா தேவி எனப்படுகிறாள். இவளின் புன்சிரிப்பு உலகையே காத்ததாக தேவி பாகவதம் போற்றுகிறது.

புலி வாகனத்தில் பவனி வரும் இவளை 'படைப்பின் சக்தி' என்றும் எட்டுக் கைகளைக் கொண்ட இவள் கமண்டலம், தாமரை, ருத்ராட்ச மாலை, வில், அம்பு, சக்கரம், தந்திரம், அமுதம் ஏந்தியபடி அருள்புரிகிறாள்.



-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925





      Our Apps Available On




      Dinamalar

      Follow us