ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 20
ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 20
ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 20
ADDED : ஜன 12, 2024 04:34 PM

கபந்தனான கந்தர்வன்
ராமனின் வனவாசத்தின் பிரதான பலன் அரக்கர்களின் அழிவுதான் என்றாலும், சில அரக்கர்கள் அவனிடம் சாப விமோசனம் பெற்றனர். அவர்களில் கபந்தன் என்பவனும் ஒருவன்.
சீதையைத் தேடி அலைந்த ராமனும், லட்சுமணனும் அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தனர். அங்கேதான் கபந்தன் வசித்தான். 'கபகப என்று பசிக்கிறது' என்னும் சொற்றொடரே இவனால் ஏற்பட்டதுதான். அதாவது தாங்க முடியாத பசி வந்தால் வாய்க்குள் உணவை இட்டு வயிற்றுக்குள் போவதற்குக்கூட காத்திருக்காமல் நேராக வயிறே சாப்பிட்டால் என்ன எனத் தோன்றுமே... இந்த உணர்வுக்கு காரணமே இவன்தான்.
முற்பிறவியில் விசுவாவசு எனப் பெயர் பெற்றிருந்தான் இவன். தனு என்னும் கந்தர்வனின் மகன். தன் குலப்பண்பைக் கைவிட்டு அனாவசியமாகப் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ந்தான் விசுவாவசு. பார்க்க அழகனாக இருந்தாலும், முனிவர்கள், சாதுக்களை அவதிக்குள்ளாக்கி மகிழ்வதில் அரக்கனாக நடந்தான். நாளடைவில் கொடுமை அதிகரிக்கவே முனிவர்கள் சிலர் கந்தர்வனான இவனை அரக்கனாக மாறும்படி சபித்தனர்.
விகாரமான தோற்றத்தால் காண்போரின் வெறுப்புக்கு ஆளான விசுவாவசு, முனிவர்களிடம் காலில் விழுந்து சாப விமோசனம் கேட்டான். 'நல்லவன் தீண்டினால், தீயவனும் திருந்துவான், ஒழுக்கம் பெறுவான்' என்ற உண்மைக்கேற்ப தசரதரின் புதல்வனான ராமன் உன் தோள்களை வெட்டி வீழ்த்தும் போது மீண்டும் விசுவாவசு ஆவாய்' என்றனர்.
இதன்பின் விசுவாவசு கொடிய செயல்களில் தீவிரமாக ஈடுபட்டான். மேலும் செருக்கும் அதிகரித்தது. தேவலோகம் சென்று இந்திரன் மீது போர் தொடுத்தான். தேவர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் தலைவனான இந்திரன் வஜ்ராயுதத்தால் அரக்கனின் தலையில் அடிக்க, அது அவனுடைய வயிற்றுக்குள் போனது. அதாவது கண், காது, மூக்கு, முக்கியமாக வாய் எல்லாம் வயிற்றுக்குள்!
' பசித்தால் இரையை நேரடியாக வயிற்றுக்குள் இட்டு நிரப்பிக்கொள்' என்று சொல்லி கேலி செய்தான் இந்திரன். காட்டில் அலையும் உனக்கு ராமனால் நற்கதி கிடைக்கும் என முனிவர்களைப் போலவே இந்திரனும் விமோசனம் அளித்தான்.
அன்று முதல் காட்டுக்குள் திரிந்த கபந்தன் விலங்குகளை அடித்து வயிற்றுக்குள் திணித்துக் கொண்டு பசி போக்கினான். அந்த வழியே சீதையைத் தேடியபடி ராமனும், லட்சுமணனும் வந்தனர். உடலாலும், மனதாலும் சலிப்புற்றிருந்தான் ராமன். ஆறுதல் சொல்லி தேற்றியபடி உடன் வந்தான் லட்சுமணன். அப்போது திடீரென இரண்டு கைகள் அவர்களைச் சுற்றி வளைத்து, மடக்கி எங்கோ நகர்த்துவதை உணர்ந்தனர். தடுமாறிய அவர்கள் சட்டென உதறி நிமிர்ந்தனர். வித்தியாசமான உருவம் கொண்ட கபந்தனைக் கண்டனர். குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சூழலைப் புரிந்து கொண்ட லட்சுமணன், 'அண்ணலே, இவன் ஓர் அரக்கன். நம்மைத் துன்புறுத்துவதை விடவும் அப்படியே உணவாக்கிக் கொள்பவன்' எனத் தெரிகிறது. கோர வடிவாக இவனுக்கு வயிற்றில் வாய் இருப்பதை பாருங்கள். இவனை இப்போதே தீர்த்து கட்டுவோம்' என்று சொல்லி சுதாரித்துக் கொண்டான்.
ஆனால் மனைவியைப் பறிகொடுத்த ஆதங்கத்தில் உயிர் வாழ ஆசை அற்றவனாக இருந்தான் ராமன். ' எனக்கு வாழ்வதில் விருப்பமில்லை. வீண் பழி சுமந்தவனாக நிற்கிறேன். காதல் மனைவியைக் காத்துக் கொள்ளத் தெரியாதவனாக மதி இழந்து விட்டேன். சீதை வருவாளா என்ற சந்தேகம் எழுகிறது. அவளின்றி அயோத்தி திரும்ப விரும்பவில்லை. ஆகவே இந்த அரக்கனுக்கு உணவாகிறேன். நீ தப்பித்துச் செல்'' என விரக்தியாகக் கூறினான்.
பதறிய லட்சுமணன். 'ஐயனே, என்ன பேசுகிறீர்கள்? துன்பங்களை வென்றவர்தான் வீரர். அண்ணியாரை பிரிந்திருப்பது தற்காலிகமானதே. விரைவில் ராவண வதம் செய்து அண்ணியாரை மீட்பீர்கள். நானும் உறுதுணையாக இருப்பேன். கானகம் புறப்பட்டபோது அன்னையார் சுமித்திரை கூறிய அறிவுரைகள் இன்றும் நினைவில் உள்ளது. 'வனவாசத்தில் உன் அண்ணன் இடும் ஏவல்களை உடனுக்குடன் செய். பதினான்கு ஆண்டுகள் கழித்தபின் ராமனுடன் திரும்பி வா. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதத்தால் ராமனால் வரவில்லை என்றால், நீயும் அயோத்தி வராதே. ராமனுக்கு முன்பு உன் உயிரைப் போக்கிக் கொள். அதுதான் உத்தமமான தம்பிக்கு அழகு' என்று சொல்லியே அனுப்பினார்கள். அவர்கள் சொன்னபடி தங்களை அரக்கனுக்கு
பலி கொடுத்து விட்டு நான் மட்டும் அயோத்தி திரும்புவேன் என நினைத்தீர்களா? தாயார் சொன்னது போல, அதை விடக் கேவலம் என்ன வேண்டும்? அண்ணியாரை ராவணனிடம் பறி கொடுத்து விட்டு, தங்களையும் இந்த அரக்கனிடம் பலி கொடுத்து விட்டு நான் மட்டும் திரும்புவேனா?
'அதையும் விட கேவலம் இந்த பூதத்திற்கா நீங்கள் பலியாக வேண்டும்? இதுநாள் வரை நீங்கள் வதம் புரிந்த அரக்கர்களின் பட்டியலால் உங்களின் புகழ் வானோங்கி நிற்கிறது. இந்த அற்ப பூதத்துக்கு இரையாகி இழிவுக்கு ஆளாகாதீர்கள். இதோ... இப்போதே இவன் தோள்களை வெட்டி எறிகிறேன்'' என்றான் லட்சுமணன்.
தம்பியளித்த ஊக்கத்தால் ராமன் வாளுடன் அரக்கன் முன் சென்றான்.
'யார் நீங்கள்?' எனக் கனத்த குரலில் கேட்டான் கபந்தன். ஆத்திரமுடன் அவர்களை வயிற்றால் விழுங்க முன்னே பாய்ந்தான்.
உடனே சகோதரர்கள் அவனது தோள்களை வெட்டி வீழ்த்தினர். கபந்தன் உருமாறி, கந்தர்வ சுயரூபம் கொண்டான். 'அண்ணலே, சாபம் தீர்க்க வந்த தெய்வமே... துன்புறுத்திய என்னை மன்னியுங்கள். உலகையே படைத்தவனே! அழிவில்லாத அறத்துக்குச் சான்றாக விளங்குபவனே! தேவர்களின் ஒப்பற்ற தவத்தின் பயனாக அவதரித்தவனே! பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மூலமானவனே!
ஈன்றவனோ எப் பொருளும் எல்லை தீர்நல்
அறத்தின்
சான்றவனோ தேவர் தவத்தின் தனிப் பயனோ
மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ
தோன்றி அரு வினையேன் சாப
துயர்துடைத்தாய்
-கம்பர்
என ராமனைத் துதித்தபடி நிம்மதியோடு கந்தர்வ உலகம் புறப்பட்டான்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695