Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கேட்டுப்பெறுவாள் கேளாமல் தருவாள்

கேட்டுப்பெறுவாள் கேளாமல் தருவாள்

கேட்டுப்பெறுவாள் கேளாமல் தருவாள்

கேட்டுப்பெறுவாள் கேளாமல் தருவாள்

ADDED : டிச 15, 2023 11:17 AM


Google News
Latest Tamil News
அம்பிகை என்பவள் சக்தி. அந்த சிவத்துக்கே சக்தியாவாள். அதனால்தான் அவளை லோகமாதா என தேவி புராணம் போற்றுகிறது.

தலங்கள் தோறும் அபிராமியம்பாள், கற்பகாம்பாள், காமாட்சியம்பாள், காளிகாம்பாள், கருமாரி, அகிலாண்டேஸ்வரி, மீனாட்சியம்பிகை, காந்திமதி, கோமதி என எத்தனையோ பெயர்களுடன் திகழ்ந்தாலும் அம்பிகை என்பவள் மகாசக்தியாகவும், உலகாளும் சக்தியாகவும் போற்றப்படுகிறாள். வணங்கப்படுகிறாள். இல்லத்தில் சுபிட்சத்தை மலரச் செய்வாள்.

தம்பதிகளிடையே ஒற்றுமையை மேம்படுத்திடுவாள். வாழ்வில் சந்தோஷமும் அமைதியும் மலரச் செய்வாள். அகிலத்தையும் காத்தருளும் அம்பிகை, நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருளுவாள். தன் பக்தர்களிடம் தனக்கு தேவையானதை உரிமையுடன் கேட்டுப்பெறுவாள் என்பதற்கு கீழ்க்கண்ட நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது திருமீயூச்சூர் தலம். இங்குள்ள சுவாமியின் பெயர் மேகநாதர். அம்பிகையின் பெயர் லலிதாம்பிகை. அகஸ்தியருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை ஹயக்ரீவர் இங்கு தான் உபதேசம் செய்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். கலியுக ஆதிசங்கரர் காஞ்சி மஹாபெரியவருக்கு மிகவும் பிடித்தமான தலம் இதுவே.

பெங்களூருவில் வசித்த மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பின்னரே பிற பணிகளைத் தொடங்குவார்.

ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் தோன்றிய அம்பிகை, எல்லா நகைகளும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு கொலுசு மட்டும் இல்லை. நீதான் எனக்கு செய்து தர வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தாள்.

விழித்தெழுந்த பக்தை கனவில் வந்து காட்சியளித்த அம்பிகை யார், என்னிடம் வந்து ஏன் கேட்க வேண்டும் எனக் குழப்பம் அடைந்தார்.

வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த பக்தைக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பிகையைப் பற்றி பலரிடமும் விசாரிக்க தெளிவான பதில் கிடைக்கவில்லை. வைணவத் தலங்களுக்கு சென்று அங்குள்ள பத்மாவதி, ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்துள்ளார். ஆனால் கனவில் வந்த அம்பிகையின் உருவம் ஏதுவும் அவருக்கு புலப்படவில்லை. இந்நிலையில் தன் வீட்டிற்கு தபாலில் வந்த ஆன்மிக புத்தகம் அட்டையில் லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப்பட்டிருப்பதை பார்த்த பக்தை ஆச்சரியம் அடைந்தார். தனக்கு கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார்.

தினமும் தவறாமல் லலிதா சகஸ்ரநாமத்தைப் சொன்னதன் பயன் என்பதை உணர்ந்தார்.

புதிய கொலுசினை செய்து கொண்டு தலத்திற்கு வந்தார். கோயில் அர்ச்சகர், நிர்வாகிகளிடம் இச்செய்தியை கூற அவர்கள் நம்பவில்லை.

பக்தையின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அம்பிகையின் காலில் கொலுசு அணிவிக்க வசதியாக துவாரம் ஏதும் உள்ளதா என பார்த்துள்ளனர்.

பல காலம் அம்பிகைக்கு செய்த அபிஷேகங்களினால் மஞ்சள், சந்தனம் பொடிகள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து கொலுசு அணிவிக்க துவாரம் இருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அதன் பின்னரே அந்த பக்தை வழங்கிய கொலுசு அம்பிகைக்கு அணிவிக்கப்பட்டது.

அவளின் சன்னதியில் தம்மிடமும் ஏதாவது கேட்க மாட்டாளா என ஏங்கி தவிக்கும் தவிப்பினை இப்போதும் ஒவ்வொரு பக்தர்களின் முகத்தில் பார்க்கலாம். லலிதாசகஸ்ர நாமத்தினை சிரத்தையுடன் படித்தால் அதற்குரிய புண்ணியம் தானாக படிப்பவரை வந்து அடையும் என்பது உண்மை தானே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us