Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 43

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 43

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 43

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 43

ADDED : நவ 10, 2023 10:37 AM


Google News
Latest Tamil News
பத்தினி பெண்களின் தெய்வம்

ஒருபுறம் எமன் வந்தபடி இருக்க மறுபுறம் சத்யவானும் மரம் ஒன்றில் கனிகளை பறிக்க முற்பட்டு இயலாதவனாக தலையை பிடித்தபடி கீழே அமர்ந்தான். அவனைக் கண்ட சாவித்ரி பதறிப் போனாள். ஒருபுறம் எமனின் வருகை; மறுபுறத்திலோ கணவனின் மயக்கநிலை!

அவளுக்கு புரிந்து விட்டது. ''உங்களுக்கு என்னாயிற்று''எனக் கேட்டாள். அவனோ மயங்கி அவள் மடி மீது சரிந்தான். எமனும் அருகில் வந்து நின்றான். ஒரு கையில் பாசக்கயிறு. மற்றொரு கையில் கதாயுதம். சிவப்பு பட்டாடை உடுத்தி மார்பில் ஆரம், தலையில் கிரீடம் என கம்பீரமாக காட்சியளித்தான். உடல் கருத்திருந்தது. புருவத்தில் கோரை முடிகள். நெற்றியில் கருப்புச் சாந்துப் பொட்டு. அகன்ற விழிகள். காலன் என்பதற்கு ஏற்ற சரீரம்.

அவனை சாவித்ரி பார்த்து நடுங்கினாள். எமனும் பாசக்கயிறை சத்யவானை நோக்கி வீசிட, அவன் உயிரும் பிரிந்தது. அந்த பாசக்கயிறு சத்யவானின் நிழல்தேகம் எனப்படும் விதேக தேகத்தை பற்றி இழுத்துக் கொண்டு விண்ணேகத் தொடங்கியது, சாவித்ரி அதைப் பார்த்ததும் எமனைப் பார்த்து, ''நில்லுங்கள் எமராஜரே! எமனும் அதிர்ந்து திரும்பினான். சாவித்ரிக்கு தன் உருவம் புலனாவதை அப்போது தான் உணர்ந்தான். ஆச்சரியமுடன் புருவத்தை வளைத்தபடி, ''பெண்ணே உனக்கு நான் புலனாகிறேனா... எப்படி'' என்ற கேள்வியோடு பார்த்தான்.

''நான் பதிவிரதை... காயத்ரியை தினமும் ஆயிரம் முறை உபாசிப்பவள். மேலினும் மேலாக ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகளில் விரதம் இருப்பவள். இதனால் தேவர்களைக் காணும் பாக்கியம் பெற்றவள்'' என விளக்கினாள் சாவித்ரி.

''நான் தலைவணங்குகிறேன். உன்னை வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறேன். நீ பல்லாண்டு பெயரோடும் புகழோடும் வாழ்வாயாக'' என்றான் எமன்.

''நான் மட்டும் அமங்கலியாக பல்லாண்டு வாழ்ந்து என்ன பயன்? அது கணவனோடு வாழுகின்ற ஒரு வாழ்க்கையாகுமா?''

இந்த கேள்விக்கு என்னிடத்தில் பதில் இல்லை. நான் என் கடமையைச் செய்தபடி இருக்கிறேன். அவரவர் விதிக்கு ஏற்ப பிறப்பும், இறப்பும் நிகழ்கிறது. இதில் பிறப்புக்கு காரணம் பிரம்மா. இறப்புக்கு காரணம் எமனாகிய நான். அப்படிப்பட்ட நான் என் கடமையைச் செய்ய வேண்டாமா?''

''எது கடமை... ஒரு இளைய உயிரை, அதிலும் தாய், தந்தையருக்கு தொண்டாற்றும் அரிய உயிரை இத்தனை இளம்வயதில் கவர்ந்து செல்வது தான் கடமையா?''

''என்ன செய்ய அதுதான் உன் கணவனின் விதி''

''விதியின் மீது பழி சொல்வது நியாயமா?''

''உன் பாச உணர்ச்சி இப்படி எல்லாம் பேச வைக்கிறது. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் நீ வரம் கேள். உன் கணவன் உயிரைத் தவிர நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்''

''அப்படியானால் என் கணவரின் தந்தைக்கு அவர் இழந்த கண்களைத் திரும்பத் தருவீரா?''

''தாராளமாக... இப்போதே தந்தேன். என்னை போகவிடு'' என்ற எமன் வரமளித்து விட்டு சத்யவானின் விதேக உடம்புடன் விண்ணில் பயணிக்கலானான். சாவித்ரியோ தொடர்ந்து பின்சென்றாள். ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்த எமன், ''எதற்காக இப்படி பின்தொடர்கிறாய். கேட்ட வரத்தை அளித்து விட்டேனே. இன்னும் என்ன...'' என கேட்டான்.

''நான் எங்கே கேட்டேன். நீங்களாக வரம் தருவதாக கூறியதால் நானும் கேட்டேன். ஆனால் அது நான் எதிர்பாராத வரம். எதிர்பார்ப்பது தான் வேண்டும்''

''அது என்ன''

''என் கணவரின் தந்தையான துய்மத்சேனர் தான் இழந்த மந்தார தேசத்தை திரும்பப் பெற்றிட வேண்டும்''

''நல்லது. அவ்வாறே ஆகட்டும்'' என்ற அந்த வரத்தையும் அளித்து விட்டு சத்யவானின் விதேக உடம்போடு எருமை வாகனத்தின் மீது ஏறி அமர்ந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சாவித்ரி, அந்த எருமையின் முன் சென்று நின்றாள்.

''பெண்ணே... விலகிச் செல். என்னை மறிப்பது அழகல்ல''

''கணவரை இழந்து நான் வாழ்வது மட்டும் அழகா''

''அது உன் ஊழ்வினை. அதை மாற்ற முடியாது''

''ஊழ்வினையோ, பாழ்வினையோ... கணவன் இருக்குமிடமே மனைவிக்கு சொர்க்கம். அந்த வகையில் என் கணவர் இப்போது உம்மோடு இருக்கிறார். நானும் உம்மோடு அவருக்கு துணையாக இருப்பேன்''

''வேண்டாம் பெண்ணே.... இப்படி எல்லாம் பேசி உன் கணவனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்யத் தவறி விடாதே. உடம்பை மிருகங்கள் தின்று விட்டால் உன்னால் ஈமக்கிரியை செய்ய முடியாது. அது பெரும் பாவமாகி விடும்''

''அது என்னால் முடியாது. நீர் சொன்ன விதியின்படி என் கணவரின் உடம்புக்கு எது நிகழ வேண்டுமோ, அது நிகழட்டும். நான், நீர் என் கணவனின் விதேக உடம்புடன் எங்கு சென்றாலும் அங்கும் தொடர்ந்து வருவேன். இல்லாவிட்டால் என் உயிரையும் பறித்து என் கணவன் உயிருடன் சேர்த்து விடுங்கள்''

''சாவித்ரி... புரியாமல் பேசுகிறாய். உன் விதி முடியும் போது தான் உன் உயிரை என்னால் பறிக்க முடியும். அது இப்போது இல்லை''

''இப்படி எல்லாம் சொல்லி என்னை நீங்கள் தவிர்க்க முடியாது. நான் ஒரு கணமும் என் கணவரைப் பிரியத் தயாரில்லை''

''சாவித்ரி... கடமையைச் செய்ய விடாமல் தடுத்தால் தண்டிக்கப்படுவாய்''

''நான் எதையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். வேண்டுமானால் அவர் உயிருக்கு பதிலாக என் உயிரைப் பறித்துக் கொண்டு அவரை வாழ விடுங்கள்''

''இதோ.., பார். மூன்றாவதாய் கூட வரம் தருகிறேன். என்னைப் போகவிடு''

''அப்படியானால் என் தந்தை அஸ்வபதி, என்னை திருமணம் செய்து கொடுத்து விட்டு தனிமையில் வாடுகிறார். அவருக்கு புத்ர பாக்கியம் கொடு''

''அப்படியே ஆகட்டும். ஒன்றுக்கு நுாறு பேர் உன் தந்தைக்கு பிறப்பார்கள் போதுமா?''

''போதாது. இன்னும் ஒரு வரம் வேண்டும்''

''தருகிறேன். உன் கணவன் உயிரல்லாது எதையும் நீ கேள்''

''வாக்கு மாற மாட்டீர்களே...''

''நான் சூரியனின் புத்திரன். வைவஸ்வதன் என்பதே என் இயற்பெயர். கடமை காரணமாக எமன் என்றானேன். ஒருபோதும் வார்த்தை தவற மாட்டேன். விரும்பும் வரத்தைக் கேள்''

''நல்லது. என் குலம் விளங்கிட நல்ல பலமும், சக்தியும் கொண்ட நுாறு புத்திரர்கள் வேண்டும்''

''அப்படியே ஆகட்டும். இனி நீ திரும்பிச் செல்வாய் என நம்புகிறேன்''

''நானும் திரும்பத் தயார். பதிவிரதையான நான் நுாறு பிள்ளைகளை பெற்று வாழ்ந்திட கணவர் வேண்டுமே. அவர் இல்லாமல் பிள்ளைகள் எப்படி பிறப்பார்கள்? எனவே என் கணவன் உயிரைத் திருப்பித் தாருங்கள். நீங்கள் தந்த வரத்தோடு உங்களுக்கு என் கோடானு கோடி நன்றிகளையும் கூறிக் கொண்டு நான் திரும்பி விடுகிறேன்'' என்றிட எமனும் சாவித்ரியின் விடாமுயற்சி, புத்தி சாதுர்யம் கண்டு வியந்து பாசக்கயிற்றில் சிக்கிய விதேக தேகத்தை விடுவிக்க, அது வனத்தில் கிடக்கும் சத்யவானின் தேகத்தை அடைந்த நிலையில் அவனும் எழுந்து அமர்ந்தான். அதைக் கண்ட சாவித்ரியும் ஆனந்தக் கண்ணீருடன், ''நன்றி. எமநாதரே நன்றி'' என்றாள்.

''சாவித்ரி... நீ பதிவிரதை. புத்திசாலி. உன் மனோபலத்துக்கு காரணமே உன் பூஜாபலன் தான். உனக்கு நுாறு புத்திரர்கள் உண்டாவார்கள். உன் கணவன் நானுாறு ஆண்டுகள் வாழ்வான். விதிப்படி அவன் இறக்க நேரிட்டது. அதே சமயம் உன் மதியால் உயிர் பெற்றான். இது அவன் வரையில் மறுபிறப்பே. இனி வரும் காலத்தில் பத்தினி பெண்களின் தெய்வம் ஆவாய். உன்னை எண்ணி விரதம் இருப்பவர்களுக்கு எல்லாம் நீ எண்ணியது போலவே நல்லன எல்லாம் கிட்டும்'' என ஆசியளித்தான் எமன்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்

98947 23450





      Our Apps Available On




      Dinamalar

      Follow us