Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனைவிக்கு மரியாதை

மனைவிக்கு மரியாதை

மனைவிக்கு மரியாதை

மனைவிக்கு மரியாதை

ADDED : ஏப் 17, 2025 12:13 PM


Google News
Latest Tamil News
நந்தகரிஷி என்னும் முனிவருக்கு உஷா என்றொரு மகள் இருந்தாள். தினமும் காலையில் மலர்களைப் பறித்து மாலையாக்கி ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு சாத்தி வழிபட்டாள்.

திருமண பருவத்தை அடைந்த அவள், ஒருநாள் ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள காட்டில் வேட்டையாட வந்த இளவரசன் ஒருவனைக் கண்டாள். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மகளின் விருப்பம் அறிந்த முனிவர், அந்த இளவரசனுக்கே மணம் முடித்து வைத்தார். கணவருடன் உஷா அரண்மனைக்கு புறப்பட்டாள். அங்கு ஆடம்பர வாழ்வுக்கு மாறினாலும், பெருமாளின் மீதுள்ள பக்தியை மறக்கவில்லை. அதிகாலையில் நீராடி, பெருமாளுக்கு பூமாலை சாத்தி வழிபட்டு வந்தாள்.

ஆஸ்ரமத்தில் எளிமையாக வாழ்ந்த உஷா, மகாராணியாகி விட்டாளே என பொறுக்காத சிலர் இளவரசனின் மனதைக் கலைத்தனர். பக்தி என்னும் போர்வையில் மற்ற ஆண்களைச் சந்திக்க கோயிலுக்கு செல்வதாக துர்போதனை செய்தனர்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? இளவரசனும் உண்மை என நம்பி மனைவியை சந்தேகிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் ஆஸ்ரமத்திற்கு திரும்பினாள் உஷா. ஆறுதல் கூறிய முனிவர், '' உஷா வருந்தாதே! பெருமாளின் அருளால் உண்மை வெற்றி பெறும்'' என்றார்.

மனைவியை கொடுமைப்படுத்துவதும், உத்தமியின் கற்புக்கு களங்கம் கற்பிப்பதும் பாவம் என்றும், அவர்களை இயற்கை தண்டிக்கும் என்றும் நீதிநுால்கள் சொல்கின்றன. அதை நிரூபிக்கும் விதத்தில் இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். ஆட்சிப் பொறுப்பும் அவனைச் சுற்றி இருந்த தீயவர்களின் வசம் சென்றது. இஷ்டம் போல் வாழ்ந்த அவர்கள் ஆடம்பரமாகச் செலவழித்தனர். கடும்வரி வசூலிப்பால் மக்களும் சிரமப்பட்டனர்.

சூழலை அறிந்த அண்டை நாட்டு மன்னன் போர் தொடுத்தான். தோல்வி பயத்தில் இளவரசனும் அரண்மனையில் இருந்து வெளியேறினான். உணவு, உடையின்றி பரதேசியாகத் திரிந்தான். இந்தத் தகவலை துறவி ஒருவரின் மூலம் உஷா கேள்விப்பட்டாள்.

இஷ்ட தெய்வமான பெருமாளிடம், தன் கணவரைக் காப்பாற்றும்படி வேண்டினாள். அவளின் துன்பம் போக்க சந்நியாசியின் வேடத்தில் புறப்பட்டார் பெருமாள். நோயைப் போக்கியதோடு இளவரசனை அழகும், வலிமையும் மிக்கவனாக மாற்றினார். அவனுக்கு தன் சுயவடிவத்தை காட்டினார் பெருமாள்.

மனைவிக்கு செய்த கொடுமையால் நேர்ந்த துன்பத்தை உணர்த்தினார். உண்மையறிந்த இளவரசன் மனைவியைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளால் நாட்டைக் கைப்பற்றி நல்லாட்சி புரியத்தொடங்கினான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us