Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/எல்லாம் சிவமயம்

எல்லாம் சிவமயம்

எல்லாம் சிவமயம்

எல்லாம் சிவமயம்

ADDED : பிப் 20, 2025 08:38 AM


Google News
Latest Tamil News
துறவி ஒருவர் எப்போதும் 'சிவசிவ' என உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரை மக்கள் 'சிவசிவ சாமியார்' என்றே அழைத்தனர். அந்த துறவியை ஊர் வம்பு பேச வைக்க வேண்டும் என இளைஞன் ஒருவன் திட்டமிட்டான். அதற்காக தன் நண்பனின் உதவியை நாடினான்.

இருவரும் துறவி இருக்குமிடத்திற்கு வந்தனர். அவரிடம் பேச்சு கொடுத்தனர். கோபம் வரும் விதத்தில் கடும் வார்த்தைகளால் திட்டினர். அப்போதும் அமைதியாக இருந்தார். பொறுமையிழந்த அவர்கள், 'சண்டையிடுவது போல நாம் கைகலப்பில் ஈடுபடுவோம். அப்போது நம்மை சமாதானம் செய்ய துறவி வருகிறாரா பார்க்கலாம்' என முடிவெடுத்தனர்.

சண்டையிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் நிலைமை மோசமானது. விளையாட்டு வினையாகும் என்பார்களே... அப்படி ஒருவன் பலமாக அடித்ததில் இன்னொருவனுக்கு கோபம் வந்தது. பதிலுக்கு நண்பனை பலமாகத் தாக்கினான். உண்மையான சண்டையாக மாறியது. இதில் ஒருவனுக்கு உடம்பு வீங்கியது. ஊர் பஞ்சாயத்தாரிடம் நடந்ததைச் சொல்லி முறையிட்டான்.

பஞ்சாயத்தார், “சண்டையை நேரில் பார்த்த சாட்சி உண்டா” எனக் கேட்டனர்.

“சிவசிவ சாமியாருக்குத் தான் உண்மை தெரியும்” என்றனர்.

“வாயே திறக்காத சாமியார் உங்களுக்காக சாட்சி சொல்வாரா” எனக் கேட்டார் பஞ்சாயத்து தலைவர்.

“அவர் மட்டும் தான் சாட்சி. வேற யாரும் சண்டையைப் பார்க்கவில்லை” எனச் சொன்னதால் வேறு வழியின்றி சாமியார் அழைத்து வரப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்டதும் சாமியாரைக் காண மக்கள் திரண்டனர்.

அவரை வணங்கிய பஞ்சாயத்து தலைவர், “சாமி... நீங்க தான் சண்டையைப் பார்த்த ஒரே சாட்சி. நடந்ததைச் சொல்லுங்கள்” எனக் கேட்டார்.

அவரும் நடந்ததைச் சொல்ல முன்வந்தார்.

இளைஞர்களின் மனதிற்குள் மகிழ்ச்சி. “பரவாயில்லையே! சண்டை வந்தாலும் சாமியார் மவுனத்தை கலைக்கப் போறாரே” என ஆவலுடன் நின்றனர்.

அப்போது துறவி இருவரையும் சுட்டிக் காட்டியபடி, “இச்சிவத்தை அச்சிவம் சிவ! அச்சிவத்தை இச்சிவம் சிவ! இச்சிவமும் அச்சிவமும் சிவசிவ” என்றார்.

பதில் புரியாமல் பஞ்சாயத்து தலைவர் விழித்தார்.

அப்போது பெரியவர் ஒருவர், “இவன் அவனை அடித்தான். அவன் இவனை அடித்தான். அதன் பின் இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்” என விளக்கம் அளித்தார்.

இதைக் கேட்டதும் இளைஞர்கள் கண்ணீர் விட்டனர்.

“எங்கும் சிவமாக காணும் பக்குவம் தங்களைப் போல யாருக்கு வரும்? உங்களுக்கு இடையூறு செய்த எங்களுக்கு தண்டனை கொடுங்கள்” என்றனர்.

திருந்திய இளைஞர்களைக் கையால் அணைத்தபடி ஆசியளித்தார் சிவசிவ சாமியார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us