Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

ADDED : நவ 28, 2024 01:22 PM


Google News
Latest Tamil News
உத்தான பாதன் என்ற மன்னருக்கு சுநீதி, சுருசி என்று இரு மனைவியர். சுநீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். மனைவி சுருசி, அவளது மகன் மீது மன்னர் பாசம் கொண்டிருந்தார். தந்தையின் அன்பு கிடைக்காமல் மற்றொரு மகனான துருவனின் மனம் வருந்தியது.

ஒருநாள் உத்தானபாதனும், சுருசியும் பேசிக் கொண்டிருந்தனர். மன்னரின் மடியில் உத்தமன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட ஐந்து வயது சிறுவனான துருவன் தந்தையின் மடியில் அமர விரும்பினான். சுருசி அவனை திட்டி அனுப்பினாள். சிறிய தாயாரின் கோபத்தைக் கண்டு அழுதபடி தாயிடம் ஓடினான். பெற்ற வயிறு அல்லவா... மகனை மார்போடு அணைத்தபடி கதறினாள்.

''மகனே! பாவியான என் வயிற்றில் பிறந்து விட்டாயே! உயிர்களுக்கெல்லாம் தந்தையான மகாவிஷ்ணுவின் திருவடிகளை பிடித்துக் கொள். நல்வழி கிடைக்கும்'' என்றாள்.

துருவன், ''இவர்களை விட மேலான பதவியை அடைவேன்'' என சபதம் செய்து அரண்மனையை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை விடாமல் சொல்லும்படி கூறினார்.

அதன் பின் மன்னரைக் காண அரண்மனைக்கு வந்தார் நாரதர். சிறுவனான துருவனின் தெய்வபக்தி, மனஉறுதியை எடுத்துச் சொன்னார். 'இளைய மனைவிக்காக, பெற்ற மகனிடம் அன்பு காட்டாமல் இருந்து விட்டேனே' என மன்னரின் மனம் உறுத்தியது.

துருவன் காட்டில் தவத்தில் ஆழ்ந்தான். அவனது தவக்கனல் தேவலோகத்தை எட்டியது. மகாவிஷ்ணுவிடம், ''சுவாமி... பச்சிளம் பாலகன் துருவனின் தவ ஆற்றலை எங்களால் தாங்க முடியவில்லை. அவனது விருப்பம் அறிந்து வரம் அளித்து எங்களை காத்தருள வேண்டும்'' என தேவர்கள் முறையிட்டனர்.

பூலோகம் புறப்பட்ட மகாவிஷ்ணு, ''குழந்தாய்! தேவர்களுக்கும் கிடைக்காத அரிய பேற்றினை உனக்கு அளித்தேன். நீ இந்த உலகில் பலகாலம் நல்லாட்சி புரிவாய். பின் வான மண்டலத்தில் நட்சத்திரங்களை ஆட்சி புரியும் 'துருவபதம்' என்னும் உயர்நிலை அடைவாய்'' என வரம் கொடுத்தார்.

விஷ்ணுவின் அருள் பெற்ற துருவன், பெற்றோரை காண அரண்மனை திரும்பினான். மகனைக் கண்ட தாய் மனம் மகிழ்ந்தாள். தவறை உணர்ந்த மன்னரும் அவனைக் கட்டித் தழுவினார். மன்னரின் காலம் முடிந்த பின் துருவனின் நல்லாட்சி தொடர்ந்தது. வாழ்வின் இறுதியில் வான மண்டலத்தில் துருவ(ன்) நட்சத்திரம் ஆனான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us