Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லச் சொல்ல இனிக்குதடா - 39

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 39

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 39

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 39

ADDED : ஏப் 03, 2025 12:46 PM


Google News
Latest Tamil News
 கழுகுமலை

''பறவைகளின் ராஜா யார் தெரியுமா'' என அமுதனிடம் கேட்டாள் தேவந்தி. மயிலா என கேட்டான் அமுதன் அப்பாவியாக. ''கழுகு தான்'' என்றாள் தேவந்தி.

''அதனால் தான் ராகு கேது தோஷம் போக்க கழுகாசல மூர்த்தியை நோக்கி படை எடுக்குறாங்க. கழுகுக்கு பாம்புகள் கட்டுப்படுவது போல கழுகுமலை கழுகாசலமூர்த்தியால பாம்பு கிரகங்களின் தாக்கம் குறையும்” என்றார் பாட்டி தடாலடியாக.

ஆச்சர்யப்பட்ட தேவந்தி, “ யாரு இந்த கழுகாச்சலமூர்த்தி?” எனக் கேட்டாள்.

''நம்ம முருகன் தான். கழுகுமலையில் இருக்காரு. மேற்கு நோக்கியபடி முருகன் ராஜபோகமா இங்கிருக்கிறார்.பிரம்மாண்டமான குடைவரை கோயில் இது. மலையே கோபுரமா அமைஞ்சிருக்கு. கோயிலை சுற்றணும்னா மலையையே நாம சுத்தணும். கழுகாசலமூர்த்தி அமர்ந்த நிலையில் நான்கடி உயர திருமேனியாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஒரு தலை ஆறு கைகள் ஆயுதங்களுடன் இருக்கும். கழுகாச்சல மூர்த்தி மேற்கு பார்த்தும், வள்ளி தெற்கு பார்த்தும் தெய்வானை வடக்கு பார்த்தும் இருப்பாங்க”

“வித்தியாசமா இருக்கே பாட்டி” என வாய் பிளந்தாள் தேவந்தி.

“இங்கு இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக இருக்கும். இங்கு குருவும் முருகனும் இருப்பது சிறப்பு. அதனால குரு மங்கள ஸ்தலம் என்றும் சொல்வாங்க. கழுகாசல மூர்த்திய அகத்தியர் தினமும் அருவமாக வந்து பூஜிப்பதாக ஐதீகம். இங்கு முருகன், சிவனுக்கு தனித்தனி பள்ளியறை இருக்கு”

“ஆமா இந்த மலைக்கு எப்படி கழுகுமலைன்னு பெயர் வந்துச்சு?” தன் மழலை குரலில் கேட்டான் அமுதன்.

“கழுகு மலைக்கு ராமாயண வரலாற்றுடன் தொடர்பு இருக்கு செல்லம். அந்த காலத்துல இந்த மலையின் பெயர் கஜமுக பர்வதம். சீதையை கவர்ந்து சென்ற போது தடுத்த ஜடாயுவைக் கொன்றார் ராவணன். அதன்பின் ராமனால் இறுதி காரியம் செய்யப்பட்ட கதை நமக்கு தெரிஞ்சது தான். இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி, 'என் சகோதரனுக்கு ஈமக்காரியம் செய்யாமல் பாவத்திற்கு ஆளாகி விட்டேனே' என வருந்தினார். இதை அறிந்த ராமர் அவரிடம், 'கஜமுகப் பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் பலன் கிடைக்கும்' என்றார். அதன்படி சம்பாதியும் இங்கு நீராடி பல ஆண்டுகள் காத்திருந்தார்.”

“அப்ப எப்ப தான் விமோசனம் கிடைச்சது?” என பொறுக்க முடியாமல் கேட்டாள் தேவந்தி.

''சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் இந்த கஜமுக பர்வதம் வழியாக வந்தார். அந்த நேரத்தில் சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் அனைவரையும் துன்புறுத்துவதை கண்டார். போர் வீரனான முருகன் இந்த அட்டூழியத்தை பார்த்து விட்டு சும்மா இருப்பாரா? தாரகாசுரனை வதம் செய்தார். அப்படி வதம் செய்த நாளே ஐப்பசி பஞ்சமி திதி. போருக்கு பின்னர் முருகன் ஓய்வு எடுப்பார் இல்லையா? அதன்படி வதம் செய்த களைப்பு தீர கஜமுக பர்வதத்திலேயே தங்க எண்ணினார். அங்கு காத்திருந்த சம்பாதி தங்கும் இடம் அமைத்துக் கொடுத்ததோடு, சூரபத்மனின் இருப்பிடத்தையும் தெரிவித்தார். அப்போது சம்பாதியின் வருத்தத்தை போக்கி முக்தி கொடுத்தார் முருகன். இப்படி கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே கழுகுமலை என்றானது''

“ராமாயண கதையோட கழுகாச்சல மூர்த்திக்கு இப்படி ஒரு தொடர்பு இருக்கா... '' என ரசித்தாள் தேவந்தி.

“கழுகுமலை முருகனை தரிசிக்க திருமண தடை நீங்கும்,குழந்தை பாக்கியம் கிடைக்கும்”

“இந்த கோயில் எங்கு இருக்கு பாட்டி?” கேட்டாள் தேவந்தி.

“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் போற வழியில 20 கி.மீ., கழுகுமலை கோயிலுக்கு எதிரில் எட்டயபுரம் சமஸ்தானத்தின் அரண்மனை இருக்கு. பக்கத்திலேயே கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணர் படுகைகள் உள்ளன. இந்த வெட்டுவான் கோயிலப் பத்தி முக்கியமா தெரிஞ்சுக்கணும். மலையோட ஒரு பக்கத்தில் கழுகாச்சல மூர்த்தி கோயிலும் இன்னொரு பக்கம் வெட்டுவான் கோயிலும் இருக்கு. எட்டாம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட குடவரை கோயில் ஒன்னு அங்க இருக்கு. மன்னர் மாற பல்லவன் என்பவர் இக்கோயிலை கட்டினார்.

தமிழகத்தின் எல்லோரா எனப்படும் இக்கோயில் ஒரு முற்றுப் பெறாத கோயிலாக இருக்கு. போர்களில் சிலைகள் சிதிலமடைஞ்சிருக்கு. குடவரை கோயில்களில் கீழே இருந்து பாறையை குடைஞ்சி பல கோயில்கள் அமைச்சிருக்கு. அத நாம பார்த்திருப்போம். ஆனா இந்த வெட்டுவான் கோயிலில் ஒரு பாறைய மேலிருந்து குடைஞ்சு கோயிலை உருவாக்க முயற்சி செஞ்சிருக்காங்க.

ஆனா ஏனோ இந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கு. அதுக்கு என்ன காரணம்னு தெரியல. தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 200 ஆண்டுக்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டிருக்கு. பக்கத்திலேயே சமணர் படுகைகள் உள்ளன. அங்கும் ஆயிரம் ஆண்டுக்கு முன் செதுக்கிய பல சிலைகள் இன்னமும் காட்சிக்கு இருக்கு. இப்படி கழுகுமலை நிறைய ஆன்மிகத் தடங்களை கொண்ட அற்புதமான தலம்”

“இந்த மலையை பத்தி கேட்கும் போதே புல்லரிக்குது பாட்டி!” என்றாள் தேவந்தி கைகளை தேய்த்தபடி.

“ஆமா தேவந்தி. கழுகுமலையின் உச்சியில விநாயகர் கோயில் இருக்கு. பாதை ரொம்ப செங்குத்தா இருக்கும். பாறையாலேயே செதுக்கின படிகள் இருக்கு. பிடிச்சிக்கிட்டு ஏற ஸ்டீல் கைபிடிகள் அமைச்சிருக்காங்க. என்ன பகல் நேரத்துல ஏறினால் வெயில் மண்டைய பிளக்கும். அதனால வெயில் தாழச் செல்வது நல்லது. அதோட கழுகாச்சலமூர்த்தியை நோக்கி அருணகிரிநாதர் மூன்று பாடல்கள் பாடி இருக்கார். 'கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே' என அழகாக பாடி இருக்கார்.

“எனக்கு இப்பவே கழுகுமலை போகணும் போல இருக்கு பாட்டி. பக்கத்துல இருக்குற அந்த வெட்டுவான் கோயில் வரலாற்று சிறப்பையும் பார்த்து தெரிஞ்சுக்கணும்”

“அதோட முருகனை கெட்டியா பிடிச்சுக்கோ, இந்தப் பிறவிக்கடலை சுலபமா கடந்துடலாம். அதுக்கு கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றையும் சொல்றேன் கேளு

முடியாப் பிறவிக் கடலில்

புகார் முழுதும் கெடுக்கும்

மிடியால் படியில் விதானப்படார்,

வெற்றிவேல் பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள்

அவுணர் குலம் அடங்க

பொடியாக்கிய பெருமாள்

திருநாமம் புகல் பவரே

இந்தப் பாட்டை தினமும் பாடினால் பிறவியை எந்தவித அச்சுறுத்தல், பயம் இல்லாமல் நல்லபடியாக கடக்கலாம்” பாட்டி இப்படிச் சொல்லி நிறைவு செய்யும் போதே விமான நிலையத்திற்கு சென்றிருந்த யுகன், தன் அம்மா, அப்பாவுடன் வீட்டுக்கு வந்தான். பாட்டியின் மகன் பிச்சாண்டி மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். வீடே களைகட்டியது. மகன், மருமகளை உச்சி முகர்ந்த பாட்டி தன் மகனின் பயண அனுபவத்தை வாஞ்சையுடன் கேட்டார். மற்றதை அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல பத்து மலை முருகன் கோயில் பத்தி சொல்லுப்பா என பாட்டி ஆர்வத்துடன் மகனிடம் கேட்க…

“அப்பா இப்ப தான பாட்டி வந்திருக்கார். உன் ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா... இன்னைக்கு ஓய்வு எடுத்து நாளைக்கு சொல்லட்டும் விடு. அப்பதான் அதன் பிரம்மாண்ட அழகை அப்பா சிறப்பா சொல்லுவார்'' என பாட்டியை பார்த்து கண் சிமிட்டினான் யுகன்.

---அடுத்த வாரம் முற்றும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882





      Our Apps Available On




      Dinamalar

      Follow us