Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லச் சொல்ல இனிக்குதடா - 32

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 32

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 32

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 32

ADDED : பிப் 05, 2025 01:24 PM


Google News
Latest Tamil News
கஞ்சமலை

கந்தகுரு கவசம் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கஞ்சமலை சித்த குரு கண்ணொளியாய் வந்திடுவீர் என்ற வரியைக் கேட்டதும் தேவந்தி, ”பாட்டி ... கஞ்சமலை பத்தி சொல்லலையே” என்றாள்.

“அமாவாசையும் அதுவுமா கஞ்சமலையை பத்தி கேட்டது நல்லது. சேலத்திலிருந்து 15 கி.மீ., துாரம். இதற்கு அமாவாசை கோயில்னு பெயர் உண்டு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா யுகா? சித்தர் கோயில்ல கிரிவலம் நடப்பது இங்கு தான். மலை முழுக்க மூலிகை இருக்கிறதால சுவாசம் மூலம் நோய்கள் தீர்ந்துடும். மாலை ஏழரை மணிக்கு அடிவார கோயிலில் இருந்து தொடங்கினா அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு கிரிவலத்தை முடிக்கலாம். 19 கி.மீ., துாரம். பவுர்ணமி, அமாவாசையில் கூட்டம் அலைமோதும். திருமூலர் உனக்குத் தெரியும் தானே”

“தெரியும் பாட்டி. திருமூலர் திருமந்திரத்தை மறக்க முடியுமா” என சொன்னான் யுகன்.

“அவரே தான். திருமூலர் இங்குள்ள மூலிகைகள் மூப்பு, மரணத்தை போக்குபவை என அறிந்து வைத்திருந்தார். மூலிகையை தேடுவதற்கு உதவியாக இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை சீடனாக ஏற்றார். அவர்தான் கஞ்சமலை காலாங்கிநாதர்.

திருமூலர் தினமும் காலையில் மூலிகையைத் தேடிப் போவார். திருமூலருக்கு உணவு சமைப்பது காலாங்கி நாதரின் வேலை. அப்படி ஒரு நாள் சமைக்கும் போது கரண்டியை தேடி இருக்கிறார். அது கிடைக்காததால் சற்று தள்ளி வளர்ந்திருந்த ஒரு செடியைப் பிடுங்கி அதன் வேர் பகுதியை நீரில் கழுவி விட்டு உணவை கிண்டியிருக்கிறார். உணவு கருப்பாக மாறியது. இதைப் பார்த்து அதிர்ந்த அவர் உடனே அந்த வேரை நெருப்பில் போட்டு விட்டார்”

“அப்புறம் என்னாச்சு பாட்டி! அதை சாப்பிட முடிஞ்சதா?” என ஆர்வமாக கேட்டாள் தேவந்தி.

''சொல்றேன் கேளு. கருப்பா மாறின உணவை தானே சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தைக் கழுவி அதில் புதிதாக உணவு சமைத்திருக்கிறார். இதுக்கு நடுவுல திருமூலரும் வந்துட்டார். காலாங்கி நாதரை அடையாளம் தெரியாததால் தாங்கள் யார் எனக் கேட்டிருக்கிறார். காலாங்கிநாதருக்கோ அதிர்ச்சி. 'குருவே என்னை அடையாளம் தெரியவில்லையா' எனக் கேட்டார்.

அதற்கு திருமூலர், 'நீ எப்படி இளமையாக மாறினாய்' எனக் கேட்டிருக்கிறார். அதன் பிறகு எதையும் மறைக்காமல் சொல்லி விட்டார் சீடர். 'நான் தேடி வந்த மூலிகையே அதுதான், அது எங்கே எனக் கேட்டு அந்த மூலிகையை கழுவிய நீரைக் கேட்டு குடித்து திருமூலரும் இளமையாக மாறினார்.

இளமை திரும்பியதும் திருமூலர் கஞ்சமலையில் இருந்து புறப்படத் தயாராகும் போது தானும் வருவதாக காலாங்கிநாதர் கேட்க நீ இங்கிருந்து மக்களுக்கு சேவை செய் எனச் சொல்லிவிட்டு சென்றார். காலாங்கிநாதர் கஞ்சமலையிலேயே இருக்க முடிவு செய்தார்.

காளாங்கி நாதர் தவநிலையில் மக்களுக்கு காட்சியளித்தார். அவர்களின் நோய்களை எல்லாம் மூலிகை மூலம் குணப்படுத்தியதால் 'சித்தர்' என சொல்லி வணங்கினர். இந்த காலாங்கிநாதரே பழநி முருகனின் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகருக்கு குருவாக விளங்கினார்”

தேவந்தியும், யுகனும் ஆர்வமுடன் கேட்டனர். கஞ்சமலைக்கு இவ்வளவு சிறப்பு உண்டா என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அனுமன் சஞ்சீவி மலையை துாக்கிச் சென்ற போது பெயர்ந்து விழுந்தது தான் கஞ்சமலை என்றும் கதையும் உண்டு. 8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் சிறப்பு பற்றி சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கடபுரநாதர் புராணம் போன்ற நுால்களில் குறிப்பு உள்ளது. தங்கம், இரும்பு, தாமிரம் ஆகிய கலவைதான் கஞ்சம்னு சொல்லுவாங்க. இங்க உயர்தர இரும்பு படிமம் ஏராளமாக இருக்கிறதாகவும் எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பால் தான் அலெக்சாண்டரின் வீர வாள் செய்யப்பட்டது. அதனால தான் இந்த மலைக்கு அருகில் சேலம் இரும்பாலை இருக்கு. இங்குள்ள பொன்னி ஓடைல கிடைச்ச பொன்னை எடுத்தே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பராந்தக சோழன் பொன் கூரை வேய்ந்ததாகச் சொல்வார்கள். இந்த மலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசினு ஏராளமான மூலிகைகள் இருக்கு.

அவ்வளவு ஏன்! அதியமான் அவ்வையாருக்கு கொடுத்த அரிய கரு நெல்லிக்கனி, கஞ்சமலையிலிருந்தே கிடைத்தது.

இந்த கோயிலின் அலங்கார நுழைவு வாசலைக் கடந்ததும் விநாயகர் காட்சி தருவார். அப்புறம் இளம் யோகியான சித்தேஸ்வர சுவாமி சின்முத்திரையுடன் வீராசன நிலையில இருக்கிறார். தொடர்ந்து காளியம்மன், செல்வவிநாயகர், முருகன் சன்னதிகள் இருக்கு.

இந்த கோயிலைச் சுத்தி ஏழு தீர்த்த குளங்கள் இருக்கு. கோயிலின் வளாகத்திற்குள் காந்த தீர்த்த குளம் இருக்கு. மலைப் பகுதியிலிருந்து வரும் மூலிகை தண்ணீர் ஓடை வழியாக தீர்த்த குளங்களுக்கு வருது. கயிறோட சேர்ந்த இரும்பு வாளிகள் பத்து ரூபாய்க்கு வாடகைக்கு கிடைக்குது. அதை வாடகைக்கு வாங்கிட்டு போயி அந்த தீர்த்த கிணத்துல குளிச்சிட்டு அப்புறமா கோயிலுக்கு போகலாம்.

இந்த மூலிகை தண்ணீர் குளம், தோல் நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது. சித்தேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள முருகனை பார்க்க படிகள் இருக்கு, வாகன பாதையும் இருக்கு. கோயில் வாசல் வரைக்கும் வண்டியில் போகலாம்.

15 நிமிடத்துக்கு ஒரு தரம் பஸ் இருக்கு. இளம்பிள்ளைக்கு செல்லும் எல்லா டவுன் பஸ்களும் சித்தேஸ்வரர் கோயில் வழியாகவே செல்லும். அதுக்கும் மேலே உள்ள சித்தர் கன்னிமார் கோயிலுக்கு போகணும்னா மலை ஏறித்தான் போகணும். இந்த பொன்னி ஓடையில தான் மூலிகை ரசவாதம் நிகழ்த்தி இரும்பை தங்கமாக்கும் வித்தையை சித்தர்கள் செய்ததாகச் சொல்வார்கள்”

“மலை, மூலிகை, தங்கம், தீர்த்தம்னு ஏதோ மந்திர தந்திர கதை கேட்ட மாதிரி இருக்கு பாட்டி” என்றாள் தேவந்தி.

“சரி பாட்டி இப்ப நான் ஒரு மந்திரம் சொல்றேன் கேளு”

“நாள் என் செயும்?

வினை தான் என் செயும்?

எனை நாடி வந்த கோள் என் செயும்?

கொடுங் கூற்று என் செயும்?

குமரேசர் இரு தாளும்

சிலம்பும் சதங்கையும் தண்டையும்

சண்முகமும் தோளும் கடம்பும்

எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”

என இந்த கந்தரலங்கார பாடலை அழகாக பாடி முடித்தான் யுகன். தேவந்தியால தான் பாட முடியுமா? நானும் பாடிட்டேன் பாட்டி”

“சரிடா தங்கம் அருணகிரிநாதருடைய இந்த கந்தர் அலங்கார பாடல் உண்மையிலேயே ஒரு மந்திரம் தான். இதை பாடினால் நாளும் கோளும் நம்மை ஒன்றும் செய்யாது. அப்புறம் சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய் அன்று இந்த கஞ்சமலை கோயிலில் திருவிழா நடக்கும். உப்பு, மிளகு, வெல்லம்னு வாங்கி குளத்துல தலையை சுற்றி போட்டால் நம்மை வாட்டும் உடல் கஷ்டம் தீரும். அதுமட்டுமில்ல, தங்கம் வீட்டில் நிலைக்கவும், நோய்கள் தீரவும் கஞ்சமலை கோயிலை தரிசிக்கலாம்” என முடித்தார் பாட்டி.

“தங்கம் விக்குற விலைக்கு பேசாமல் நீங்களும் கஞ்சமலையில் சித்து வேலை கத்துகிட்டு இரும்பை தங்கமாக்கினால் நல்லாத்தான் இருக்கும்” என யுகனை வம்புக்கு இழுத்தாள் தேவந்தி.

“ம்... என் பேரன் காடு, மலைனு கஷ்டப்பட்டு போய் தான் உனக்கு தங்கம் சேர்க்கணும்னு இல்லை. இங்க வேலைக்கு போயே தங்கத்தால குளிப்பாட்டுவான். கவலைப்படாதேம்மா...” என்றார் பாட்டி.

'என்ன இருந்தாலும் பேரனை விட்டுக் கொடுக்க மாட்டியே பாட்டி...'' என யுகனை பார்த்து உச்சு கொட்டினாள் தேவந்தி. அவளைப் பார்த்து காலரை துாக்கி விட்டுக் கொண்டான் யுகன்.

-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882





      Our Apps Available On




      Dinamalar

      Follow us