Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாட்டு ஒன்று கேட்டேன்

பாட்டு ஒன்று கேட்டேன்

பாட்டு ஒன்று கேட்டேன்

பாட்டு ஒன்று கேட்டேன்

ADDED : டிச 26, 2024 10:59 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை மாவட்டம் அரியக்குடி... என்றதும் இசை மேதையான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தான் நினைவுக்கு வருவார். காஞ்சி மஹாபெரியவரின் பக்தரான இவர் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை பாடுவதில் வல்லவர்.

1961ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்கு ஒருநாள் காலையில் சீடர் ஒருவர் வேகமாக சுவாமிகளை நோக்கி வந்தார். 'என்ன?' என்பது போல பார்த்தார் சுவாமிகள்.

'அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் வந்திருக்கார் பெரியவா...' என்றார். உடனே அழைத்து வரச் சொன்னார் சுவாமிகள். அப்போது சுவாமிகளின் முன்னிலையில் சில சீடர்கள், பக்தர்கள் நின்றிருந்தனர். அனைவரையும் அறைக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டுக் கதவை சாத்தச் சொன்னார்.

அறைக்குள் குருநாதரின் முன்னிலையில் தான் மட்டுமே அமர்ந்திருப்பதைக் கண்டதும் ராமானுஜ ஐயங்காருக்கு கண்கள் பனித்தன. 'ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே... கிருதியைப் பாடு' என்றார் மஹாபெரியவர்.

தொண்டையைச் செருமிக் கொண்டு சுருதி கூட்டி பாட ஆரம்பித்தார். ஆலாபனையுடன் பாடி முடித்து விட்டு சுவாமிகளை வணங்கினார். ரசித்துக் கேட்ட மஹாபெரியவர், 'கச்சேரி செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை ஒரே ஒருவர் மட்டும் பாட்டு கேட்டு ரசித்தது இதுதானே முதல்முறை' என்றார்.

ஆடிப் போனார் ஐயங்கார். 'பெரியவா... நீங்கள் ஒருவர் என் பாடலைக் கேட்டது லட்சம் பேர் கேட்டதற்குச் சமம். இன்று தங்களைத் தரிசித்து பாடும் பாக்கியம் செய்தது பூர்வ ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்' என ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.

* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.

* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.

* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us