Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வீக கதைகள் - 8

தெய்வீக கதைகள் - 8

தெய்வீக கதைகள் - 8

தெய்வீக கதைகள் - 8

ADDED : மே 15, 2025 07:58 AM


Google News
Latest Tamil News
பராசக்தி பட்டபாடு

தேவர்கள் எல்லாம் தேவலோக சபையில் கூடியிருந்தனர். அப்போது இந்திரனுக்கு மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. 'ஆதிபராசக்திக்கு பெரிய அளவில் பூஜை நடத்த வேண்டும்' என நினைத்தான். ''என் பதவிக்கு ஏற்ப நாம் செய்யும் பூஜை விமரிசையாக இருக்க வேண்டும். பூலோகவாசிகளான மனிதர்கள், தவத்தில் ஈடுபடும் முனிவர்கள் நம்மை பார்த்து ஏங்க வேண்டும்” என கர்ஜித்தான் இந்திரன்.

அவனது உத்தரவுப்படி தீர்த்தங்கள் அனைத்தையும் வரவழைக்கும் பணி வருணதேவனிடம் ஒப்படைக்கப்பட்டது. நறுமணம் மிக்க மலர்களை அளிப்பதாக வாயு தெரிவித்தான். பலவிதமான நிவேதனங்களை கொண்டு வருவதாக அக்னி தேவன் கூறினான். ஆடை, ஆபரணங்களைத் தருவதாக கற்பக விருட்சம் கூறியது.

பூஜைக்கு வேண்டிய பாலை தர சம்மதித்தது காமதேனு. பராசக்தியின் பூஜை உலகமே கண்டறியாத திருவிழாவாக அமைய போவதால் தன்னை வானளாவப் பாராட்டிப் புகழ்வார்கள் என எதிர்பார்த்தான் இந்திரன்.

ஆதிபராசக்தியைக் காணச் சென்றான் இந்திரன்.

“ உலகத்திற்கெல்லாம் தாயானவளே... தேவர்கள் சார்பாக உனக்கு பூஜை நடத்த அனுமதியளிக்க வேண்டும்''என்றான். ''எனக்கு அபிஷேகம், ஆராதனை செய்யும் வழக்கம் பூலோகத்தில் இருக்கிறது. அங்கு சிலையாக என்னை வடித்து வழிபடுகிறார்கள். இங்கு என்னை பூஜிக்க முடியுமா?'' எனக் கேட்டாள் பராசக்தி.

“ என்ன அப்படி சொல்கிறீர்கள் தாயே... நாங்கள் செய்யும் பூஜையை நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்'' என தற்பெருமையுடன் கூறினான்.

“சரி! உன் விருப்பம்'' என்றாள் பராசக்தி.

குறிப்பிட்ட நாளில் தேவர்கள் புடைசூழ மேளதாளம் முழங்கியது. இந்திரனின் தலைமையில் ஆடம்பரமாக பூஜை நடந்தது. முடிவில் தேவர்கள் அனைவரும் அவரவர் இருப்பிடத்திற்கு புறப்பட்டனர்.

துர்வாச முனிவர் மட்டும் அங்கிருந்தார். பராசக்தியின் முகத்தைப் பார்த்த அவர், தேவர்கள் நடத்திய பூஜையில் திருப்தி ஏற்படவில்லை என்பதை உணர்ந்தார்.

''தாயே... இந்திரன் நடத்திய பூஜையால்...'' என இழுத்தார் துர்வாசர்.

“பூஜையா... வெற்று ஆடம்பரம் என்று சொல்லும்! இங்கே என் உடம்பைப் பார்'' என வெறுப்புடன் காட்டினாள்.

''இது என்ன சங்கடம்? கொப்புளமாக இருக்கிறதே?” எனக் கேட்டார்.

“உண்மை தான்! ஏழு கடல்கள், நதிகள் என எல்லாவற்றிலும் தேவர்கள் அபிஷேகம் செய்தார்கள். ஆனால் அவர்களின் ஆடம்பரத்தை சகிக்க முடியவில்லை. இந்திரன் செய்த அபிஷேகத்தில் அகங்கார நெருப்பு என்னைச் சுட்டது. அதில் பட்ட பாட்டை சொல்லி மாளாது. அவன் அளித்த மலர்கள், ஆடைகள், ஆபரணங்கள் எல்லாம் ஆணவத்தின் அடையாளங்கள். அதனால் அவர்கள் அளித்த நிவேதனத்தை சுவைக்க முடியவில்லை'' என வருந்தினாள் பராசக்தி.

கலக்கம் அடைந்த முனிவர் “ தாயே! அப்படியானால் கொப்புளங்கள் ஆற வழியில்லையா” எனக் கேட்டார்.

“வைகுண்டம் போவதாக நீங்கள் சொன்னீர்களே... அங்கு போய் வாருங்கள். அப்போது பதில் சொல்கிறேன்'' என்றாள். அவரும் சென்று விட்டு மாலையில் திரும்பினார். என்ன ஆச்சரியம் கொப்புளம் எல்லாம் மறைந்து தாயின் திருமேனி பிரகாசித்தது. அவளின் உடம்பில் அங்கங்கே நீர்த்துளிகள்.

“தாயே'' என கைகள் குவித்து வணங்கினார் துர்வாசர்.

“உடனடியாக பூலோகம் செல்லுங்கள். அங்கே ஏழை பக்தன் ஒருவன் கண்ணீரால் எனக்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான்'' என்றாள்.

துர்வாசர் காண வந்த போது அம்மன் கோயிலில் பக்தன் ஒருவன் கண்ணை மூடியபடி தியானத்தில் இருந்தான். மனதிற்குள், ''பராசக்தித்தாயே! கருணைக்கடலே! எங்கும் நிறைந்தவளே” என பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். பக்தனுடைய உள்ளத்தில் பராசக்தி ஆனந்தக் கூத்தாடும் காட்சி தெரிந்தது. இதைக் கண்ட துர்வாசர் தன்னையும் அறியாமல் பக்தரை வணங்கினார்.

மீண்டும் கைலாயத்தை அடைந்த போது, “பக்தனை பார்த்தாயா?” எனக் கேட்டாள் பராசக்தி. 'அற்புதம்! ஆனந்தம்! இந்திரன் பூஜை செய்த போது திருமேனி வருந்தும்படி கொப்பளம் உண்டானது. ஆனால் என்ன ஆச்சரியம்! ஏழை பக்தரின் அன்பில் உருகி தாங்கள் நடனமாடுவதைக் கண்டு மகிழ்ந்தேன்” என தான் கண்ட அற்புதக் காட்சியை விவரித்தார்.

எளிமையும், அடக்கமும் பக்திக்கு அவசியம் என்பதை உணர்த்த பராசக்தி நடத்திய திருவிளையாடல் இது.

-தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us