Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அப்பா செய்த புண்ணியம்

அப்பா செய்த புண்ணியம்

அப்பா செய்த புண்ணியம்

அப்பா செய்த புண்ணியம்

ADDED : மே 08, 2025 12:33 PM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவருக்கு சேவை செய்தவர் வாரணாசி டி.வி.ராமசந்திர தீட்சிதர். இவரது மகன் சுப்ரமணியம் மகாராஷ்டிர மாநிலம் சதாராவுக்கு அருகிலுள்ள இன்ஜினியரிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றினார். அப்போது சதாராவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார்.

சுவாமிகளைத் தரிசிப்பதற்காக மராட்டியர்கள் சிலருடனும், நண்பர் சுந்தரத்துடனும் புறப்பட்டார் சுப்ரமணியம். முகாமிட்டிருந்த இடத்தை அடைந்த போது மதியமாகி விட்டதால் சுவாமிகள் ஓய்வுக்குச் சென்று விட்டார். அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சுவாமிகள் இருப்பதை அறிந்தனர்.

பள்ளி வளாகத்தில் வேயப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார் மஹாபெரியவர். சுப்ரமணியம் உள்ளிட்ட அனைவரும் மகான் இருந்த இடத்தை நோக்கி நடந்தனர். அவர்கள் வருவதை அறிந்த சுவாமிகள் திரும்பி பார்த்தார். நேருக்கு நேராக மகானைப் பார்த்ததும் சுப்ரமணியம் நெகிழ்ந்து போனார். அப்போது அபூர்வக் காட்சி ஒன்று கண்ணுக்குத்தெரிந்தது.

மஹாபெரியவரின் மார்பில் இருந்து எங்கும் ஒளி வெள்ளம் பரவுவதைக் கண்டார். அந்த ஒளியைத் தாங்க முடியாமல் கண்கள் கூசியது. என்ன ஆச்சரியம் எனில் சுப்ரமணியத்துக்கு மட்டுமே இக்காட்சி தெரிந்தது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்த போது ஜோதிப் பிழம்பாக ஜொலித்தார் சுவாமிகள்.

பரவசத்தில் தான் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்களை சமர்ப்பிக்கவும் மறந்தார். 'என்ன ஆச்சு உங்களுக்கு... உங்களைப் பார்த்தால் பரவசத்தில் ஆழ்ந்தது போல இருக்கிறதே' என தோள்களை உலுக்கிய போது சுய நினைவுக்கு திரும்பினார் சுப்ரமணியம். 'எனக்கு ஒண்ணுமில்லை' என்றார்.

சுவாமிகளை தரிசித்து விட்டு வெளியே வந்த பின்னர், 'என் அப்பா வாரணாசி ராமசந்திர தீட்சிதர் பல ஆண்டாக சுவாமிகளுக்கு சேவை செய்தவர். அவர் செய்த புண்ணியத்தின் பலனை நான் இன்று அனுபவித்தேன்'' என தான் பெற்ற விசேஷ அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். பெற்றோர் சேர்த்து வைத்த புண்ணியம் பிள்ளைகளைத் தானே சேரும்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.

* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us