Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனிதனாக இரு

மனிதனாக இரு

மனிதனாக இரு

மனிதனாக இரு

ADDED : செப் 27, 2024 09:54 AM


Google News
Latest Tamil News
மகாகவி காளிதாசர் வெளியூர் சென்ற போது அவருக்கு தாகம் எடுத்தது. அப்போது பெண் ஒருவர் தண்ணீர் சுமந்தபடி வந்தார்.

''அம்மா கொஞ்சம் தண்ணீர் தரலாமா'' எனக் கேட்டார்.

''தருகிறேன் ஐயா... தாங்கள் யார் எனச் சொல்லவில்லையே'' என்றாள்.

உடனே காளிதாசர் தன்னைப் பற்றி உயர்வாக நினைத்து அவளிடம், ''நான் பயணி'' என்றார். அந்த பெண், ''உலகில் இரண்டு பயணிகள் உள்ளனர். ஒருவர் சந்திரன், மற்றொருவர் சூரியன். இவர்கள் இரவும், பகலும் பயணம் செய்கிறார்கள்'' என்றாள்.

''சரி, என்னை விருந்தினர் என வைத்துக் கொள்ளலாம்'' என்றார் காளிதாசர்.

அதற்கு, ''ஒன்று செல்வம். இரண்டு இளமை. இவை இரண்டுமே நம்மிடம் விருந்தினராக வந்து போகும்'' என்றாள்.

எரிச்சலுடன் காளிதாசர், ''நான் ஒரு பொறுமைசாலி'' என கத்தினார்.

உடனே அவள், ''பூமியும், மரமும் மட்டுமே நாம் எது செய்தாலும் பொறுத்துக்கொள்ளும்'' என்றாள்.

கோபம் அதிகரிக்க, ''நான் ஒரு பிடிவாதக்காரன்'' எனக் கத்தினார். அதற்கும் அவள், ''ஏன் ஐயா கத்துகிறீர்? மெதுவாகப் பேசுங்கள். முடி, நகத்திற்குத்தான் பிடிவாத குணம் உண்டு. எத்தனை முறை வேண்டாம் என வெட்டினாலும் பிடிவாதமாக வளரும்'' என்றாள் சிரித்தபடி.

தாகம் அதிகமாகவே வெறுப்புடன், ''நான் ஒரு முட்டாள்'' என வாயசைத்தார் காளிதாசர். அப்போதும் அவள் விடுவதாக இல்லை. ''உலகில் இரண்டு முட்டாள்கள் உள்ளனர். ஒருவன் நாடாளத் தெரியாத அரசன். மற்றொருவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன்'' என்றாள்.

செய்வதறியாத காளிதாசர் அவளது காலில் விழுந்தார். உடனே, ''மகனே...எழுந்திரு'' என்றாள் அவள். நிமிர்ந்த காளிதாசர் மலைத்துப் போனார்.

பராசக்தி காட்சியளித்தாள். கண்ணீர் பெருக வணங்கினார். ''காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என உணர்கிறானோ அவனே மனிதப் பிறவியின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாக இரு'' என்று கூறி தண்ணீர் குடத்தை கொடுத்து விட்டு மறைந்தாள்.

அவர் தண்ணீர் குடிக்க அது அமிர்தமாக இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us