Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஆண்டாளும் அற்புதங்களும் - 28

ஆண்டாளும் அற்புதங்களும் - 28

ஆண்டாளும் அற்புதங்களும் - 28

ஆண்டாளும் அற்புதங்களும் - 28

ADDED : ஜூன் 09, 2023 08:32 AM


Google News
Latest Tamil News
திருக்கோளூர் பெண்பிள்ளையும் ஆண்டாளும்

திருக்கோளூர் பெண்பிள்ளை என்பவள் யார்? அவளுக்கும் ஆண்டாளுக்கும் என்ன சம்பந்தம் என இந்த கட்டுரையில் சிந்திப்போம். மகான் ராமானுஜரிடம் இப்பெண் கூறிய 81 வாக்கியங்களே 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' எனப்படுகிறது. திருக்கோளூருக்கு என்ன சிறப்பு என்றால் 'வைத்தமாநிதிப் பெருமாள்' என்ற பெயரில் சுவாமி இங்கு எழுந்தருளியுள்ளார். அட, வைத்தமாநிதி பெருமாளா? பெயரே அற்புதமாய் இருக்கிறதே! ஆம்! நிதி என்றால் செல்வம் என்பது பொருள்.

ஒரு சமயம் சிவபெருமானை தரிசிக்க சென்றார் குபேரன். பக்கத்தில் அமர்ந்திருந்த அம்பிகையைப் பார்த்து 'என்ன அழகு!' என அவர் சலனப்பட்டார். உடனே அம்பிகை 'உன்னிடத்தில் செல்வம் இருப்பதால் தானே இப்படி சிந்திக்கிறாய். உனக்கு இனி எந்த நிதியும் கிடையாது' என சொல்ல உடனே ஏழையானார் குபேரன். தவறை உணர்ந்த அவர், 'தாயே என்னை மன்னியுங்கள்' என சரணாகதி அடைந்தார். உடனே அம்பிகை 'நிதி வேண்டுமானால் என் சகோதரனான திருமாலிடம் கேள். நிதி வைத்திருக்கக்கூடிய அவரின் ஊருக்கு செல்' என்றாள்.

நிதியை வைத்திருப்பவர் திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் என்பதை அறிந்தார் குபேரன். அங்கு வந்த அவருக்கு அளந்து அளந்து நிதியை பாத்திரத்தில் கொட்டினார். அப்போது கொஞ்சம் பணம் கீழேயும் சிந்தியது. உடனே குபேரன் ''கீழே சிந்தாமல் கொட்டுங்கள் சுவாமி” என கெஞ்சினார். பெருமாளும் சிரித்தபடி அதன் பின் சிந்தாமல் கொட்டினார். இறுதியாக குபேரன் கையேந்தும் போது கீழே சிந்தியவை மட்டும் உனக்கு. பாத்திரத்தில் உள்ளவை எல்லாம் என் பக்தர்களுக்கு என்றார் பெருமாள். கீழே சிந்தியதே குபேரனிடம் நிதியாக உள்ளது. அந்த பெருமாள் குடியிருக்கும் ஊரே திருக்கோளூர்.

இத்தனை சிறப்பான திருக்கோளூருக்கு ஒருமுறை மகான் ராமானுஜர் வந்தார். ஊருக்குள் காலடி வைக்கும் நேரத்தில் தயிர் விற்கும் பெண் ஒருத்தி மூட்டை முடிச்சுடன் வெளியேறிக் கொண்டிருந்தாள். இருவரும் சந்தித்த அந்த நிமிடம் விலைமதிக்க முடியாத தருணம்.

கருணை உள்ளம் கொண்ட ராமானுஜர் நமக்கென்ன என்று இருக்கவில்லை அவர். தயிர் விற்கும் அவளிடம், ''பெண்ணே... எல்லோரும் புகும் ஊர் உனக்கு போகும் ஊராயிற்றே! இவ்வளவு நல்ல ஊருக்கு வர வேண்டும், வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். நீ மட்டும் இங்கிருந்து செல்லத்தான் வேண்டுமா?” எனக் கேட்டார்.

'' நான் சாதாரணமானவள். நான் எதையும் சாதிக்கவில்லை. நான் எந்த ஊரில் இருந்தால் என்ன சுவாமி? திருமாலின் அடியவர்களைப் போல நான் மகத்தான செயல் ஏதும் செய்யவில்லை” என வருந்தினாள்.

அத்தோடு நில்லாமல் திருமால் அடியார்கள் செய்த 81 அரிய செயல்களை தனக்கு தெரிந்த அளவில் கூறினாள். அவை கவிவடிவம் பெற்று மிளிர்ந்தது. திருத்தலமாகிய திருக்கோளூரில் வசிக்கத் தகுதியற்றவள் எனக் குறிப்பிட்ட அவள், ”முயல் புழுக்கையைப் போல் நான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருக்கிறேன் சுவாமி” என்றாள்.

அவளின் ஞானத்தைக் கண்டு வியந்த ராமானுஜர் அவளுடன் பெருமாள் கோயிலுக்கு சென்றதோடு அவளை 'ஸ்ரீதிருக்கோளூர் பெண்பிள்ளை' எனப் போற்றினார். அதிலுள்ள ரகசியங்கள் மொத்தம் 81. அவற்றில் 11வது வாக்கியமாக 'பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே…' என குறிப்பிடுகிறாள்.

'பிஞ்சிலே பழுத்தால் கனி ருசிக்காது'. வெம்பல் என்று அதற்குப் பெயர். ஆனால் நம் ஆண்டாளோ பிஞ்சிலே பழுத்தாலும் தெவிட்டாத கனி போன்றவள்.

''ஆண்டாளைப் போல் தான் சிறுவயதிலேயே பக்தி பண்ணவில்லையே சுவாமி'' என திருக்கோளூர் பெண்பிள்ளை புலம்புகிறாள். இதன் பொருள் தெரியுமா? பிஞ்சு வயதிலேயே ஆண்டாள் பக்தியில், ஞானத்தில் பழுத்து விட்டிருந்தாளே. அவளைப் போல் நான் கடவுளிடம் பக்தி செய்யவில்லையே என்கிறாள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கல்வியறிவு பெறாத அப்பெண் இவ்வளவு ஆன்மிக பெரியவர்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாளே என்பது தான். அத்தனையையும் ராமானுஜர் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ''அழைத்து வந்தேனோ அக்ரூவரை போலே” என ஆரம்பித்து ”துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே” என அவள் சொல்லி முடித்தாள். ''இத்தனை மகத்தான வாசகங்கள் சொன்ன உன்னைவிட யாருக்கு பெருமை இருந்து விடப் போகிறது.

ஆகவே நீ இந்த ஊரில் இருக்க வேண்டும் அம்மா” என்ற ராமானுஜர் வைத்தமாநிதிப் பெருமாளை தரிசித்து அவள் சமைத்த உணவையும் சாப்பிட்டார்.

ஆண்டாளும் பகவத் கீதையின் சாரத்தை திருப்பாவையில் சுருங்கச் சொல்லி தெளிவுபடுத்துகிறாளே! ஆண்டாளைப் போலவே திருக்கோளூர் பெண்பிள்ளையும் ஒருவரின் வரலாறை ஒரே வரியில் எடுத்துச் சொல்கிறாள். இருவரும் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதிலும் தன்னடக்கத்திலும் இணைந்து நிற்கிறார்கள்.

நாம் குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பதில் காட்டும் ஆர்வத்தை திருப்பாவை படிக்க வைப்பதிலும் காட்டலாம். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரவலாக நடக்கிறது. அது போல ஆண்டாளின் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடத்தினால் சிறப்பாக இருக்கும். இளைய தலைமுறை ஆன்மிகத்துடன் இணைந்து பயிலும் போது கல்விக்கான நோக்கம் முழுமையடையும். இதையே சுவாமி விவேகானந்தரும் சொல்லியிருக்கிறார். இப்படி இளைய தலைமுறையினரையும் அவள் அடியொற்றும்படி தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்... வாருங்கள்!

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us