Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லடி அபிராமி (15) - ஓம் மந்திரத்தின் சிறப்பு

சொல்லடி அபிராமி (15) - ஓம் மந்திரத்தின் சிறப்பு

சொல்லடி அபிராமி (15) - ஓம் மந்திரத்தின் சிறப்பு

சொல்லடி அபிராமி (15) - ஓம் மந்திரத்தின் சிறப்பு

ADDED : ஆக 05, 2016 09:37 AM


Google News
Latest Tamil News
“என்ன இவ்வளவுதானா? இந்த ஓம்காரம் நான் அறியாததா என்ன? இது மிகவும் ஏமாற்றத்தையல்லவா அளித்துவிட்டது!' என்று சலிப்புடன் வித்யாதரன் கூறிக்கொண்டிருந்த போதே, ஆதியோகி குகைக்குள் சென்று மறைந்துவிட்டார்.

வித்யாதரனுக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லை. காட்டில் முனிவர்கள், 'ஆம்... ஈம்... ஊம்' என்றெல்லாம் ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்வதை அவன் பார்த்திருக்கிறான். அப்படியெல்லாமிருக்க இந்த 'ஓம்' என்ற ஒரெழுத்தாலா அம்பிகை வருவாள்? அவனுக்குள் அவநம்பிக்கை மேலிட வனத்துள் அங்குமிங்குமாக பல நாட்கள் அலைந்து திரிந்தான். ஆனால் ஒருநாள் கூட தான் உபதேசமாய்ப் பெற்ற பிரணவ தியானத்தை செய்யவில்லை.

ஒருநாள் நாய்கள் புடைசூழ ஒரு முனிவர் வருவதைக் கண்ட வித்யாதரன் ஓடோடிச் சென்று அவரை வீழ்ந்து வணங்கி, அம்பிகையைக் காண விரும்பும் ஆவலை வெளியிட்டான்.

உடனே அவர், 'ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்' என்ற மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார்.

வித்யாதரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவருக்கு நன்றி கூறிய அவன், ஓர் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து அந்த மந்திரத்தை ஜெபம் செய்யலானான். சில நாட்கள் கழிந்தன. அம்பிகை வரும் அறிகுறி ஏதும் தென்படவில்லை. வித்யாதரனுக்கு சலிப்பு மேலிட்டது. மீண்டும் எழுந்து வனத்துள் அலைந்தான்.

ஒரு நிறைந்த பவுர்ணமி நாளில் வேறு ஒரு முனிவரை எதிரில் கண்டான்.

அவரிடம் வித்யாதரன், 'சுவாமி! அம்பிகையை நேரில் காண வேண்டி திரியட்சரி மந்திர உச்சாடனம் செய்தேன். ஆனால் பலனில்லை. இதைவிட வலிமையான மந்திரம் ஏதும் உள்ளதா?' என்று கேட்டான்.

“மகனே! திரியட்சரி என்பது மூன்றெழுத்து மந்திரம். அதனால் தான் பலனில்லை. எனக்கு ஆறெழுத்து மந்திரம் தெரியும். அதை நீ ஜெபம் செய்தால் உனக்கு அம்பிகையின் தரிசனம் கிடைக்கும்,” என்றார் முனிவர். உடனே அந்த மந்திரத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்ட வித்யாதரன் மீண்டும் தனது முயற்சியைத் தொடர்ந்தான்.

பல நாட்கள் உருண்டன. தேவி வந்தபாடில்லை. தனது ஜெப, தபத்தை நிறுத்திவிட்டு, அதனினும் சக்தி வாய்ந்த மந்திரம் தேடி அலைந்த அவனுக்கு ஒரு ஞானி எட்டெழுத்து மந்திரம் தர, அதையும் ஜெபித்து முயற்சி செய்தான்... பலனில்லை. இப்படியே 12, 15, 16 என பட்டியல் நீண்டதே ஒழிய அம்பிகை வரவில்லை.

சில காலம் கழித்து ரிஷி ஒருவர் அவனுக்கு 'சஹஸ்ர சோடசி' என்ற 16 ஆயிரம் எழுத்துக்களைக் கொண்ட மகாமந்திரத்தை அளித்தார். அது பிரம்ம ரகசியம் என்றும், வேறு எவருக்கும் அதைச் சொன்னால் தலைவெடித்து விடும் என்றும் எச்சரித்து சென்றார். வித்யாதரனுக்கு தனது முயற்சியில் இனி

நிச்சயம் வெற்றி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மேலிட்டது.

சஹஸ்ர சோடசி ஜெபத்தில் பல ஆண்டுகள் கழித்தான். உடல் மெலிந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. இறந்து விடுவோமோ என்ற அச்சம் அவனுக்குள் அதிகரித்தது. மயக்கம் வரும் வேளையில், அவனுக்குள் ஓர் மாற்றம் திடீரென ஏற்பட்டது. கற்ற வித்தைகள் அனைத்தும் மறந்து போயின. அவன் முதன் முதலில் உபதேசம் பெற்ற ஆதியோகி ஒளிரூபத்தில் காட்சி தந்தார்.

“மகனே! ஓம் என்ற பிரணவத்தை சாதாரணமாக எண்ணிய உன் அறியாமையை நீக்க வேண்டி, யாமே பலருடைய வடிவில் வந்து பல்வேறு உபதேசங்களை உமக்களித்தோம். ஒன்றே ஒன்றை நீ புரிந்து கொள்வாயாக. எப்போதுமே நீ எண்களில் முடிவையோ, முழுமையையோ அடைந்துவிட முடியாது. அம்பிகையானவள் 'எண்ணில் ஒன்றுமில்லா வெளியானவள்.' எனவே ஒன்றை நீ அறிந்துகொள்ளும் போது, இன்னொன்று அறியா நிலையில் நிற்கும். அதையும் நீ அறிந்துகொண்டால் மேலும் ஒன்று அறியப்படாததாக எட்டிச் செல்லும். அதற்கு எல்லையே இல்லை. எல்லையற்ற, தேச, காலவரையறைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அந்த அம்பிகை 'ஓம்' என்னும் பிரணவத்துள் அடக்கம். ஓம் காரத்திலிருந்தே அனைத்து பீஜாட்சரங்களும் வெளி வந்தன. எனவே எல்லைகளற்ற அந்த பராசக்தி ஓம் எனும் மந்திரம் ஒலித்திட ஓடோடி வருவாள்,” என்று சொல்லி மறைந்தார்.

வித்யாதரன் கதறி அழுதான்.

கண்ணீர் பீறிட 'ஓம்... ஓம்... ஓம்...' என பிதற்றத் தொடங்கினான்.

மறுகணம் அங்கே பேரொளி தோன்றியது. அம்பிகை புன்னகை தவழ தோன்றினாள்.

வித்யாதரன் தேவியை வீழ்ந்து வணங்கி மோட்ச சாம்ராஜ்யத்தை அடைந்தான். கதையைக் கூறி முடித்த அபிராமபட்டர், மன்னரையும், மக்களையும் பார்த்துக் கூறினார்.

“அன்பர்களே! இது என் கூற்றல்ல. ஆதிசங்கரரே அம்பாளை 'ஓம்கார பஞ்சஜரசுகி' என்று பாடி அழைத்துள்ளார். எனவே வெளி முதற்பூதங்களாகி எல்லையற்ற அந்த அம்பிகை ஓம்காரக்கிளியாக நம் தோள்களில் வந்து அமருகின்றாள். எனவே கிளியே! என்று அடியேன் பாடியதன் உட்பொருள் ஓம்கார வடிவில் அன்னை பிரணவாகா ரூபிணியாகத் திகழ்வதையே!” என்று சொல்லி முடித்தார்.

மன்னரும், மக்களும் 'ஓம்... ஓம்... ஓம்...' என்று மெய்புளகாங்கிதம் அடைந்து ஒலிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து 17ம் பாடலான,

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்

துதிசய வானன சுந்தரவல்லி துணை இரதி

பதிசயமானது அபசயமாக முன்பார்த்தவர் தம்

மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே!”

என்ற பாடிய பட்டர் பொருளைத் தொடர்ந்தார்.

“அதிசயிக்கத்தக்க வடிவமுடைய அம்பிகையின் பேரழகு கண்ட தாமரைகள் எல்லாம் இதுவல்லவோ தாமரை என்று துதி செய்தன. சிவபெருமானின் மீது மன்மதன் அம்பெய்த போது, கோபம்கொண்டு காமனை தகனம் செய்ததைக் கண்ணுற்று வியந்த தேவரும், முனிவரும், மனிதரும் அம்பிகை சிவனாரின் சரீரத்தில் ஒரு பாதியாகவே ஆனது கண்டு மதிமயங்கினர்,” என்றதும், சரபோஜி மன்னர் தாமரைகள் அம்பாளைக் கண்டு வியந்தது பற்றி சில சந்தேகங்களைக் கேட்டார்.

“ஆம் மன்னா, உமது ஐயம் நியாயமானதே! தாமரை மலர்கள் மட்டுமல்ல. உலகில் பூக்கும் மலர்களும், தேவலோக புஷ்பங்களும் அம்பிகையை சதாசர்வ காலமும் துதித்துக்கொண்டுதானே இருக்கின்றன. இங்கு கூறிய தாமரை என்ற உவமை யோக மார்க்கத்தில் கூறப்படும் ஆறு தாமரைகளாகிய ஆதாரச்

சக்கரங்கள் ஆகும். இவை அம்பாளை துதிசெய்ய அதன்மேல் அரியணை போன்ற வித்யா பீடமாகிய சஹஸ்ரார கமலத்தில் அன்னை வீற்றிருக்கிறாள் என்பதே இந்த உவமையின் தாத்பர்யம்.”

அது கேட்டு மகிழ்ந்த மன்னர், “சுவாமி! பாடலின் உட்பொருள் கூறியருள்க!” என்று சொல்ல பட்டர் தொடர்ந்தார்.

“சூரபத்மனை வதைக்க சிவகுமாரனாகிய முருகன் தோன்ற வேண்டிய காலம் வந்தது. சிவபெருமானோ ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்தார். பார்வதிதேவி அவருக்கு பணிவிடைகள் செய்து பாதத்தில் சரணடைந்திருந்தாள். எனவே சிவகுமாரன் தோன்றுவது எங்ஙனம் என்று தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

தேவேந்திரன் சிவபெருமான் மீது காமத்தைத் தூண்டக்கூடிய மலர் அம்பினை எய்து அவரது தவத்தைக் கலைக்கும்படி மன்மதனை வேண்டினான். மன்மதனின் அம்பிடம் தோற்காதவர்களே மூவுலகிலும் இல்லை. எனவே சிவனார் மீது அம்பெய்தான். கோபமுற்ற சிவன் மன்மதனைத் தன் நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கினார். அப்போது அவரது நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட மற்றுமொரு சுடர் ஆறு தாமரைகளில் விழுந்து ஆறுமுகன்

தோன்றினார்.அதன் பின் ரதி தேவியானவள் பார்வதியிடம் ஓடோடி வந்து மாங்கல்யப்பிச்சை கேட்க, சக்தியும் சிவனாரிடம் மன்றாட, சிவபெருமான் மன்மதனை மீண்டும் பிழைத்தெழச் செய்தார். ஆனால் அன்று முதல் மன்மதன் பிறர் கண்களுக்குத் தெரியமாட்டான் என்றும், ரதிதேவியின் கண்களுக்கே தெரிவான் என்றும் ஆயிற்று.

இன்னும் வருவாள்

முனைவர் ஜெகநாத சுவாமி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us