Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : பிப் 24, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
** ராசிக்கும், அதற்குரிய அடையாளத்திற்கும் (மேஷத்திற்கு ஆடு) உள்ள தொடர்பு என்ன?

த.காமராஜ், வெண்கரும்பூர்

பூமியின் எல்லைச் சுற்று 12 பிரிவுகளாக உள்ளது. ஜாதகத்திற்குக் கட்டம் போடுவது போல, இந்தக் கட்டங்களை ஞானிகள் தவ வலிமையால் ஒவ்வொரு அடையாளமாகக் கண்டனர். அவர்கள் பார்த்த அடையாளத்தையே அதன் பெயராக வைத்தனர். அதாவது மேஷம் ஆடு, ரிஷபம் காளை என்பவை யாக. கிரீன்விச் மணி நேரத்தைக் கண்டுபிடித்த ஜான் ப்ளாம்ஸ்டீட் என்னும் விஞ்ஞானி தம் ஆராய்ச்சியில், இந்த ராசி அடையாளங்கள் உண்மையாக இருப்பதை வியந்து பாராட்டி அதை படமாக வரைந்து வைத்துள்ளார். லண்டன் கிரீன் விச் மியூசியத்தில் இன்றும் இதைக் காணலாம்.

* ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி விட்டு,சிலர் அன்றாடம் கோலம் போடுவதில்லையே. இது சரியா?

கே. அகிலா, மதுரை

கோலம் போடுவது என்பது இரு காரணங்களுக்காக. கோலம் என்றால் அழகு என பொருள். நின்ற கோலம், அமர்ந்த கோலம் என்றெல்லாம் சுவாமியை குறிப்பிடுகிறோமே! அது போல... அழகுக்காகப் போடப்படுவது ஒன்று. கோலம் போடப் பயன்படும் அரிசி மாவை எறும்பு, காகம் தின்று பசியாற வேண்டும் என்பது இரண்டாவது. இப்போது வீடுகளில் கோலம் போடுவதே கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம் பளபளக்கும் கற்களில் தரையை போட்டு விடுகிறார்கள். அதனால், ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். வீட்டுக்குள் இப்படி செய்யட்டும். ஆனால், வாசலில் அரிசி மாவுக்கோலம் இடுவதே முறை. எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதே இதன் அடிப்படை.

* எல்லாம் உயிர்கள் தானே. ஆனால், பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறுவது ஏன்?

டி. ஜெயந்தி முகப்பேர்

பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் (சிறுநீர்) ஐந்தும் சேர்ந்தது பஞ்ச கவ்யம். இதைக்கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது வெளிப்படும் ஒளிக் கதிர்கள் நம் உடல், மனநோயைப் போக்க வல்லது என ஞானிகள் அறிந்தனர். சித்தர்கள் இவற்றைக் கொண்டு 'பஞ்ச கவ்ய கிருதம்' என்னும் மருந்தை தயாரித்தனர். இப்போது தயாரித்துள்ள உரத்துக்கு கூட 'பஞ்சகவ்யா' எனப் பெயரிட்டுள்ளனர். பசுவின் தெய்வீக சக்தியை உணர்ந்தே சாஸ்திரங்கள் அதை வழிபடச் சொல்கின்றன. 33 கோடி தேவர்களும் அதன் உடலில் இருக்கின்றனர். அதன் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது திரையிட்டு விடுகிறார்களே! ஏன்?

வி.தீட்சணா, திருவான்மியூர்

சுவாமி நைவேத்யத்திற்கு மந்திரான்னம் என்று பெயர். ரகசியமாக நிவேதிக்க வேண்டும் என்பது பொருள். அர்ச்சகர், பரிசாரகர் (சமைப்பவர்) இவர்களைத் தவிர மற்றவர் இதைப் பார்ப்பது, நுகர்வது போன்றவை கூட தோஷம் தரும்என்பதால் திரையிடுகிறார்கள்.

முன்னோர் சாபத்தால் மிகவும் சிரமப்படுகிறேன். பரிகாரம் ஏதாவது கூறுங்கள்.

ஆர். சிவசுப்பிரமணியம், உடுமலைப்பேட்டை

இதற்கென சிறப்பு திதி கொடுக்கும் முறை உள்ளது. கங்கையில் நீராடி காசியில் முறையான திதி கொடுக்கலாம். பிறகு கயாவிலும் இது போல செய்ய வேண்டும். இதன் மூலம் முன்னோர் சாபம் நீங்கும். இயலாத பட்சத்தில் ராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்யலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us