Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : நவ 19, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
**'ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்' என்று திருமூலர் பாடக் காரணம் என்ன?

சுப.ராமு, தேவகோட்டை

ஈசனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என தவறாகப் பொருள் கூறி வருகிறார்கள் சிலர். 'ஈசனோடு' என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். சுவாமியோடு இருப்பதாகிய கயிலைப் பதவி கிடைத்தும் கூட சிலர் உலக விஷயங்களில் ஆசை கொண்டு விடுகிறார்கள். (உலக ஆசை அவ்வளவு வலியது) இதனால், கயிலைப் பதவியை இழந்து மீண்டும் பூமியில் பிறப்பதாகிய இன்னலுக்கு ஆளாகிறார்கள். சிவனின் அணுக்கத் தொண்டராக இருந்த சுந்தரர், உமாதேவியின் தோழிகள் மீது ஆசை கொண்டதால் தான் பூமியில் பிறக்க நேரிட்டது. ஈசனோடு இருந்தாலும் ஆசை ஏற்பட்டால் பிறவித் துன்பம் ஏற்பட்டு விடும் என்பதை வலியுறுத்தவே திருமூலர் இவ்வாறு கூறியுள்ளார். உலக விஷயங்களை வெறுத்து ஆசையை அறுத்து துறவிகளாக மாறுபவர்களும் மனதளவில் இறைவனோடு ஒன்றியிருப்பதாகத் தான் பொருள். ஆனால், இவர்களில் சிலர் கூட கீழ்த்தரமான ஆசை கொண்டு நெறி தவறி விடுவதால் துன்பத்துக்கு ஆளாவதைத் தான் அடிக்கடி படிக்கிறோமே? இது போன்றவர்களை எச்சரிக்கவும் தான் திருமூலர், ''ஆசை அறுமின்காள்! ஆசையை அறுமின்காள் ! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்!'' என்று அற்புதமாகப் பாடியுள்ளார்.

* மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் இருப்பதன் காரணம் என்ன?

க.முகிலன், வாடிப்பட்டி

சிவாலயங்களில் அம்மன் சந்நிதி அமைப்பதை மூன்று விதமாக சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. மகா மண்டபத்தின் மேற்குப் புறத்தில் தெற்கு நோக்கி அம்மனை பிரதிஷ்டை செய்வது பொதுவான விஷயம். அநேகமான கோயில்களில் இப்படித்தான் செய்திருப்பார்கள். இதற்கு வீரசக்தி அமைப்பு என்று பெயர். சுவாமியும், அம்மனும் ஒரே திசை நோக்கியடி அமைப்பதில் ஒரு சில கோயில்களில் சுவாமிக்கு வலப்புறமும், சில கோயில்களில் இடப்புறமும் சந்நிதி அமைந்திருக்கும். வலப்புறம் இருப்பதை கல்யாணக் கோலம் என்றும், இடப்புறம் இருப்பதை அர்த்தநாரீஸ்வர அமைப்பு என்றும் கூறுவர்.

* கோபுரத்தில் இருக்கும் கலசங்களின் நோக்கம் என்ன?

மகா, திருப்பூர்

கோபுர கலசங்கள் தெய்வ சக்தியை இழுத்து கோயிலுக்குள்ளேயே செலுத்தும் ஆற்றல் படைத்தவை. 'ஆண்டனா' எப்படி ஆற்றலை இழுக்கிறதோ அதுபோல, ஆன்மிக ரீதியாக நிகழும் ஒரு அற்புதம் தான் கோபுர கலசத்தின் வழியாக தெய்வீக சக்தி கருவறையில் இருக்கும் விக்ரகங்களை ஒளி பெறச் செய்கிறது. கலசங்கள், அதனுள் இடப்படும் வரகு தானியம், உச்சரிக்கப்படும் மந்திரங்கள் இவை மூன்றும் இணைவதால் ஏற்படும் வேதியல் உருவாக்கத்தால் கோயிலிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடி விழாமல் தடுக்கப்படுகிறது. நமது சாஸ்திரத்தில் கூறியுள்ள இந்த விஷயங்களை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

என் மகள் மூலநட்சத்திரம். பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க் பெற்றவள். ஆனால், தற்போது அதிகம் தூங்குவதால் சரிவரப் படிக்க முடியாமல் தவிக்கிறாள். பரிகாரம் சொல்லுங்கள்.

செண்பகவள்ளி, கோவில்பட்டி

நட்சத்திர, ராசி ரீதியாக பெரிய பிரச்னை ஏதுமில்லை. புதன்கிழமை தோறும் லட்சுமி நாராயணருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். மீண்டும் உங்கள் மகள் நன்றாகப் படிக்கத் துவங்கி விடுவார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us