Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஆக 04, 2023 11:52 AM


Google News
Latest Tamil News
கே.ராஜன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

* பிரதோஷ வகைகள் பற்றி சொல்லுங்கள்?

தினமும் மாலையில் நித்ய பிரதோஷம்.

வளர்பிறை திரயோதசி அன்று பட்ச பிரதோஷம்.

தேய்பிறை திரயோதசி அன்று மாத பிரதோஷம்.

தேய்பிறை திரயோதசி, சனிக்கிழமை சேர்ந்து வந்தால் மகா பிரதோஷம்.

ஊழிக்காலம் எனப்படும் யுகத்தின் முடிவில் வருவது பிரளய பிரதோஷம். இதை நாம் காண முடியாது. இதில் சிறப்பானது மகா பிரதோஷம்.

வி.கண்ணன், வில்லுக்குறி, கன்னியாகுமரி.

*சைவத்தில் சிவபுராணம் போல வைணவத்தில் பாடல் ஏதும் உள்ளதா?

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்பவரின் கனவில் ஏழுமலையான் தோன்றி, 'திருவேங்கட மாலை' என்னும் நுாலை பாடச் செய்தார். இது சிவபுராணத்திற்கு இணையானது.

பி.ரமணி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

*அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்துவது ஏன்?

அனுமனுக்கு பிடித்தது வெண்ணெய். அதனால் வெண்ணெய் காப்பு சாத்துகிறோம். நினைத்தது நிறைவேற இதைச் செய்வர்.

சி.நாகேந்திரன், பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*காலையில் எழுந்ததும் ஆடும் மயிலைக் கண்டால்...

நல்ல சகுனம். அன்றைய பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவம் மயில்.

ஆர்.சிதம்பரம், வாஸ்காஸ், டில்லி.

*வள்ளலார் திருமுறை பாடல்கள் பாடியிருக்கிறாரா...

திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்கள் பாடியவை திருமுறை பாடல்கள். அவர்களைப் பின்பற்றி வள்ளலார் பாடிய பாடல்களுக்கு 'திருவருட்பா' என்று பெயர். இதில் ஆறு திருமுறைகள் உள்ளன.

கே.மோகனா, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*துளசியும் வில்வமும் என் வீட்டில் சேர்ந்தே வளர்கிறது. பிரித்து நடலாமா?

இடம் இருந்தால் பிரித்து நடுங்கள். துளசி, வில்வம் வீட்டில் வளர்வது நல்லது.

கே.கமலா, மடிக்கேரி, மைசூரு.

*நெல் அளக்கும் மரக்காலை தலையணையாக வைத்தபடி பெருமாள் எங்கிருக்கிறார்?

மரக்காலைத் தலையணையாக வைத்தபடி சயனக் கோலத்தில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் கீழ்த்திருப்பதியில் இருக்கிறார்.

ஜி.அசோக், ராதாபுரம், திருநெல்வேலி.

*உயிர், ஆன்மா இரண்டும் ஒன்றா?

இரண்டும் ஒன்றே. ஆன்மாவில் இருந்தே 'ஆன்மிகம்' என்ற சொல் உருவானது.

எம்.அம்பலவாணன், கள்ளிக்குடி, மதுரை.

*வாஸ்து சாஸ்திரம் தற்காலத்திற்கும் பொருந்துமா?

எந்தக் காலத்திற்கும் வாஸ்து சாஸ்திரம் பொருந்தும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us