Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மந்திரமாவது திருநீறு

மந்திரமாவது திருநீறு

மந்திரமாவது திருநீறு

மந்திரமாவது திருநீறு

ADDED : ஜூன் 21, 2024 01:57 PM


Google News
Latest Tamil News
மதுரையை ஆட்சி செய்த மன்னர் கூன்பாண்டியன். இவருக்கு வெப்பு நோய் வந்த போது பதிகம் பாடி திருநீறு பூசச் செய்து குணப்படுத்தினார் திருஞானசம்பந்தர். இதை தினமும் பாடி திருநீறு பூசினால் தீராத நோயும் தீரும்.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு

பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறு

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு

தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு

அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு

ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்

கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு

அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us