Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/தைரியம் தருகிறார் தாவீது ராஜா

தைரியம் தருகிறார் தாவீது ராஜா

தைரியம் தருகிறார் தாவீது ராஜா

தைரியம் தருகிறார் தாவீது ராஜா

ADDED : ஜூலை 02, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
பைபிளில் தாவீதுராஜா என்பவரைப் பற்றி படித்திருப்பீர்கள். அவரது வரலாற்றில் மனிதர்களுக்கு நன்னடத்தையையும் தைரியத்தையும் தரும் பல சம்பவங்கள் உள்ளன.

இவர் இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்தவர். சிறுவனாய் இருந்த போது, தன் தந்தை தனக்களித்த ஆடுகளை மேய்த்தார். ஆடுகளை மேயவிட்ட பிறகு, தன் கையில் இருக்கும் ஒரு இசைக்கருவியை மீட்டியபடி, இனிமையாகப் பாடுவார். இஸ்ரவேல் நாட்டின் மன்னன் சவுல், தாவீதுராஜாவை அடிக்கடி வரவழைத்து பாடல்களை கேட்பார்.

இச்சமயத்தில் பெலிஸ்திய இனத்தவர், இஸ்ரவேல் மீது போர் தொடுத்தனர். அவர்களில் கோலியாத் என்ற பலசாலியைக் கண்டு இஸ்ரவேலர்கள் நடுங்கினர். அவன், 'இரு நாடுகளின் வீரர்களும் மோத வேண்டாம் என்றும், தன்னுடன் மட்டும் மோதி யாராவது ஜெயித்து விட்டால், தங்கள் நாடே இஸ்ரவேலர்களுக்கு அடிமை,'' என்றும் சவால்விட்டான். பயந்திருந்த இஸ்ரவேலர்கள் யாரும் முன்வரவில்லை.

தாவீதுவின் சகோதரர்கள் இருவர் ராணுவத்தில் பணியில் இருந்தனர். அவர்களுக்கு உணவளிக்க தாவீது ஒருநாள் சென்றான். அப்போதும் கோலியாத் அதே போல சவால் விட்டான்.

தாவீதுக்கு கேவலமாகப் போய்விட்டது.

''ஒரு தனிமனிதனுக்கு அஞ்சி ஒரு படையே ஓடுகிறது என்றால் இதை விட நான் பிறந்த நாட்டுக்கு என்ன அவமானம் வேண்டும்?'' என மனதில் சிந்தித்தவனாய், நேரே அரசர் சவுலிடம் ஓடினான்.

''மன்னா! கோலியாத்தை எதிர்க்க எனக்கு அனுமதி தாருங்கள்,'' என்றான். மன்னர் சிரித்தார்.

''தாவீது, நீ சிறுவன். உனக்கு போர்வித்தைகளும் தெரியாது. என்னாலேயே கோலியாத்தை வெல்ல முடியாது. அப்படியிருக்க நீ என்ன செய்ய முடியும்?'' என்றார்.

தாவீது அவருடன் வாதாடினான். முடிவில், கோலியாத்துடன் போரிட அனுமதி பெற்றான்.

ஆண்டவரை வணங்கிய பின், கோலியாத்திடம் சென்ற தாவீது, சண்டைக்கு அழைத்தான்.

கோலியாத் கடகடவென நகைத்தான்.

''சிறுவா! விளையாடுகிறாயா? போ..போ.. ஓடிவிடு,'' என்றான் சாதாரணமாக.

தாவீது சற்று தள்ளிச்சென்றான். ஒரு கவண்கல்லை எடுத்து கோலியாத்தின் நெற்றியில் குறி வைத்து எய்தான். கோலியாத் அலறிபடி கீழே சாய்ந்தான்.

நெற்றிப்பொட்டில் உயிர் ஸ்தானத்தைக் கணித்து அடித்த அவனது அடியிலிருந்து கோலியாத் தப்ப முடியவில்லை. மயக்கமடைந்து விழுந்தான். உடனே தாவீது தன்னிடமிருந்த வாளால் அவனது தலையைச் சீவிவிட்டான்.

தாவீதின் வீரச்செயல் கண்டு மன்னன் மகிழ்ந்து, சேனைத்தலைவர் பதவியைக் கொடுத்தான். மேலும் தன் மூத்த மகளைக் கட்டித் தருவதாக வாக்களித்தான். ஆனால், தன்னை விட தாவீது புகழ் பெறுவதை அரசன் விரும்பவில்லை. மகளை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டான். தட்டிக் கேட்ட தாவீதிடம் நூறு பெலிஸ்தியர்களைக் கொன்றால் இரண்டாவது மகளைக் கட்டி வைப்பதாக கூறினான். தாவீது அதையும் செய்து முடிக்கவே, இரண்டாம் மகளை திருமணம் செய்து வைத்தான்.

இருப்பினும் பொறாமை மேலும் தலைதூக்க, தாவீதுவைக் கொல்ல முடிவெடுத்தான்.

அவனை விரட்டிச் சென்ற போது, பெலிஸ்தியர்கள் சமயம் பார்த்து இஸ்ரவேலில் புகுந்து மன்னனின் மகனைக் கொன்று விட்டனர். மனமுடைந்த மன்னன் சவுலும் தற்கொலை செய்து கொண்டான்.

இதன்பின்னர் தாவீதுவே நாட்டின் அரசன் ஆனான். தன் மகன் சாலமன் மூலமாக, ஜெருசலேமில் ஆலயம் ஒன்றையும் நிறுவினான்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us