Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/எச்சரிக்கை காதில் விழுகிறதா!

எச்சரிக்கை காதில் விழுகிறதா!

எச்சரிக்கை காதில் விழுகிறதா!

எச்சரிக்கை காதில் விழுகிறதா!

ADDED : பிப் 03, 2015 11:46 AM


Google News
Latest Tamil News
ரோமப் பேரரசின் மன்னன் ஜூலியஸ் சீசர் தன்னுடைய ரதத்தில் ஏறிப் புறப்படப் போகும் வேளையில் 'அவசரம்' என்று குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்று அவர் கையில் கொடுக்கப்பட்டது. அவரைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருப்பதன் தகவல் அடங்கிய செய்தி தான் அது. ஆனால், அதைத் திறந்து படிக்கக் கூட நேரம் இல்லாததால் அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டு புறப்பட்டார். ரதத்தை விட்டு இறங்கியதும் தன் நெருங்கிய நண்பனின் கூரிய கத்திக்கு பலியானார். திறக்கப்படாத கடிதம் அவரது இடுப்பிலேயே அப்போதும் இருந்தது. எச்சரிக்கை செய்தும் அதை அசட்டை செய்த ஒரு மாமன்னரின் பரிதாப நிலையை உங்களால் உணர முடிகிறதா?

ஆம்! இதைப் போல தேவன் தம்முடைய வேதாகமத்தின் (பைபிள்) மூலம் பல முக்கியமான இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு உணர்ந்தால் நாம் பாக்கியம் பெறுவது உறுதி.

நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை: ''நியாயத்திலே முகத்தாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவி கொடுப்பது போலச் சிறியவனுக்கும் செவி கொடுக்கக் கடவீர்கள். மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக(பயப்படாதிருங்கள்). நியாயத் தீர்ப்பு தேவனுடையது'' (உபாகமம்.1:17)

ராணுவ வீரர்கள், காவலர்களுக்கு எச்சரிக்கை: ''நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்(துன்பம்) செய்யாமலும், பொய்யாய்க் குற்றம் சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்'' (லூக்கா.3:14)

பணியாளர்கள், வரிவசூலிப்பவர்களுக்கு எச்சரிக்கை: ''நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே'' (நீதிமொழிகள்.3:27) மேலும், ''உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதீர்கள்''(லூக்கா.3:12)

மதுபானம் குடிப்போருக்கு எச்சரிக்கை: ''சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப் போமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!'' (ஏசாயா.4:11)

இப்படி ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவன் நமது வேதத்தின் மூலம் கொடுத்திருக்கிற இந்த எச்சரிப்புகளைக் கேட்டும், வாசித்தும், உணராமல் போனால் நம்முடைய நிலைமை பரிதாபமாகி விடும். எச்சரிக்கை மணி போன்ற இந்த வசனங்களைக் கேட்டு விழித்துக் கொள்வோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us