Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/துரோகிகளுக்கு நன்மை அளிப்பவர்

துரோகிகளுக்கு நன்மை அளிப்பவர்

துரோகிகளுக்கு நன்மை அளிப்பவர்

துரோகிகளுக்கு நன்மை அளிப்பவர்

ADDED : ஏப் 29, 2013 01:52 PM


Google News
Latest Tamil News
விசாரணைக்கு உட்படுத்தாமலே சிறையில் அடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சோவியத் அரசு, போரிஸ் கார்ன்பீல்டு என்ற மருத்துவரை சிறையில் அடைத்தது. இவர் ஒரு யூதர். ஆனால் நாத்திகர். யூதவம்சத்தில் பிறந்த இயேசுகிறிஸ்துவை அவர் அறிந்திருந்தார். ஆனால், அவரை தனது ரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சிறை வாழ்க்கை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

முன்பு அவர் கேட்டிருந்த தேவனின் வார்த்தைகள் அவர் மனதில் நிழலாடின. அந்த வார்த்தைகள் கிரியை செய்ய ஆரம்பித்தன. அவர் பக்தியுள்ள கிறிஸ்தவராக மாறிவிட்டார். சிறை மருத்துவராக அவரை அதிகாரிகள் பயன்படுத்தினர். சில தீய காரியங்களைச் செய்யும்படி அவரைத் தூண்டினர். ஆனால், அவர் அவற்றை செய்ய மறுத்துவிட்டார்.

ஒருமுறை, மற்றொரு சிறையில் இருந்து, புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த ஒரு இளம் கைதியை அங்கே கொண்டு வந்தனர். கார்ன்பீல்டு அவனை அன்புடன் கவனித்துக் கொண்டார். அவன் வந்த அன்று இரவில், தான் ஏற்றுக்கொண்ட இயேசு, தனது வாழ்க்கையில் செய்த அற்புதங்களைப் பற்றி அவனிடம் பேசினார். அந்த இளைஞனும் ஒரு யூதன். உயர்கல்வி பெற்றவன். அவர் கூறியதை அவனால் நம்ப முடியவில்லை. இருப்பினும், தனது சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அப்படியே தூங்கி விட்டான்.

மறுநாள், அந்த இளைஞன் சிறை அதிகாரிகளிடம், ''நான் அந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்,'' என கோரிக்கை வைத்தான்.

''யார்...டாக்டர் போரிஸா! அவர் நேற்றிரவே கொலை செய்யப்பட்டு விட்டாரே!'' என்று பதில் வந்தது.

''ஆகா...மனித வாழ்வு இந்தளவு நிலையற்றதா! நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தவர் இன்று இல்லை! உண்மை...அவர் சொன்ன நித்திய வாழ்வு தான் மேலானதா?

வியாதியுடன் போராடியபடியே, அவன் டாக்டர் போரிசுடன் பேசியது குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். தனக்கு ஆறுதல் அளித்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டதென்றால் உயிரின் விலை தான் என்ன? அப்படியானால் அவர் இயேசு மீது கொண்டிருந்த விசுவாசம் எத்தகையது? அவன், இயேசுவை தனது ரட்சகராக ஏற்றுக்கொள்ளும் வரை இந்தக் கேள்வி அவனை விடவில்லை.

அந்த இளைஞர் தான், பிற்காலத்தில் நோபல் பரிசுபெற்ற ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஸினிட்சின். சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராக அவர் தன் நண்பருக்கு எழுதிய கடிதம், அதிகாரிகளின் பார்வையில் பட்டுவிட்டது. இதன் காரணமாக அவர் சிறையில் 8 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். சிறைவாழ்வு புற்றுநோயைத் தந்தது. அந்த சமயத்தில் தான் டாக்டரைச் சந்தித்தார்.

சிறையிலிருந்து விடுதலையாகும் போது அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார். பைபிளில்,''அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே!'' (லூக்6:35) என்ற வசனம் இருக்கிறது. இந்த வசனம் எவ்வளவு உண்மையானது என்பதை இவர்களது வாழ்க்கை நமக்கு புரிய வைக்கிறது.

தேவனின் வார்த்தை இதழிலிருந்து...




      Our Apps Available On




      Dinamalar

      Follow us