Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/சிரமப்படுபவர்களுக்கு உதவுவோம்

சிரமப்படுபவர்களுக்கு உதவுவோம்

சிரமப்படுபவர்களுக்கு உதவுவோம்

சிரமப்படுபவர்களுக்கு உதவுவோம்

ADDED : செப் 24, 2010 09:38 AM


Google News
Latest Tamil News
இன்று உலகில் எத்தனையோ பேர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.  அவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்வதுடன் உதவியும் செய்வது ஒவ்வொருவரின் கடமை.

ஒரு இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றான். தான்  சம்பாதித்த பணத்திற்கு தங்கக்கட்டிகளாக வாங்கினான். அவற்றை தன் இடுப்பில் ஒரு கச்சை கட்டி பத்திரப்படுத்திக் கொண்டான். கப்பலில், தாய்நாட்டுக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். தன் சகோதரி தன்னிடம் கேட்ட நகைகளையெல்லாம், இந்த கட்டிகளை உருக்கிச் செய்ய வேண்டும். தன் தந்தையின் ஆசைக்கனவான சொந்த வீடு வாங்க சில கட்டிகளை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். தன் தாய் கேட்ட பட்டுப்புடவைகள், அணிகலன்களையெல்லாம் வாங்கித்தர வேண்டும் என்ற கனவுடன் வந்து கொண்டிருந்தான். நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன! ஓரிடத்தில், கடும் புயல் வீசியது. கப்பல் தடுமாறியது. ஏதோ ஒரு பாறையில் முட்டி நொறுங்கியது. கப்பலில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்தனர். பலர் மூழ்க ஆரம்பித்தனர். இளைஞனுக்கு நீச்சல் தெரியும். நீந்த ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஒரு சிறுமி, மூழ்குவதும் எழுவதுமாக உயிர் விடும் நிலையில் இருந்தாள். அவளைக் காப்பாற்ற வேண்டுமென்று உள்ளம் துடித்தது. இடுப்பில், இவன்  வைத்திருந்த தங்கக்கட்டிகளின் பாரம் இவனை உள்ளே இழுத்தது. சிரமப்பட்டு தன்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்த நிலையில், சிறுமியின் துடிப்பு இவனை ஈர்த்தது. அவன், சில கட்டிகளை எடுத்து தண்ணீருக்குள் விட்டுவிட்டு சிறுமியை நோக்கி நீந்த ஆரம்பித்தான். முடியவில்லை. பாரத்தை இன்னும் கொஞ்சம் இறக்கினால் நல்லது என்று நினைத்தவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கடலுக்குள் போட்டான். சிறுமியைக் காப்பாற்றி, உடைந்த கப்பலின் ஒரு மரத்துண்டைப் பிடித்துக் கொண்டு, அவளையும் ஒரு  வழியாக சேர்த்து இழுத்துக்கொண்டு ஏதோ ஒரு இடத்தில் கரை சேர்ந்தான். அங்கிருந்தவர்களின் உதவியோடு சொந்தநாடு போய் சேர்ந்தான்.தங்கத்தை இழந்தாலும், அதில் இருந்து தன் குடும்பத்திற்கு கிடைக்கும் சந்தோஷத்தை விட, ஒரு உயிரைக் காப்பாற்றியதற்காக மகிழ்ந்தான். கர்த்தரும் இப்படியே நம்மை பாவங்களில் இருந்து மீட்டார். நமது துன்பங்களை அவர் ஏற்றுக் கொண்டார்.

''மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது'' (லுக்.15:10) என்ற  வசனம் இந்த இடத்தில் பொருந்துவதாக இருக்கிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us