Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

ADDED : அக் 22, 2010 10:07 PM


Google News
யோபு கடவுளுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். ஏராளமான பொருள் வைத்திருந்த அவருக்கு ஏழு  மகன்களும், மூன்று மகள்களும் இருந்தனர். சாத்தான் யோபின் மீது கவனம் வைத்தான். ஒருமுறையாவது கடவுளைத் தூஷிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டான். கடவுளிடம் நேரில் சென்று, ''ஆண்டவரே! யோபுவைச் சோதிக்க எனக்கு அனுமதி தர வேண்டும்,'' என்று கேட்டான். ''அவனுக்கு தனிப்பட்ட வகையில் துன்பம் தராமல், உடமைகளை மட்டும் அழித்து விடு,'' என அனுமதியளித்தார். சாத்தான் மகிழ்வுடன் யோபுவனின் உடமைகளான ஆடு, மாடு, ஒட்டகம், பயிர்களை அழித்தான். அவனது வேலையாட்கள் கொல்லப்பட்டனர். வீடு இடிந்து பத்து பிள்ளைகளும்  இறந்தார்கள்.

யோபு கதறினான். தன்னிடமிருந்த ஒரே சால்வையையும் கிழித்துவிட்டு,''என் தாயில் கர்ப்பத்தில் இருந்து வந்தேன். நிர்வாணியாய் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். அவர் நாமத்திற்கு  ஸ்தோத்திரம்,'' என்று மட்டும் சொன்னான். கடவுளைக் குறை கூறவே இல்லை. இருந்தும், சாத்தான் அவனை விடவில்லை. யோபுவின் உடலுக்கும் துன்பம் தர ஆண்டவரிடம் அனுமதி பெற்றான். 'உயிரை மட்டும் எடுக்கக்கூடாது' என்ற நிபந்தனை விதித்தார் கடவுள். யோபுவின் உடலில் கட்டிகள் தோன்றின. அவனால் வேதனை தாங்க முடியவில்லை. யோபுவின் மனைவி,''நீர் இன்னும்  உத்தமத்திலே  உறுதியாய் நிற்கிறீரோ? கடவுளைத் தூஷித்து உயிரை விடும்,'' என்றாள். யோபுவின் நண்பர்கள் அவனிடம்,''நீ கடவுளுக்கு எதிராக ஏதேனும் பாவம் செய்தாயோ?'' என்றனர்.

யோபுவோ,'' நான் எக்குற்றமும் செய்யவில்லை. கடவுள் என்னிடம் பேசினால் தான் அதை விளக்க முடியும்,'' என்றான். இதையடுத்து கடவுள் அவனிடம் பேசினார்.

''நான் உலகத்தைப் படைக்கும் போது நீ எங்கிருந்தாய்? உனக்கு நான் படைத்த  பறவைகளையும் மிருகங்களையும் பற்றி தெரியுமா?'' என்றார். யோபு கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதன் என்பதால் பதில் ஏதும் சொல்லவில்லை. 'எல்லாவற்றிலும் கடவுள் செய்வதே சரி' என்று ஒப்புக் கொள்ளும் ஞானத்தை கடவுள்  அவனுக்கு அளித்தார். சோதனைகளைப் பொறுத்துக்கொண்ட அவனுக்கு கடவுள் இரட்டிப்பு ஆசிர்வாதத்தை அளித்தார். அவனுக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தார்கள். இதன்பிறகு யோபு 140 வயது வரை வாழ்ந்து நான்கு தலைமுறை பேரப்பிள்ளைகளைக் கண்டான். பூரண வயதுள்ளவராய் வாழ்ந்து மரித்தார். கடவுள் எவ்வளவு சோதனை கொடுத்தாலும் அவரை தூஷிக்கக்கூடாது. அவர்களுக்கு நீண்ட ஆயுளும், இழந்த செல்வமும் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us