Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/வேண்டாத உறவை விலக்குங்கள்

வேண்டாத உறவை விலக்குங்கள்

வேண்டாத உறவை விலக்குங்கள்

வேண்டாத உறவை விலக்குங்கள்

ADDED : ஆக 02, 2010 11:28 AM


Google News
Latest Tamil News
வடை விற்கும் வியாபாரி ஒருவருக்கு அவ்வூரிலுள்ள குரங்கு ஒன்று இடைஞ்சல் தந்து கொண்டே இருந்தது. அவர் தலையில் வடைக்கூடையைச் சுமந்தபடி தெருக்களில் கூவி விற்பார். அவர் வரும் வழியிலுள்ள மரத்தில் தங்கியிருந்த குரங்குகள் வேகமாக இறங்கி வந்து கூடையைத் தள்ளிவிட்டு சில வடைகளை எடுத்துச் சென்று விடும். அவர் கீழே விழுந்ததைப் பொறுக்கி மணலை ஊதிவிட்டு விற்பனை செய்வார். இதையறியாமல் வாங்கிச் சாப்பிடும் மக்கள், 'மணலாக இருக்கிறதே' என்று புகார் செய்ய ஆரம்பித்தார்கள். விற்பனை சரிய ஆரம்பித்தது.

விற்பனையை உயர்த்த வேண்டுமானால் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரி முடிவு செய்துவிட்டார். ஒருநாள், கூடைக்குள் இரும்புத்தகடு ஒன்றை வைத்து அதன்மேல் தீக்கங்குகளை பரப்பினார். அதைத் தலையில் சுமந்து கொண்டு வந்தார். குரங்குகளும் வழக்கம் போல் பாய்ந்து தீக்கங்குகளுக்குள் கையை விட்டன. அவ்வளவுதான்! அலறிக் கொண்டு ஓடிவிட்டன.

மறுநாள் வியாபாரி வடைகளுடன் வந்தார். குரங்குகள் அவரைக் கண்டதுமே ஓட ஆரம்பித்து விட்டன. ஒருவழியாக மக்களிடம் நடந்ததைச் சொல்லி, மீண்டும் தன்விற்பனையைப் பெருக்கிக் கொண்டார் வியாபாரி.

நமது கண்களும் உள்ளமும் குரங்கு தான். பாவங்களைச் செய்யச் செய்ய அது விடமுடியாத பழக்கமாகி விடும். முடிவில் அக்கினிக் கடலுக்குள் அது நம்மை இழுத்துச் சென்று விடும். அவ்வாறு செல்லாத வகையில், அப்பொழுதே அவற்றைத் தீர்மானத்துடன் அப்புறப்படுத்த வேண்டும்.

''உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு,'' (மத்.5:29) என்கிறது பைபிள். பாவங்களை அப்புறப்படுத்துவதில் நாம் எவ்வளவு உறுதியோடு இருக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்கு போதித்திருக்கிறார்.

''பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் ரத்தஞ் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே,'' (எபி.12:4)என்கிறார் அவர். கெட்ட சகவாசங்களை, வேண்டாத உறவுகளை, கெட்ட சிந்தனைகளை உறுதியோடு வெட்டி எறியுங்கள். இதனால், நமக்கு இப்போது துன்பம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. நித்தியத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்.

''எல்லாக் காவலோடும், உன் இருதயத்தைக் காத்துக் கொள். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி உதடுகளின் மாறுபாட்டை உனக்கு தூரப்படுத்து,'' (நீதி.5:23,24) என்ற வசனப்படி நடந்து கொள்வது பாவம் செய்வதில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us